Wednesday, February 19, 2014

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம்

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம் 


ஊருக்குள் சாக்கடை இருக்கும். கழிவு நீர் எல்லாம் அதன் வழியாகச் செல்லும். கிட்ட போக  முடியாது.துர் நாற்றம்  வீசும்.

அந்த சாக்கடை சென்று கங்கையில் கலக்கும். பின் அந்த கங்கை கடலில் சேரும்.

அப்படி கங்கையில் சேர்ந்த பின் , கடலில் சேர்ந்த பின் அது தீர்த்தம் என்றே அறியப்படும். கங்கை எது, கடல் எது, சாக்கடை எது என்று தெரியாது.

அது போல , நாம் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் நல்லவர்களோடு சேரும் போது , அவர்களோடு பழகும் போது நம் குறைகள் மறைந்து நாமும் தீர்த்தமாவோம்.

அவர்கள் சொல்வது நம் காதில் விழும். அவர்கள் செய்யும் செயல்கள் நம்மையும் அவர்கள் போல இருக்கத் தூண்டும். அல்லவை விலகி நல்லவை வந்து சேரும்.

எனவே நல்லவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

பாடல்


ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குல மாட்சியில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து.

பொருள் 

ஊரங்கணநீர் = ஊர் + அங்கண + நீர் = அங்கணம் என்றால் கழிவு, சுத்தம் செய்யும் இடம். அப்படி வரும் கழிவு நீர்

உரவு நீர் = வலிமையான நீர். கடல் என்று கொள்ளலாம். அல்லது கங்கை போன்ற பாவம் தீர்க்கும் நீர் என்றும் கொள்ளலாம்.

சேர்ந்தக்கால் = சேர்ந்த பின்

பேரும் பிறிதாகித் = சாக்கடை என்ற பேர் மாறி 

தீர்த்தமாம் = தீர்த்தம் என்று அறியப்படும் 

ஓரும் = மதிக்கத்தக்க 

குல மாட்சியில்லாரும் = குல மாட்சி இல்லாரும். குலப் பெருமை இல்லாதவர்களும்

குன்றுபோல் நிற்பர் = குன்றைப் போல உயர்ந்து நிற்பார்கள். உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உயர்ந்து நிற்பார்கள். 

நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து = நல்ல குணம் உள்ள நல்லவர்களை சார்ந்து இருக்கும்போது

சாக்கடை தீர்த்தம் ஆகும் என்றால், நாம் நல்லவர்களாக மாட்டோமா ?

உங்களைச் சுற்றி உள்ளவர்கள், நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு முறை  நினைத்துப் பாருங்கள்.


3 comments:

  1. ஒரு பக்கம் பார்த்தல் கெட்டவர்கலொடு சேர்ந்தால் நீயும் கேட்டு போவாய். கெட்டவர்கலொடு சேராதே என்று வருகிறது. இன்னொரு பக்கம் பார்த்தல், எவ்வளவுதான் சாக்கடையாக இருந்தாலும் நல்லவர்களோடு சேர்ந்தாள் தீர்த்தமாகி விடுவோம் என்கிறது.

    அப்ப கெட்டவர்கள் நல்லவர்களோடு சேர வேண்டும் ஆனால் நல்லவர்கள் கெட்டவர்களை சேர்த்துக்கொள்ள கூடாது. கொன்ஜம் குழப்பமாக இருக்கிரதெ.

    ReplyDelete
  2. எனக்கும் புவனாவின் கேள்விதான் மனதில் வந்தது. கேட்டவர்கள் வந்து சேர விரும்பும்போது, நல்லவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. சாக்கடை கங்கையை தேடித் போகலாம்.
      கங்கை சாக்கடையைத் தேடிப் போகக் கூடாது.

      கற்றாரை கற்றாரே காமுறுவர் கற்றரிவில்லா மூர்க்கரை மூர்கரே முகப்பர் முது காட்டில் காக்கை உகைக்கும் பிணம்.

      Vultures find dead meat
      Humming bird finds honey
      Every bird finds what it is seeking
      We all do

      Delete