Wednesday, February 23, 2022

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும்

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும் 


இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை கூறுவது கனி இருக்கும் போது காயை விரும்பவது போல என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_23.html


(please click the above link to continue reading)



இனிய உளவாக = இனிய சொற்கள் இருக்கும் போது 


இன்னாத கூறல் = இன்னாத சொற்களை கூறுவது 


கனியிருப்பக் = கனி இருக்கும் போது 


காய்கவர்ந் தற்று = காயை உண்பது போல, காயின் மேல் விருப்பம் உண்டானது போல, காயை திருடி உண்பது போல 


காயிருக்க கனி உண்பது எவ்வளவு  சிறந்த செயல் இல்லையோ, அது போல இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறுவது. இப்படித்தான் இதுவரை அர்த்தம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரிவதே கடினம். 


அது என்ன கனி, காய்?


மாங்காய் ஊறுகாய் போட வேண்டும் என்றால், மாங்காய் தானே வேண்டும். மாம்பழத்தை வைத்து ஊறுகாய் போட முடியுமா? 


வாழக்காய் பொறியல் பண்ண வேண்டும் என்றால் காய் தான் வேண்டும். வாழைப் பழத்தை வைத்து பொறியல் பண்ண முடியுமா? 


அப்படி இருக்க கனி உயர்ந்தது, காய் தாழ்ந்தது என்று எப்படிச் சொல்லலாம்? 


மேலும், காய் இல்லாமல் கனி இல்லை. அப்படி என்றால் இன்னாத சொல்லில் இருந்தா இனிய சொல் பிறக்கும்?


சிக்கல். 


பரிமேலழகர் சிக்கலை விளக்குகிறார். 


கனி என்றால் ஔவை உண்ட நெல்லிக் கனி போன்ற உயர்ந்த பலன் தரும் கனிகள். 


காய் என்றால் காஞ்சிரங்காய் போன்ற நஞ்சு உள்ள காய்கள் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, உடலுக்கும், உயிருக்கும் நன்மை தரும் கனிகளை விடுத்து, நஞ்சு பொருந்திய காய்களை யாராவது உண்பார்களா என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


மேலும், காஞ்சிரங்காய் போன்ற நச்சுக் காய்களை பறிக்கும் போது அதில் உள்ள முட்கள் குத்தி நமக்கே கேடு விளைவிக்கும். பிறருக்கு தீமை தரும் என்று நினைத்து நாம் சொல்லும் தீய சொற்கள் நமக்கே தீமையாக முடியும் எனவே அந்த மாதிரி சொற்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார். 


ஒருவர் மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசுகிறோம், அவதூறு பேசுகிறோம், பொய் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சொற்கள் அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் தீமை விளைவிக்கும் என்கிறார். 


நம்மால் துன்பப்பட்ட ஒருவன் சும்மா இருப்பானா? அவன் முறை வரும் வரை காத்து இருப்பான், நமக்கு துன்பம் செய்ய. 


எனவே, இனியவை அல்லாத சொற்களை சொல்லுவது மற்றவர்களுக்கு மட்டும் அல்ல, சொல்பவர்களுக்கும் தீமை பயத்தலால், அதை சொல்லக் கூடாது என்கிறார். 


இந்தக் குறளில் ஒரு இலக்கணச் சிக்கல் இருக்கிறது. 


முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 


இனிய உளவாக இன்னாத கூறல் 


என்பது முதல் வரி. 


கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்பது இரண்டாவது வரி. 


ஏதாவது தொடர்பு இருக்கிறதா?  


எப்படி இரண்டையும் இணைப்பது?


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


"பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. "


கனி ,காய் என்பது உவமை. 


இனிய சொல், இன்னாத சொல் என்பன பொருள். 


இனிய, இன்னாத என்று சொல்லுக்கு கூறிய பண்புகள் உவமைக்கும் செல்லும் என்கிறார். அதாவது, இனிய சொல் என்பதில் உள்ள இனிமை இனிய கனி என்று செல்லும். அது போல, இன்னாத சொல் என்பதில் உள்ள இன்னாத என்பது இன்னாத காய் என்று செல்லும். 


எனவே, குறளை எப்படி படிக்க வேண்டும்?

இனிய உளவாக இன்னாத கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று படிக்க வேண்டும். 


