நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க
நம் வினைகளை நாம் தான் செய்கிறோம். நாமே செய்வதில்லை. தூண்டப் பட்டு செய்கிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள், சமுதாயம், நம் துணைவன்/துணைவி என்று ஆயிரம் பேரால் தூண்டப் பட்டு வினைகளை செய்கிறோம்.
பல வினைகள் ஆராய்ந்து .இல்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ஏதேதோ செய்து கொண்டு போகிறோம்.
நம் வினைகள் தோட்டம் போல அல்ல, காடு போல வளர்ந்து கிடக்கின்றன. இந்த காட்டை வெட்டி சீர் படுத்த முடியாது. இதை மாற்ற வேண்டும் என்றால் மொத்தமாக கொளுத்த வேண்டும். எரிந்து கரிந்து சாம்பல் ஆன பின், முதலில் இருந்து சரியாக தோட்டம் வளர்க்கலாம்.
இவ்வளவு பெரிய காட்டை எப்படி எரிப்பது. என்னால் ஆகாத காரியம். இறைவா, நீயே என் வல் வினைக் காட்டை எரித்து விடு. உன்னால் முடியாதது எதுவும் இல்லை. கஜமுகாசுரன் என்ற கொடிய யானையை கொன்று அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவன் ஆயிற்றே நீ. உன்னால் முடியாதா ?
என்கிறார் மணிவாசகர்....
பாடல்
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே
பொருள்
மடங்க = அழிந்து போக
என் வல் வினைக் காட்டை = என்னுடைய வினையான காட்டினை
நின் = உன்னுடைய
மன் = நிலைத்த
அருள் தீக் கொளுவும் = அருளினால் தீயிட்டு கொளுத்தவும்
விடங்க = வீரம் உள்ளவனே
என்தன்னை = என்னை
விடுதி கண்டாய்? = விட்டு விடாதே
என் பிறவியை = என் பிறவியை
வேரொடும் களைந்து = வேரோடு களைந்து. அதாவது மீண்டும் முளைக்காமல்
ஆண்டுகொள் = என்னை ஆட்கொள்
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே
கொடும் = கொடுமையான
கரிக்குன்று = கருமையான குன்றைப் போல் இருக்கும் யானையை
உரித்து = அதன் தோலை உரித்து
அஞ்சுவித்தாய் = அச்சத்தை அவித்தாய்
வஞ்சிக் கொம்பினையே = வஞ்சிக் கொடி போன்ற உமை அம்மையின்
அப்போ, நம் மனதை, ஆசைகளை, எண்ணங்களை எல்லாம் தீக்கொளுத்த வேண்டும்! உண்மைதான்!
ReplyDelete