திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே
ஆன்மீகம் சிலசமயம் குழப்பமாகவும், தெளிவற்று மயக்கம் தருவதாகவும் தோன்றும்.
ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டம்.
இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறார் ஆனால் எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்று கூறும் மதங்கள் ஆயிரம். என் கடவுள் முக்தி தருவார், என் கடவுள் இறுதித் தீர்ப்பு தருவார், என்று ஆளாளுக்கு தங்கள் மதம், கடவுள் பற்றிக் கூறுகிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி கொள்வது?
நாம் பிறந்த ஒரே காரணத்தால் என் மதம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்?
சரி கடவுள் கூட ஒருவர்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை அடையும் வழி எது தெரிய மாட்டேன் என்கிறது.
மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் ஒரு புறம் இருக்கட்டும். இந்து மதத்தின் உள்ளே கூட பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்று பலவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. எதை கொள்வது. எதைத் தள்ளுவது என்று புரியாமல் குழப்பம் வரும்.
சரி ஏதோ ஒரு கடவுள், ஏதோ ஒரு மார்க்கம் என்று முடிவு செய்து விட்டால் கூட, அதில் போக எங்கே நேரம் இருக்கிறது? வீடு, வேலை, சம்பாத்யம், பொழுது போக்கு, உடல் ஆரோக்கியம் என்று ஒவ்வொரு நாளும் போய் விடுகிறது.
இதில் எங்கே ஆன்மீகத்தில் ஈடுபட எங்கே நேரம் இருக்கிறது?
இப்படி எல்லாம் குழப்பம் வரும் என்று மணிவாசகருக்குத் தெரியும்.
" பக்தி செய்யும் பக்தர்களுக்குள் இன்றே வந்து சேராமல், மயக்கம் கொண்டவர்களே, பின்னாளில் நீங்கள் துன்பப்படும் போது உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்? உங்கள் குழப்பம் தெளிய வேண்டும் என்றால், ஒன்று செய்யுங்கள், சிவலோகத்து அதிபன், பாம்பணிந்த கைகளை கொண்டவனை அடையாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ, ஐயோ "
என்று பதறுகிறார்.
பாடல்
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,
மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;
தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_11.html
(please click the above link to continue reading)
புரள்வார் = தரையில் கிடந்து புரள்வார்
தொழுவார் = வணங்குவார்
புகழ்வார் = போற்றுவார்
ஆய் = ஆகி
இன்றே வந்து = இன்றே வந்து
ஆள் ஆகாதீர், = ஆட்படாமல்
மருள்வீர் = மயக்கம் கொள்வீர்கள்
பின்னை = பின்னாளில்
மதிப்பார் ஆர்? = உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்
மதியுள் கலங்கி = புத்தி குழம்பி
மயங்குவீர்; = மயக்கம் கொண்டு
தெருள்வீர் ஆகில் =அதில் இருந்து தெளிவு அடைய விரும்பினால்
இது செய்மின் = இதைச் செய்யுங்கள்
சிவலோகக் கோன் = சிவலோகத்து அதிபன்
திருப்புயங்கன் = பாம்பணிந்த கைகளை கொண்டவன்
அருள் ஆர் பெறுவார் = அருளை வேறு யார் பெறுவார்கள் ?
அகல் இடத்தே? = வேறு இடத்தில்
அந்தோ! அந்தோ! அந்தோவே! = ஐயோ, ஐயோ, ஐயோவே
படித்துக் கொண்டே இருந்தால், சிந்தித்துக் கொண்டே இருந்தால் இருக்க வேண்டியதுதான். குழப்பம்தான் மிஞ்சும்.
அவனை அறிவு கொண்டு காண முடியாது.
அறிவு ஏற ஏற புரளுதலும், தொழுதலும் நிகழ்வது கடினமாகிப் போகும். அறிவு தடுக்கும். "தரையில் கிடந்து புரள்வதா?" என்று அறிவு தடுக்கும்.
ஆனால், புரண்டும், தொழுதும், போற்றியும் எளிதாக இறைவனை அடையலாம். அதை விட்டு விட்டு, ஏதேதோ செய்து கொண்டிருகிரீர்களே, ஐயோ, ஐயோ, ஐயோ என்று பச்சாதப் படுகிறார் மணிவாசகர்.
இதெல்லாம் செய்ய நாள் கிழமை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
"இன்றே இதைச் செய்மின்" என்கிறார்.
இந்தப் பாடலோடு யாத்திரைப் பத்தில் உள்ள பத்து பாடல்களையும் நாம் பார்த்து விட்டோம்.
வாசித்தமைக்கு நன்றி.
உங்கள் பணி தொடர இறை அருள் புரியட்டும். 🙏🏽🙏🏽🙏🏽
ReplyDelete