Wednesday, February 27, 2013

இராமாயணம் - இராவணனின் காதல்


இராமாயணம் - இராவணனின் காதல் 


சீதையின் அழகைப் பற்றி சூர்பனகை எடுத்துச் சொல்லுகிறாள் இராவணனிடம். கேட்டவுடன் காதல் கொள்கிறான் இராவணன். 

காமம் படுத்தும் பாட்டை கம்பன் கற்பனையில் இழைக்கிறான். 

 அற்புதமான பாடல்கள். 

இராவணன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய ஆள்....சீதையின் காதலுக்காக தவிக்கிறான். உருகுகிறான். 

அதிலிருந்து சில பாடல்கள் 

கோபமும், மறனும், மானக் கொதிப்பும், 
     என்று இனைய எல்லாம், 
பாபம் நின்ற இடத்து நில்லாப் 
     பெற்றிபோல், பற்று விட்ட; 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் 
     ஆம் செயலின், புக்க 
தாபமும் காமநோயும் ஆர் உயிர் 
     கலந்த அன்றே.



பொருள் 

எண்ணெய்  விட்டு, திரி போட்டு ஒரு விளக்கு இருக்கிறது. அதில் இன்னும் தீபம் ஏற்ற வில்லை. எரிகின்ற இன்னொரு விளக்கை கொண்டு வந்து எரியாத விளக்கை ஏற்றுகிறோம். முதல் விளக்கில் தீபம் பற்றிக் கொள்கிறது. இரண்டு தீபங்களும் ஒன்றாக எரிகின்றன. அப்படி ஒன்றாக எரியும் தீச் சூடரில், எது எந்த விளக்கின் சூடர் என்று தெரியுமா ? இரண்டும் ஒன்றாக கலந்து விடுவதைப் போல இராவணனின் உயிரோடு காமமும் தாபமும் இரண்டற கலந்தது.

தீபம் சுடர் விட்டு எரியும் போது திரி கருகும், எண்ணெய்  வற்றும். காமம் பற்றிய போது  இராவணனின் உயிர் வற்றியது, உடல் உருக ஆரம்பித்தது.

சீதையின் அழகு என்ற தீபத்தை கொண்டு வந்து இராவணனின் உயிரில் காமத் தீயை கொளுத்தி விட்டாள் சூர்பனகை. அனலிடைப் பட்ட மெழுகாய் உருகுகிறான் இராவணன். 



கோபமும் = கோபமும். தன் தங்கையை அவமானப் படுத்தி விட்டார்களே என்ற கோபமும்

மறனும் = அறனும் (எது நல்லது, எது கெட்டது என்று அறியும் தர்மமும்). 

மானக் கொதிப்பும் = கொப்பளிக்கும் தன்  மான உணர்வும். இப்படி நம் குலத்திற்கு ஒரு அவமானம்  நேர்ந்து விட்டதே என்ற தன்  மான உணர்வும்
 
என்று இனைய எல்லாம் = என்ற இந்த உயர்ந்த குணங்கள் எல்லாம் 
 
பாபம் நின்ற இடத்து நில்லாப்  பெற்றிபோல் =  பாவம் உள்ள இடத்தில் இல்லாத புகழும் செல்வமும் போல் (பெற்றி = வழக்கம், நெறி, முறை, இயல்பு ). ஒருவன் எவ்வளவுதான் நல்லவற்றை (புகழ், செல்வம், ) சேர்த்து வைத்து இருந்தாலும், பாவம் செய்ய ஆரம்பித்தவுடன்  எப்படி அவன் பெற்றவை எல்லாம் அவனை விட்டு விலகிப் போகுமோ அது போல 


பற்று விட்ட = நல்லவைகள், அவன் சேர்த்தவைகள் அவனை விட்டன  
 
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் = தீபங்கள் ஒன்றில் இருந்து ஒன்று பற்றிக் கொண்டதைப்

என்னல்  ஆம் செயலின் = செயல்  போல 

புக்க = புகுந்துகொண்ட 
 
தாபமும் = தாபமும் 

காமநோயும் = காம நோயும் 

ஆர் உயிர் கலந்த அன்றே = அவனுடைய அருமையான உயிரில் கலந்தது 

அதனால் என்ன ஆயிற்று ?

இன்னும் வரும் ப்ளாகுகளில் அவற்றைப் பற்றி சிந்திப்போம் 

1 comment:

  1. இந்த ஒரு நாலடிப் பாடலில் இரண்டு அருமையான உவமைகளா! ஆஹா!

    காமத் தீ உயிரைப் பருகி, உடலைக் கருக்கியது என்ற விளக்கமும் அருமை.

    ReplyDelete