நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் சேலையைத் தருவாய்
ஆண்டாளும் அவள் தோழிகளும் சூரியன் உதிக்கும் முன் குளத்தில் நீராட வந்தார்கள். துணிகளை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கினார்கள். கண்ணன் அவர்கள் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான். அவனிடம் கெஞ்சுகிறாள் கோதை. "இனிமேல் இந்த குளத்துக்கு குளிக்க வரவே மாட்டோம், தயவு செய்து எங்கள் துணிகளைத் தருவாய் " என்று வேண்டுகிறாள்.
பாடல்
கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே
பொருள்
கோழி = கோழி
அழைப்பதன் முன்னம் = கொக்கரித்து அழைக்கும் முன்
குடைந்து = மூழ்கி
நீராடுவான் போந்தோம் = நீராட வந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் = சூரியனும் இப்போது வந்து விட்டான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய் = பாம்பணையில் பள்ளி கொண்டவனே
ஏழைமை யாற்றவும் பட்டோம் = ஏழைகளான நாங்கள் ரொம்பவும் கஷ்டப் படுகிறோம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம் = இந்தப் குளத்திற்கு வரவே மாட்டோம்
தோழியும் நானும் தொழுதோம் = நானும், என் தோழிகளும் உன்னை தொழுகின்றோம். உடை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் இரண்டு கைகளையும் உயர்த்தி வணங்க முடியாது. எனவே இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு கையை சேர்த்து வணங்கினோம் என்று நயப்பு சொல்வாரும் உண்டு.
துகிலைப் = எங்கள் துணிகளை
பணித்தரு ளாயே = கொடுத்து அருள்வாய்
No comments:
Post a Comment