நந்திக் கலம்பகம் - குனிந்து பார்
அவள் மிக மிக அழகான இளம் பெண்.
பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவள்.
அவள் தகப்பனோ வயதானவன். வலிமை குன்றியவன். ஏழ்மையில் இருக்கிறான்.
அந்தப் பெண்ணை மணமுடிக்க வேண்டி பெண் கேட்டு அண்டை நாட்டு மன்னன் தூது அனுப்பி இருக்கிறான்.
கிழவன் தானே, என்ன செய்து விட முடியும் என்ற நினைப்பில்.
அந்த கிழவன் சொல்கிறான்....
"என்னிடம் இருப்பது ஒரு அம்புதான், வில்லும் ஒடிந்து போய் இருக்கிறது, அந்த ஒடிந்த வில்லிலும் நாண் அறுந்து போய் இருக்கிறது, நானோ வயதான கிழவன் என்று எண்ணியா உன் மன்னன் என் மகளை பெண் கேட்டு உன்னை தூதாக அனுப்பி இருக்கிறான் ? நந்தி மன்னன் இருக்கும் இந்த நாட்டில், என் வீட்டை கொஞ்சம் குனிந்து பார் ....என் குடிசையை சுற்றி வேலி போட்டு இருப்பது யானை தந்தங்கள் "
அப்பேற்பட்ட வீர குடும்பம்என்பதை சொல்லாமல் சொல்கிறான்.
பாடல்
அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.
பொருள்
அம்பொன்று = ஒரே ஒரு அம்புதான் இருக்கிறது
வில்லொடிதல்= வில்லோ ஒடிந்து போய் இருக்கிறது
நாணறுதல் = நாண் அறுந்து போய் இருக்கிறது
நான்கிழவன் = நானோ கிழவன்
அசைந்தேன் = அசைய முடியாமல் இருக்கிறேன்
என்றோ = என்றா
வம்பொன்று குழலாளை = பொன் போன்ற குழலை உடைய என் பெண்ணை
மணம்பேசி = திருமணம் பேசி
வரவிடுத்தார் = வரும்படி உன்னை அனுப்பி இருக்கிறார்
மன்னர் தூதா! = மன்னனின் தூதனே
செம்பொன்செய் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட
மணிமாடத் = மணி மாடங்களை கொண்ட
தெள்ளாற்றின் = தெள்ளிய ஆற்றின் கரையில் உள்ள
நந்திபதம் சேரார் = நந்தி அரசாளும் இடத்திற்கு வரமாட்டார்
ஆனைக் கொம்(பு) = யானையின் தந்தம்
ஒன்றோ = ஒன்றா, (இல்லை பல இருக்கிறது )
நம்குடிலின் = எங்கள் குடிசையின்
குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே. = குறுக்கும் நெடுக்கும் இருக்கிறது...நீ சற்று குனிந்து பார்
என்ன அருமையாகப் பேசுகிறான். வந்த தூதனையோ, அவனது அரசனையோ அவமதிக்காமல், தன் குலப் பெருமையையும் வீரத்தையும் சொல்கிறான். "ஒடிந்த வில்லானாலும், ஒற்றை அம்பானாலும், நான் வீரக் குலத்தவன்" என்று. அற்புதம்! நன்றி.
ReplyDelete♥️☺️🥰🌹
ReplyDelete