நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல்
காதல் இன்பமானதா? துன்பம் நிறைந்ததா?
காதல் செய்தவர்களுக்குதன் தெரியும் அதன் கஷ்டம். காதலை சொல்வது கடினம். சொன்னால் ஏற்றுக் கொள்ளப் படுமோ, நிராகரிக்கப் படுமோ என்ற பயம், கவலை. ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், தினம் தினம் பார்க்காவிட்டால் கவலை. தினம் தினம் பேச முடியாவிட்டால் கவலை. யாராவது ஒருவர் வெளியூர் சென்றுவிட்டால் திரும்பி வரும் வரை கவலை. மற்றவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கவலை.
இதில் பெரிய கவலை என்ன என்றால், மற்றவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டால், பார்க்க வராமல் இருந்து விட்டால்...அது போல் பெரிய கவலை இல்லை.
நான் சொல்லவில்லை. ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வார் தன்னை ஒரு பெருமாள் மேல் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் தாயக நினைத்துக் கொண்டு, அந்த பெண் பிள்ளை படும் பாட்டை சொல்கிறார்.
"பெருமாளே, என் மகள் உன் மேல் காதல் கொண்டு விட்டாள். நீயோ அவளை பார்க்க வர மாட்டேன் என்கிறாய். அவளும் கிடந்து புலம்புகிறாள். இந்த காதல் மிகக் கடினமானது என்று சொல்லி மயங்கி விழுகிறாள். உன் பேரை அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நீ வராவிட்டாலும், ,நீ வந்து விட்டதாகவே நினைத்து மயங்கும். இவள் மேல் உனக்கு இரக்கம் இல்லையா? இவளை நீ என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாய்?"
என்று கேட்கிறார்.
பாடல்
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்குங்கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்றுமூர்ச் சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியைகாண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்சிந்தத் தாயே?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_21.html
(Please click the above link to continue reading)
இட்டகால் = கால் இட்ட இடத்தில் அசைவில்லாமல் இருக்கும்.
இட்ட கையளாய் = கைகள் இருக்கும் இடத்தில் அசைவு இல்லாமல் இருக்கும்
இருக்கும்; = இருக்கும்
எழுந்துலாய் = எழுந்து உலாவி
மயங்குங் = மயங்குவாள்
கை கூப்பும்; = கைகளை கூப்புவாள்
‘கட்டமே காதல்’ = இந்தக் காதல் ரொம்ப கஷ்டம்
என்று மூர்ச் சிக்கும்; = என்று பெருமூச்சு விடுவாள்
‘கடல்வண்ணா! = கடல் போன்ற வண்ணம் உடையவனே
கடியைகாண்’ என்னும் = இந்தக் கடுமையை, கொடுமையை பார் என்று பிதற்றுவாள்
‘வட்டவாய் நேமி = வட்டமான சக்கரத்தை
வலங்கையா!’ என்னும் = வலக் கையில் கொண்டவனே என்று சொல்லும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; = வந்து விட்டாய் என்று மயங்குவாள்
சிட்டனே! = சிஷ்டனே
செழுநீர்த் திருவரங் கத்தாய்! = செழுமையான நீரைக் கொண்ட திருவரங்கத்தில் உறைபவனே
இவள்திறத் தென்சிந்தத் தாயே? = இவளைப் பற்றி நீ என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் உன் மனத்தில்
சிட்டனே என்பதற்கு சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள் புரிபவனே, நீ இப்படி அருள் புரியாமல் இருக்கலாமா என்று பொருள் சொல்கிறார்கள்.
ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தையை எவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறார்.
அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பது, போட்டது போட்டபடி இருப்பது, அவன் பேரைச் சொல்லி மகிழ்வது, செல் போனில் டிங் என்று சத்தம் வந்தால் ஒரு வேளை அவன் கிட்ட இருந்து ஏதாவது செய்தி வந்திருக்குமோ என்று ஆவலோடு பார்ப்பது, ஒரு வேளை நம்மை பிடிக்கவில்லையோ, மறந்து விட்டானோ, நம்மை வேண்டாம் என்று நினைத்து விட்டானோ என்று கவலைப் படுவது....எல்லாம் சொல்கிறார்.
பக்தி என்பது காதலின் அடுத்த படி தான் போலும்.
ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சொன்னது போல், காதல் செய்வீர்.
சிற்றின்பமே புரியவில்லை என்றால் பேரின்பம் எப்படி புரியப் போகிறது?
பெருமாளிடம் காதல் வயப்பட்ட அந்த பெண்ணின் மன நிலையை படம் பிடித்தால் போல் காட்டி விட்டார் ஆழ்வார். அதற்கு மெருகு சேர்த்தது உங்கள் அற்புதமான விளக்கம்.
ReplyDelete