Tuesday, June 14, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார்

   

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


)


பிறன்மனை விழைவது என்பது எப்படி நிகழும் என்று சிந்திக்கிறார் வள்ளுவர். 


ஒருவன் தன்னுடைய நண்பன் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகிறான். அந்த வீட்டின் தலைவன் அவனை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டு இருக்கிறான். ஏதோ பொருள் வாங்க வேண்டும் என்று வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. "நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்" என்று நண்பனிடமும், மனைவியிடமும் சொல்லிவிட்டு வெளியில் போகிறான். அந்த நேரத்தில், அந்த நண்பனின் மனைவியின் மேல் இவன் ஆசை கொள்கிறான். எல்லை மீறப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 


அந்த இடத்தில் நிறுத்தி வள்ளுவர் குறள் சொல்கிறார். 


"நீ நல்லவன் என்று உன்னை நம்பி வீட்டுக்குள் அனுமதித்த உன்  நண்பனுக்கு அல்லது உறவினனுக்கு நீ துரோகம் செய்கிறாய் என்றால் நீ மனிதன் அல்ல, விலங்கு கூட அல்ல, செத்த பிணம் போன்றவன்"


என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார். 



பாடல் 


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்தொழுகு வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


(pl click the above link to continue reading)



விளிந்தாரின் =  இறந்தவர்களின் 


வேறல்லர் = வேறு அல்லர் 


மன்ற = உறுதியாக 


தெளிந்தார்இல் = தெளிந்தவர் இல்லத்தில் 


தீமை புரிந்தொழுகு வார் = தீமை செய்து வாழ்பவர்கள் 


"தெளிந்தார் இல் " என்றால் நீ நல்லவன், தவறு செய்யமாட்டாய் என்று நம்பிக்கை கொண்டவன் இல்லம். அவனுக்கு இவன் மேல் சந்தேகம் இல்லை. தெளிவாக இருக்கிறான். இவன் நம்பத்தகுந்தவன் என்று தெளிவாக முடிவு செய்து மனைவியோடு தனியாக விட்டுச் செல்கிறான். எனவே, அவனை தெளிந்தார் என்றார். 


அப்படி நம்பியவனை துரோகம் செய்பவனை ஏன் பிணம் என்றார்? 


பரிமேலழகர் கூறுகிறார் "அறம், பொருள், மற்றும் இன்பம் என்பவை உயிர் சார்ந்த விடயம். இந்த மூன்றும் நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கு கிடைக்காது என்பதால் பிணத்துக்கும் அவனுக்கும் ஒரு வேற்றுமையும் இல்லை என்கிறார். 


வள்ளுவர் "தீமை" என்று தான் சொல்லி இருக்கிறார். அவன் வீட்டில் உள்ள பொருளை திருடுவது கூட தீமைதான். ஆனால், இந்த அதிகாரம் பிறனில் விழையாமை என்பதால், இங்கே தீமை என்பதை அவன் மனைவி மேல் ஆசை கொள்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். 


அவன் வீட்டுக்குப் போய், அவன் மனைவி கையால் சமைத்த உணவை உண்டுவிட்டு, அவனுக்கு துரோகம் செய்வது என்பது செய்நன்றி கொன்ற குற்றம். 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு 


என்ற குறளும் இங்கே எண்ணத் தக்கது. 


இந்த அதிகாரத்தின் தலைப்பு பிறனில் விழையாமை. 


பிறனில் அனுபவிக்காமை, அபகரிக்காமை என்று சொல்லவில்லை. 


மற்றவன் மனைவியை தொட வேண்டும் என்று கூட தேவையில்லை. மனதால் நினைத்தாலே அது குற்றம் என்பதால் 'விழையாமை" என்றார். விரும்பாமை. 


அவன் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள், எப்படி அழகாக பேசுகிறாள். எப்படி சமைக்கிறாள். எனக்கும் ஒண்ணு வாய்த்து இருக்கிறதே. அந்தப் பெண்ணை போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதளவில் நினைப்பது கூட குற்றம் என்கிறார். 


வள்ளுவர் ஏதோ ஆணாதிக்க சிந்தனை உள்ளவர், பெண்ணடிமையை போற்றுபவர் என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் இந்தக் குறளையும், இந்த அதிகாரத்தையும் படிக்க வேண்டும். 


மற்றவன் மனைவியை நினைப்பவனை பிணம் என்று சாடுகிறார் வள்ளுவர். 







No comments:

Post a Comment