திருக்குறள் - பிறனில் விழையாமை - 6 - பகை, அச்சம், பழி, பாவம்
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம்
முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html
குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html
குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html
குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html
குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html
குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html
)
போக்குவரத்து விதியை மீறி விடுகிறோம். காவல்காரர் பிடித்துக் கொள்கிறார். உடனடியாக ஒரு தண்டத் தொகை (spot fine) கட்டச் சொல்கிறார். கட்டுகிறோம். அது அதோடு முடிந்து விடும்.
சட்டத்தை மீறினால், ஏதோ ஒரு தண்டனை, தண்டனை முடிந்தால், அந்தக் குற்றம் பற்றி மீண்டும் பேசக் கூடாது. குற்றத்துக்கும், தண்டனைக்கும் சரியாப் போச்சு.
ஆனால், அறம் மீறினால் அப்படி அல்ல.
என்ன செய்தாலும் அது போகாது. வாழ்நாள் பூராவும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, அடுத்த பிறவிக்கும் அது தொடரும். அது மட்டும் அல்ல, ஒருவன் செய்த அறம் மீறிய செயலுக்கு அவன் சந்ததி முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
எந்த அறம் மீறிய செயலுக்கும் அதுதான் நியதி.
அதிலும் பிறன் மனை நோக்கிய தவறுக்கு கேட்கவே வேண்டாம்.
பாடல்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html
(pl click the above link to continue reading)
பகை = பகை
பாவம் = பாவம்
அச்சம் = அச்சம், பயம்
பழி = பழி
யென நான்கும் = என்ற நான்கும்
இகவாவாம் = நீங்காதாம்
இல்இறப்பான் கண் = மற்றவன் மனைவியை விரும்பியவன் இடம்
ஒரு தவறு செய்தால், நான்கு தண்டனை என்கிறார் வள்ளுவர்.
பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தண்டனை.
நாம் பொதுவாக "பழி பாவம்" என்பதை ஒரு சொல் போல பயன் படுத்துகிறோம்.
பழி என்பது இந்தப் பிறவியில் வருவது.
பாவம் என்பது அடுத்து அடுத்து வரும் பிறவிகளிலும் தொடர்வது.
பகை - யார் வீட்டு பெண்ணையாவது முறை தவறி ஒருவன் அடைய நினைத்தால், அந்த வீடு மட்டும் அல்ல, அவன் வாழும் சமுதாயமும் அவனுக்கு பகையாகப் போகும். அவனை நம்பி யார் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள்? ஒரு பகைவனை பார்ப்பது போலத் தான் பார்ப்பார்கள். எங்கே சிரித்தால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு நம் வீட்டுக்கு வந்து விடுவானோ என்று எண்ணி, முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். ஒரு பகைவனை பார்ப்பது போல.
பாவம் - இனி வரும் பிறவிகளிலும் அந்த குற்றத்தின் தண்டனை தொடரும் என்கிறார்.
அச்சம் - எப்படியோ, ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாற்றான் மனைவியை ஒருவன் தவறாக அடைந்து விடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் ஆயுள் முழுவதும் பயந்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது, அது வெளிப்படுமோ, யார் வெளிப்படுத்துவார்களோ, அது தெரியவந்தால் மனைவி, பிள்ளைகள் , பேரப் பிள்ளைகள், மருமகன், மருமகள், எல்லாம் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எண்ணியே சாக வேண்டும். அவன் இறுதிக் காலம் வரை அந்த அச்சம் போகாது.
பழி - வாழும் காலத்திலும், பழி சுமந்துதான் திரிய வேண்டும். ஒரு காலத்திலும் அந்த பழியை துடைக்க முடியாது. எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும், ,புண்ணியம் செய்தாலும், அந்தப் பழி போகவே போகாது.
இந்தப் பிறவியில் பழி, அச்சம், பகை வந்து சேரும்.
அடுத்த பிறவிக்கு பாவம் வந்து சேரும்.
எனவே, இம்மைக்கும், மறுமைக்கும் இது கேடு விளைவிக்கும் என்கிறார் வள்ளுவர்.
சந்தர்பம் அமைந்தால், ஒரு நொடியில் தவறு நிகழ வாய்ப்பு இருப்பதால், வள்ளுவர் இதை மிகக் கடுமையாக கண்டிக்கிறார்.
குடும்பங்களுக்குள் குழப்பம் வரக் கூடாது, தனி மனித ஒழுக்கம் கெடக் கூடாது, சமுதாயம் சீரழிந்து விடக் கூடாது என்ற அக்கறையோடு வள்ளுவர் அருளிச் செய்து இருக்கிறார்.
No comments:
Post a Comment