Friday, February 18, 2022

திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல்

 திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல் 


கிண்டல் செய்வது, நையாண்டி, நக்கல், இதெல்லாம் ஒரு சிறந்த பேச்சாற்றல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. 


ஒருவரை கிண்டல் செய்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவரும் சேர்ந்து சிரித்து விட்டுப் போவார். ஆனால், உள்ளே அவர் மனம் வாடும். வலி இருக்கும். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். 


நக்கல், நையாண்டி எல்லாம் அதே மாதிரித்தான். 


சில சமயம், முன் இருந்த கோபம் காரணமாக நல்லதே சொன்னாலும், அதில் ஒரு குதர்க்கம் வந்து விடலாம். 


"நல்லா படிச்சா நல்லா இருக்கலாம்...நீ எங்க படிக்கப் போற ..." என்று சொல்லும் போது, முதலில் சொன்ன இனிய சொல் பின்னால் வந்த சொல்லால் அடி பட்டுப் போய் விடுகிறது. 


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


என்ன ஆனாலும் சரி, ஒருவரை சிறுமைப் படுத்தும் சொல், இழிவான சொல், புண் படுத்தும் சொல் இவற்றை ஒரு போதும் சொல்லக் கூடாது. அப்படி சிறுமை நீங்கிய இன்சொல் கூறினால், அது இம்மைக்கும், மறுமைக்கும் நமக்கு நன்மை தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_18.html


(Please click the above link to continue reading)



சிறுமையுள் = சிறியன, இழிந்தன, குற்றம் உள்ளன 


நீங்கிய = இல்லாத 


இன்சொல் = இனிய சொல் 


மறுமையும் = மறுமைக்கும் 


இம்மையும்  = இம்மைக்கும் 


இன்பம் தரும் = இன்பம் தரும் 


இனிய சொல் சொல்ல வேண்டும்.அதோடு சேர்ந்து மற்ற குற்றம் உள்ள சொல் சேர்ந்து விடக் கூடாது. 


"இன்னிக்கு காப்பி நல்லா இருக்கு. ஒரு வழியா நல்ல காப்பி போட படிசிட்ட" என்று சொல்லும் போது, இனிய சொல்லோடு சிறுமை கலந்து விடுகிறது. 


இழிவான சொற்களை, ஒருபோதும் சொல்லக் கூடாது. 


விளையாட்டுக்கு, "அதுக்கு கூட உரிமை இல்லையா?",  என்றெல்லாம் சப்பை கட்டு கட்டக் கூடாது. 


உரிமை இருக்கிறது, ஜாலி, விளையாட்டு என்பதற்காக சொல்லலாம். அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் நமக்கு இன்பம் வராது. 


இன்பம் வேண்டாம் என்றால் சொல்லலாம். 


பிறர் மனம் புண் படும்படியோ, அவர்களை சிறுமைப் படுத்தவோ, இழிவாக சொல்லவோ ஒரு போதும் சொற்களை பயன்படுத்தக் கூடாது. 


நாம், வேற்றாளிடம் அப்படி சொல்வதை விட, நெருங்கிய சொந்தம், நட்பில் அப்படி சொல்லிவிடுவோம். 


மனைவிதானே, பிள்ளைதானே, மருமகள் தானே, என்று உரிமையில் ஏதேதோ சொல்லி விடுவோம். அது தவறு.  


சிந்திப்போம். 



1 comment:

  1. நீங்க சொன்ன பிறகு தான் யோசித்தேன். .சாதாரணமாக முக்கால் தடவை நாம் மற்றவரை புகழும் போது நம்மையும் அறியாமல் கழு நீர் பானையில் கை கழுவினாப்போல புண்படுத்தும் சொற்களை உபயோகிக்கிறோம்..உதாரணமாக "ரொம்ப நாள் கழித்து கடைசியாக அரை சதம் அடிச்ச்சுட்டே.ரொம்ப சந்தோஷம்! "

    ReplyDelete