Monday, February 27, 2023

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி 


வாழக்கை என்பது பெரிய போராட்டம். கருவறை தொடங்கி கல்லறை வரை இது ஒரு முடிவில்லா போராட்டம். 


இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற என்ன வேண்டும்?


நிறைய செல்வம் வேண்டும். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். 


அப்புறம் ஆட்கள் துணை வேண்டும். கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நட்பு.


அப்புறம், அறிவு, படிப்பு, திறமை 


அப்புறம், கொஞ்சம் நல்ல நேரம் அமைய வேண்டும். 


இப்படித்தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். 



கம்பன் மட்டும் அல்ல, நம் தமிழ் இலக்கியம் முழுவதும் இதை மறுதலிக்கிறது. 



இது பற்றி கம்பன் சொல்கிறான்



என்ன சொல்கிறான் என்பதைவிட எங்கு சொல்கிறான் என்பது வியப்பளிக்கும் விடயம். 



இராவணன் தேர் இழந்து,  ஆயுதங்கள் எல்லாம் இழந்து, மணி மகுடங்களை இழந்து, தனியே போர்க்களத்தில் நிற்கிறான். 



அந்த இடத்தில் இராமன் வாயிலாக கம்பன் ஒரு அறவுரை கூறுகிறான். 



இராவணனிடம் என்ன இல்லை?



பணம் - குபேரன் அவன் அரண்மனையில் வேலை செய்கிறான். அதற்கு மேல் என்ன வேண்டும்?


வீரம்?


தவம் ?


புகழ்?


பெருமை?


ஆட்கள்?


எல்லாம் அவனிடம் தேவைக்கு அதிகமாக இருந்தது.



இருந்தும், நிராயுதபாணியாக நிற்கிறான். இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் அவன் உயிரை வாங்கி இருக்க முடியும். 



அவ்வளவு அனாதையாக நிற்கிறான். 



என்ன ஆயிற்று அவன் செல்வம், பணம், புகழ், எல்லாம்?



ஒன்றும் துணைக்கு வரவில்லை. 


இராமன் சொல்கிறான் 



"அறத்தின் துணை அன்றி மறத்தினால் பெரிய போர்களை வெல்ல முடியாது. இதை மனதில் கொள். தனித்து நிராயுதபாணியாக நிற்கும் உன்னை கொல்ல மனம் வரவில்லை. உன் சுற்றத்தோடு போய் இரு" என்று அனுப்பி வைக்கிறான். 


பாடல் 




 அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்


மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;


பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!


இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_27.html


(pl click the above link to continue reading)


அறத்தினால் அன்றி, = அறவழியில் செல்வது இல்லாமல் 



அமரர்க்கும் = தேவர்களுக்கும் 



அருஞ் சமம் = அரும் சமர் = பெரிய போர்களை 



கடத்தல் = கடந்து செல்லுதல் 



மறத்தினால் அரிது = அறம் அல்லாத மற வழியில் அரிது (வெற்றி காண்பது அரிது) 



என்பது = என்பதனை 



மனத்திடை வலித்தி = மனதில் ஆழ பதிவு செய்து கொள் 



பறத்தி = பறந்து செல். இங்கு நிற்காதே 



நின் = உன்னுடைய  



நெடும் = பெரிய 



பதி = வீடு, இல்லம், அரண்மனை 



புகக் = சென்று 



கிளையொடும் = உறவினர்களோடு 



பாவி! = பாவம் செய்தவனே 



இறத்தி = இருப்பாயாக 



யான் = நான் 



அது நினைக்கிலென் = அது என்பது உன்னைக் கொல்வதை நினைக்கவில்லை 



தனிமை கண்டு இரங்கி = உன் தனிமை கண்டு இரக்கப்பட்டு 



இராமாயணம் கதையோ, உண்மையோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



சமீப காலத்தில் ஊடங்களில் ஒரு பெரிய நிறுவனம் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து சரிந்து கீழே வந்தது என்று.




பணம், அரசியல் செல்வாக்கு,  ஆள் பலம் எல்லாம் இருக்கலாம். 



அற வழியில் செல்லாவிட்டால் அழிவு நிச்சயம். 



மறம், இராவணனை நிராயுதபாணியாக்கி போர்க்களத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்தது. 



ஒரு சின்ன சறுக்கம்.  சீதை மேல் கொண்ட காமம். அவனை எங்கு கொண்டு நிறுத்தியது.


இதைச் சொல்வதற்காகவே காத்து இருந்ததைப் போல, கம்பன் சரியான இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்தப் பாடலை பொறுத்தி இருக்கிறான். 



No comments:

Post a Comment