Friday, February 8, 2013

அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன்


அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன் 


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி, நீ என் வாழ்க்கை துணை. 

துணையும்: துணை எப்போது தேவைப்படும் ? பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். ரொம்ப சந்தோஷம் வந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள துணை அவசியம். துணை என்பது கடைசிவரை வர வேண்டும். பாதியில் விட்டு விட்டு போவது அல்ல. எனவே கணவனையோ மனைவியையோ வாழ்கை துணை என்றனர் . அபிராமி ,  எப்போதும் என் கிட்டவே இரு. எனக்குத் துணையாய் இரு. 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 


கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின் வெறும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 


பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. 
 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்க்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு. 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்க்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 

இத்தனைக்கும் மேலாக ரொம்ப அழகா இருக்கா.

அபிராமி...அபிராமி...அபிராமி....


 


2 comments:

  1. wonderful poem and superb explanation. Hats off to you!

    ReplyDelete
  2. என்ன ஒரு அன்னியோன்னியம்! அருமையான பாடலுக்கு, அழகான விளக்கம்.

    ReplyDelete