திருக்குறள் - பொருளும் அருளும்
நிறைய பேருக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை சேமிக்கத் தெரியாது. சிலருக்கு சேமிக்கத் தெரியும், ஆனால் சம்பாதிக்கத் தெரியாது. சிலருக்கு சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும் ஆனால் அனுபவிக்கத் தெரியாது. மூன்றும் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.
பொருளை ஆட்சி செய்ய வேண்டுமா? அதன் அனைத்துத் துறைகளிலும் (சம்பாதித்தல், சேமித்தல், செலவிடுதல்) சிறந்து விளங்க வேண்டுமானால், செல்வத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். செல்வத்தை அலட்சியம் செய்தால், அதனை நல்ல வழியில் பயன்படுத்த முடியாது.
பொருளை ஆட்சி செய்யும் தகுதி பொருளைப் போற்றாதவர்களுக்கு இல்லை.
அது போல
அருளை ஆட்சி செய்யும் தகுதி பிற உயிர்களை தின்பவர்களுக்கு இல்லை.
பாடல்
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.
பொருள்
பொருளாட்சி = பொருளை ஆட்சி செய்கின்ற திறமை
போற்றாதார்க் கில்லை = அந்தப் பொருளை போற்றாதவர்களுக்கு இல்லை
யருளாட்சி = அருளை ஆட்சி செய்யும் திறன்
யாங்கில்லை = ஆங்கு இல்லை
யூன்றின் பவர்க்கு. = ஊன் தின்பவர்க்கு
சில பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், நான் உணவு விடுதிக்கு (hotel) சென்று சில மாமிச உணவை வரவழைத்து உண்கிறேன். அந்த உயிர்களை நான் கொல்லவில்லை. நான் சாப்பிடாவிட்டால் வேறு யாராவது சாப்பிடத்தான் போகிறார்கள். நான் உண்பது ஒரு இறந்த உடலைத்தான். நான் கொல்லவில்லை. ஒரு வேளை யாருமே உயிர் கொலை செய்யமாட்டேன் என்று இருந்து விட்டால், நான் மாமிசம் தின்ன முடியாது. நாளடைவில் அதை மறந்து விடுவேன்.எனவே தவறு என் மேல் அல்ல.....
என்று வாதம் செய்வார்கள்.
அந்த உயிர்களை கொல்பவன் என்ன சொல்லுவான் "நான் கொல்வது அவன் தின்பதற்காக? அவன் தின்பதை நிறுத்தி விட்டால் நான் ஏன் கொல்லப் போகிறேன். தவறு என் மேல் அல்ல. தின்பவன் மேல் என்று கூறுவான்.
இப்படி மாறி மாறி பழி போட்டுக் கொண்டு யாரும் பொறுப்பை எடுக்க மாட்டார்கள்.
வள்ளுவர் சொல்கிறார், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீ மாமிசம் சாப்பிட்டாயா? ஆம் என்றால், உனக்கு அருளை ஆளுகின்ற குணம் இல்லை. யார் கொன்றார், யார் தின்றார் என்பதல்ல பிரச்சனை.
"நீ மாமிசம் உண்கிறாயா, உனக்கும் அருளுக்கும் சம்பந்தம் இல்லை"
மாமிசம் உண்பது சரியா தவறா என்று வள்ளுவர் இங்கே வாதம் செய்யவில்லை. மாமிசம் சாப்பிட்டால் உயிர்கள் மேல் அருள் வராது. அவ்வளவுதான் அவர் சொல்லுவது.
அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார். வள்ளுவரைப் போல் உதாரணம் சொல்ல இன்னொருவர் பிறக்க வேண்டும்.
கண்டமேனிக்கு ஊதாரித்தனமாக செலவு செய்பவன் இடத்தில் எப்படி பொருள் தாங்காதோ அது போல உயிர்களை தின்பவனிடம் அருள் தங்காது என்கிறார்.
பொருளை போற்ற வேண்டும். எச்சரிக்கையுடன் செலவழிக்க வேண்டும். கணக்கு எழுத வேண்டும். சரியான படி முதலீடு செய்ய வேண்டும். செய்த முதலீட்டை பார்த்துக் கோனே இருக்க வேண்டும். வீட்டை வாடைகைக்கு கொடுத்தால், வாடகை ஒழுங்காக வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
இல்லை என்றால் வீடு போய் விடும்.
அது போல, உயிர்களை கொன்று தின்றால், அருள் போய் விடும்.
அருள் போனால், துறவு போகும்.
துறவு போனால், வீடு பேறு போகும். மீண்டும் பிறவி வந்து சேரும்.
அவ்வளவு பெரிய பலனை பெறுவதற்கு இந்தச் சின்ன தியாகத்தை செய்யக் கூடாதா என்று வள்ளுவர் கேட்காமல் கேட்கிறார்.
ஊண் தின்பது தவறு என்று சொல்வதில்லை. ஆன்மிக வளர்சசிக்கும் துறவறத்திற்கும் இது மிகவும் அவசியம்.
ReplyDelete