இராமாயணம் - மாண்டது என் மாயப் பாசம்
இராமனை நினைத்து பன்னெடுங்காலம் தவம் இருந்தாள் சவரி .
இறுதியில், அவளின் தவத்தின் பயனாய் , இராமன் நேரில் அவள் முன் தோன்றினான்.
அவளின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
அவனை பார்க்க பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றது மாதிரி.
சவரி சொல்கிறாள்
"என் மாயப் பாசம் மாண்டது. கணக்கில்கணக்கில்லா காலம் நான் செய்த தவத்தின் செல்வம் வந்தது. என் பிறவிப் பிணி போய் விட்டது "
பின் அவர்களுக்கு வேண்டிய விருந்தினை செய்தாள்
பாடல்
ஆண்டு, அவள் அன்பின்
ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள்,
'மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது பிறவி' என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க,
விருந்துசெய்து இருந்த வேலை,
பொருள்
ஆண்டு = அப்போது
அவள் அன்பின் ஏத்தி = அவள் அன்பினால் இராமனை புகழ்ந்து
அழுது = அழுது
இழி அருவிக்கண்ணள் = அருவி போல நீர் விழும் கண்களோடு
'மாண்டது என் மாயப் பாசம் = இறந்தது என் மாயமான பாசம்
வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம் = வந்தது இத்தனை காலம் செய்த தவத்தின் பயன்
போயது பிறவி' என்பாள் = போனது என் பிறவி என்றாள்
வேண்டிய கொணர்ந்து நல்க = வேண்டியதை கொண்டு வந்து தந்து
விருந்துசெய்து இருந்த வேளை = விருந்து செய்து இருந்த போது
இது என்ன பெரிய விஷயம் ...ஒரு பக்தை அவளின் இறைவனை கண்டபோது கண்ணீர் ததும்புவதும், விருந்து செய்வதும் பெரிய விஷயமா என்றால்...இல்லைதான். ஆனால்,கம்பர் இதில் பல ஆழமான விஷயங்களை சொல்கிறார்.
முதலில், இராமன் அவளுக்கு ஒரு வரமும் தரவில்லை. அவளே சொல்லிக் கொள்கிறாள். மாண்டது என் மாயப் பாசம், வந்தது செல்வம், போயது பிறவி என்று. அவளுக்குத் தெரிகிறது. இது எல்லாம் தந்து பெறுவது அல்ல. அவை நிகழும்போது தெரியும். தவத்தின் பயன் இயல்பான ஒன்று.
இரண்டாவது, அவளின் மகிழ்ச்சி எல்லை கடந்து நிற்கிறது. மாயப் பாசம் மாண்டது என்று தான் சொல்ல வேண்டும். தவத்தின் பயன் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அவள் மாண்டது மாயப் பாசம் என்று மாண்டதை முதலில் சொல்கிறாள். அவ்வளவு அவசரம். அவ்வளவு மகிழ்ச்சி.
மாண்டது, வந்தது, போயது என்று முதலில் நடந்ததை சொல்லி பின் என்ன நடந்தது என்று சொல்கிறாள்.
மூன்றாவது, கிடைத்தது தவத்தின் பயன் என்று சொல்லவில்லை. "வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம் ". இராமன் வந்ததை தவத்தின் பயனாகச் சொல்கிறாள்.
நான்காவது, நாம் எல்லாம் செல்வம் என்றால் ஏதோ காசு பணம், வீடு, நகை, நட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அல்ல. தவத்தின் பயனாக கிடைபதுதான் செல்வம்.
ஐந்தாவது, ஏதோ கொஞ்ச காலம் செய்த தவம் அல்ல. வரம்பு இல் காலம் செய்த தவத்தின் பயன் இராமன் வந்தான் என்கிறாள். நமக்குதான் எவ்வளவு அவசரம். ஒரு பூஜை, ஒரு கோவிலுக்கு போவது, ஒரு வேண்டுதல்...உடனே பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கிடைக்காவிட்டால் சந்தேகம் வருகிறது. இந்த பூஜை புனஸ்காரங்களை தொடர வேண்டுமா என்று. சவரி வரம்பு இல் காலம் தவம் செய்து இராமனை காணப் பெற்றாள். இறைவனை காண, தவத்தின் பலனைப் பெற பொறுமை, விடா முயற்சி வேண்டும். வரம்பு இல் காலம்.
பக்தியின் உச்சம். தவத்தின் உச்சம்.
நல்ல விளக்கமான உரை சுவாரசியமாக இருந்தது. நன்றி.
ReplyDelete