இனிய உளவாக இன்னாத என்றால் இனிமையான தின்பண்டங்கள் இருக்க கசப்பானவற்றை தின்பது போல என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?


"கூறல் என்றதனால் அது சொற்களை குறிக்கும்" என்கிறார் பரிமேலழகர். 


இன்னும் குறளை விரித்துப் படித்தால் எப்படி இருக்கும்?


இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று விரியும். 


எவ்வளவு சொற் சிக்கனம் பாருங்கள். பயனில சொல் பாராட்டாமை. 


சரி மேலே போவோம். 


கவர்ந்தற்று என்கிறார். 


கவர்தல் என்றால் இரண்டு பொருள். கவர்ச்சி, விருப்பம் என்று கொள்ளலாம். 


இன்னொன்று தெரியாமல் எடுத்துக் கொள்வது. 


"என் உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர். 


தீய சொற்கள் நாம் அறியாமல் வந்து விடும். வேண்டும் என்று சொல்லுவதில்லை. கோபத்தில், எரிச்சலில், சில சமயம் நம்மையும் அறியாமல் வந்து விடும். அப்படி வர விடக் கூடாது. காவல் செய்ய வேண்டும். 


சிலருக்கு இன்னாத சொற்களை சொல்லுவதில் ஒரு ஆர்வம் இருக்கும். நான் பல பேரை பார்த்து இருக்கிறேன். சில கெட்ட வார்த்தைகளை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லுவார்கள். 


சென்னை போன்ற இடங்களில் ஆத்தா என்ற சொல்லைக் கூட தவறாக பயன் படுத்துவதை கண்டு இருக்கிறேன். சிலர் ஆங்கிலத்தில் அந்த f என்று தொடங்கும் அந்த நான்கு எழுத்துச் வார்த்தையை மிக எளிதாக கையாள்வார்கள். அதில் ஒரு விருப்பம். இயல்பு வந்து விடுகிறது. அது இல்லாமல் பேச முடியாது என்று ஆகி விடுகிறது. பல ஆங்கிலப் படங்களில் இவை சர்வ சாதரணமாக புழங்குகிறது. 


நா காக்க வேண்டும். 


தீய சொற்களின் மேல் ஆர்வம் கூடாது. அதில் உள்ள கவர்ச்சியில் மயங்கக் கூடாது. 


அவை நம்மை அறியாமலும் வந்து விடக் கூடாது. 


அப்படிப்பட்ட சொற்கள் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, சொல்பவர்களை பாதிக்கும். எனவே, அவற்றை விலக்க வேண்டும் என்கிறார். 


இந்தக் குறளோடு இனியவை கூறல் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


எப்போதும் கேட்பது தான்..கொஞ்சம் இடை வெளி வேண்டுமா? அலுப்பாக இருக்கிறதா? கனமாக இருக்கிறதா?  சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்வோமா அல்லது இடை வெளி இல்லாமல் தொடர்வோமா?


இரண்டாவது, இந்த ப்ளாகில் சில வார்த்தைகளை உதாரணம் காட்ட வேண்டி இருந்தது. கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. விட்டுவிடலாம என்றும் தோன்றியது. உயர்ந்த விடயங்களை பற்றிப் பேசும் போது, கீழான வார்த்தைகளை கையாள்வது தவறுதான். சபை நாகரிகமும் அல்ல. 


உங்களுக்கு அவை சங்கடம் விளைவித்து இருந்தால், மன்னிக்கவும். 



6 comments:

  1. அப்பப்பா! பரிமேலழகருடைய உரையில்.எவ்வளவு ஆழமான அலசல்கள்,எத்தனை புதிய கண்ணோட்டங்கள். வள்ளுவரே தன் சுருக்கமான ஈரடியை இத்தனை விதமான பார்வைகளில் எழுதி இருக்க கூடுமா என ஒரு ஐயமே ஏற்படுகிறது! பிரமாதம் உங்களுடைய exposition!

    ReplyDelete
  2. உற்சாகவே படிக்கிறோம் ..அண்ணா

    ReplyDelete
  3. அருமை.தொடரலாம்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சரியான பொருளை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் படி எழுதுகிறீர்கள். வாசிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இந்தக் குறளைப் பல முறை படித்திருந்தாலும், கனி - காய் என்ற சொற்களைப்பற்றி இதற்க்கு முன் நான் ஆழமாக சிந்தித்ததில்லை. நன்றி.

    ReplyDelete