திருத் தெள்ளேணம் - கண்களில் நீர்த் திரையாட
என்றாவது நமக்கு கிடைத்து இருக்கும் செல்வங்களுக்காக நாம் மகிழ்ந்தது உண்டா ? ஊனம் இல்லாத உடல், பெரும்பாலும் ஊனம் இல்லா மனம், கல்வி, உறவு, நட்பு, குழந்தைகள், சண்டை இல்லாத நாடு, மிக உயர்ந்த தமிழ் மொழி வாசிக்கும், இரசிக்கும் அறிவு ....கொஞ்சம் பொருட் செல்வம், குழந்தைகள், கணவன்/மனைவி.....
இவற்றையெல்லாம் அடைய நாம் என்ன செய்து விட்டோம் ?
இத்தனையும் இலவசமாக நமக்குத் தரப் பட்டு இருக்கிறது.
எவ்வளவு பெரிய விஷயம்.
இவற்றையும் தாண்டி, இறை அருளும் தனக்குக் கிடைத்தது என்று எண்ணி மனிவாசகர் உருகுகிறார்....
இறைவன் சந்நிதியில் நிற்கிறார்....கண்ணீர் ததும்புகிறது...
இடையில் நாக பாம்பை கட்டிய எம் பிரான், இந்த உலகில் மலையின் மேல் விளையாடிய பெண்ணான பார்வதியை தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டு, இங்கு வந்து என்னை ஆட் கொண்ட திறத்தை நினைக்கும் போது , மனதில் ஒளி விடுகிறது, கண்களில் நீர் திரையாடுகிறது....அதை எண்ணி ஆனந்த கூத்தாடுவோம் என்கிறார்.
பாடல்
அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளி யாடஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
பொருள்
அரையாடு நாகம் = இடுப்பில் ஆடுகின்ற நாகம். அரை என்றால் இடுப்பு. அரை என்றால் பாதி. உடம்பின் பாதியில் அமைந்தது இடுப்பு.
"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து "
அசைத்தபிரான் = அணிந்த பிரான். பிரியாதவன் என்பதன் மரூவு பிரான்
அவனியின் மேல் = இந்த உலகில்
வரையாடு மங்கை = வரை என்றால் மலை. மலை மகள் பார்வதி. அவள் சிறுமியாக இருக்கும் போது அந்த மலையில் தானே விளையாடி இருப்பாள் ?
தன் பங்கொடும் = தன் உடலில் பாதியை கொண்டு
வந் தாண்டதிறம் = வந்து ஆட்கொண்ட திறனை
உரையாட = சொல்ல
உள்ளொளி யாட = உள்ளத்தில் ஒளி ஆட
ஒண்மாமலர்க் கண்களில் = பெரிய மலர் போன்ற கண்களில்
நீர்த் திரையாடு = நீர் திரையாட
மாபாடித் = அதைப் பாடி
தெள்ளேணங் கொட்டாமோ. = தெள்ளேணம் கொட்டாமோ (ஒருவித கும்மி பாட்டு )
பாடலின் ஆழ்ந்த அர்த்தம் ஒருபுறம் இருக்க, தமிழ் எப்படி விளையாடுகிறது.
நன்றிப் பெருக்கில் உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் திரையாடுகிறது....
தமிழ் விளையாட்டு அருமைதான். நன்றி.
ReplyDelete