பழமொழி - மரம் வெட்டும், மயிர் வெட்டுமா ?
பிறர் மேல் அன்பு, கருணை, ஏழைகளுக்கு இரங்குதல் , தானம் செய்தல் , பசித்தவர்களுக்கு உதவுதல் போன்றவை படித்து வராது. அது ஒரு இயற்கை குணம்.
இன்னும் சொல்லப் போனால், படிக்க படிக்க , எதிர் காலம் பற்றிய பயமும், எவ்வளவு செல்வம் சேர்த்துவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகும். அதனால் தான் பெற்ற செல்வத்தை மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகும்.
படிக்காதவர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு படித்தவர்களிடம் இருப்பது இல்லை.
கோடாலி வலிமையான ஆயுதம் தான். அதை வைத்து பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்தி விடலாம். அவ்வளவு பெரிய மரத்தையே வெட்டுகிறது, இந்த முடியை வெட்டாதா என்று யாரும் கோடாலியால் முடி வெட்டிக் கொள்வது இல்லை.
முடி வெட்ட சின்ன, மிகக் கூர்மையான கத்தி வேண்டும்.
அது போல கற்றறிவு பெரிய பிரச்சனைகளை சரி செய்ய உதவினாலும், இரக்கம் கருணை இதுவெல்லாம் அதில் இருந்து வராது.
பாடல்
பெற்றாலும் செல்வம்பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.
பொருள்
பெற்றாலும் = செல்வத்தை பெற்றாலும்
செல்வம் = அந்த செல்வத்தை
பிறர்க்கீயார் = பிறருக்குத் தர மாட்டார்கள்
தாந்துவ்வார் = தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள். வங்கியில் வைப்பார்கள். கடன் பத்திரம் (Fixed Deposit ) வாங்குவார்கள்.
கற்றாரும் = படித்தவர்கள்
பற்றி இறுகுபவால் = பணத்தை இறுகப் பற்றிக் கொள்வார்கள்
கற்றா = கன்றை ஈன்ற பசு
வரம்பிடைப் = வயல் வரப்பில்
பூமேயும் = பூக்களை உண்ணும்
வண்புனல் ஊர! = நிறைந்த நீர் வளம் கொண்ட ஊரை உடையவனே
மரங்குறைப்ப = மரத்தை குறைக்க (வெட்ட) பயன்படும் கோடாலி
மண்ணா மயிர்.= முடி வெட்ட பயன் படாது
படித்தவனுக்கு எதிர் காலத்தைப் பற்றிய பயம் உண்டு, படிக்காதவனுக்கு இல்லை; படித்தவனுக்குக் கருணை இல்லை, படிக்காதவனுக்கு உண்டு - என்பது சும்மா புருடா! இதெல்லாம் சும்மா சொல்வது.
ReplyDeleteபல பெரியவர்கள் படிப்பினால் பண்பு வளருகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
கல்வியை முற்றாக அப்படிச்சொல்லவும் இல்லை. இந்தப் பாடலில் வரும் பொருள் ' அறிவின் மூலம் வரும் பெர்வெர்ட்டட் இன்டலிஜென்ஸ் ( மன்னிக்கவும் தமிழ் சட்டென்று வரவில்லை) பற்றிச் சொல்கிறதென்று நினைக்கிறேன்.
ReplyDeleteகற்றாரும் என்பதில் வரும் உம் விகுதியை கவனியுங்கள்.
ReplyDelete