இராமாயணம் - நீங்க புடிச்சு தர மாட்டீங்களா ?
சீதை பொன் மான் வேண்டும் என்று கேட்டாள்.
இலக்குவன் தடுக்கிறான். உலகத்தில் பொன் நிறத்தில் உள்ள மான் என்று ஒன்று கிடையாது. இது ஏதோ அரக்கர் மாயை. அந்த மான் வேண்டாம் என்கிறான்.
சீதை அடம் பிடிக்கிறாள்.
இராமனும் பிடித்துத் தர இசைகிறான்.
இலக்குவன் தான் போய் பிடித்து வருவதாகக் கூறுகிறான்.
இந்த இடத்தில் கம்பன் பெண்களின் மன உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுகிறான்
பெண்களுக்கு அவர்களின் கணவன் கையால் கிடைத்தால் ஒரு முழ பூ கூட சிறப்பு தான்.
இலட்சம் ரூபாய் உள்ள வைர அட்டிகையாய் இருந்தாலும் , அதை அலுவலகத்தில் உள்ள ஒரு பணியாளரிடம் (peon ) மூலம் கொடுத்து அனுப்பினால், அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது அவர்களுக்கு
இங்கே சீதை இராமனைப் பார்த்து கேட்கிறாள் "நீங்க அந்த மானை எனக்கு பிடிச்சு தர மாடீங்களா " என்று.
பாடலில் கம்பன் அவர்களுக்கு இடையே உள்ள அன்யோநியத்தை படம் பிடிக்கிறான். சீதை கொஞ்சுகிறாள். இராமன் உருகுகிறான்.
பாடல்
ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன் சொல் கிளியினின் குழறி, மாழ்கி,
'நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்' என்னா,
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள்.
பொருள்
ஆயிடை = அதன் இடையில். இராமனுக்கும் இலக்குவனுக்கும் நடந்த வாக்கு வாதத்திற்கு இடையில் புகுந்து
அன்னம் அன்னாள் = அன்னம் போன்ற
அமுது உகுத்தனைய செய்ய = அமிழ்தம் சிந்தினார் போல்
வாயிடை = வாயில் இருந்து
மழலை இன் சொல் = மழலை போல் இனிய பேச்சுடன்
கிளியினின் குழறி = கிளி போல் பேசி
மாழ்கி = மயங்கி, துவண்டு
நாயக! = என் நாயகனே
நீயே பற்றி நல்கலைபோலும் = நீயே (அந்த மானை) பற்றி எனக்கு தர மாட்டியா
என்னா = என்று
சேயரிக் = சிவந்த
குவளை = குவளை மலர்
முத்தம் = முத்து
சிந்துபு = சிந்தியதைப் போல
சீறிப் போனாள் = (செல்ல) கோபம் கொண்டு போனாள்
காதல் ஒரு புறம். ஊடல் மறு புறம்.
எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று கம்பன் பாடம் எடுக்கிறான்
எனக்கு அந்த மான் வேண்டும் என்று சொல்லவில்லை
எனக்கு அந்த மானை பிடித்து தாங்க என்று சொல்லவில்லை
அந்த மானை பிடித்து தர மாட்டீங்களா என்று கேட்கிறாள்.
பின்னால் வந்த பிரச்சனைகள் எல்லாம் எல்லாம் நமக்குத் தெரியும். இராவணன் வந்ததும், சீதையை சிறைபிடித்ததும் வரலாறு
ஏன் இவ்வளவு பிரச்சனை.
ஜீவாத்மாவான சீதை பரமாத்வான இராமனோடு இருந்த வரை அவளுக்கு ஒரு துன்பமும் இல்லை
எப்போது ஜீவாத்மா, இறைவனின் மேல் உள்ள பற்றை விட்டு உலக பொருட்களின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் அதற்கு அத்தனை துன்பங்களும் நேர்ந்தது.
உலக இன்பங்கள் எல்லாம் பொன் மானை போல உண்மை இல்லாதவை. பார்க்க கவர்ச்சியாய் இருக்கும் . உண்மை இல்லை.
இறைவன் திருவடியை விட்டு உலக இன்பங்களின் பால் போனால், துன்பம்தான் மிஞ்சும்
இப்படி உலக இன்பங்கள் நம்மை கவர்ந்து இழுக்கும் போது இலக்குவன் போன்ற ஞானிகள், ஆச்சாரியர்களின், குருவின் பேச்சை கேட்க வேண்டும்.
இல்லை என்றால் ஜீவாத்மா படாத பாடு படும் என்பது இதன் குறியீடு.
சீதைக்கு தெரியாதா அது மாய மான் என்று.
இராமனுக்குத் தெரியாதா அது மாய மான் என்று.
நமக்கு ஒரு வாழக்கை பாடம் தர அவனும் அவளும் நடத்திய நாடகம்.
பாடம் புரிகிறதா ?
உங்க மாதிரி ஆசிரியர் இருக்கும் பொழுது பாடம் புரியாதா என்ன? எல்லோருக்கும் தெரிந்த ஒரு சாதாரண நிகழ்வுக்கு மிக மிக அருமையான விளக்கம் .மிக்க நன்றி
ReplyDeleteஜீவாத்மா பரமாத்மா ஆசாரியன் சம்பந்தத்தை சீதாபிராட்டி மாய மானை வேண்டிபெற பகவான் ராமரிடம் ஊடலுடன் கேட்டு பெற முயன்றதை சார்பிட்டு விளக்கிய பாங்கு மிக நன்று ;
ReplyDeleteவாழ்க வளமுடன் ;
அந்த சீதை என்ற ஜீவாத்மா கேட்கும்போது, இராமன் என்ற பரமாத்மா ஏன் மானைப் பிடிக்க ஓடியது?!?!?
ReplyDelete