Tuesday, August 12, 2014

சிவ புராணம் - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

சிவ புராணம் - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

உணவு விடுதிக்குப் போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

அயல் நாடுகளுக்குப் போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சி படிக்கும் போது வருகிறதா ? அதுவும் இலக்கியங்களை படிக்கும்போது வருகிறதா. பக்தி இலக்கியங்களை படிக்கும் போது வருகிறதா ? ஏதோ கடனுக்கு, சொல்ல வேண்டுமே என்று மனப்பாடம் செய்து ஒப்பித்து விட்டு போய் விடுகிறோம்.

மாணிக்க வாசகர் சொல்கிறார்

"சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை".

சிவ புராணத்தை சொல்லும் போது அவருக்கு சிந்தை மகிழ்கிறதாம்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

இறைவனை வணங்கவும் அவன் அருள் வேண்டும். எல்லோராலுமா முடிகிறது. எத்தனை தடைகள், எத்தனை சந்தேகங்கள்.

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன்றேன் நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

முதலில் அம்மா...அப்புறம் மனைவி, அப்புறம் பிள்ளைகள் என்று ஆயிரம் தடைகள் இறைவனை அடைய.

உன்னை அடைய, எனக்குத்தான் ஆயிரம் தடைகள். என்னை அடைய உனக்கு என்ன தடை என்று புலம்புகிறார் இராமலிங்க அடிகள்.

இறைவனுக்கு ஒரு தடையும் இல்லை, நம்மை ஆட்கொள்ள.

எனவே, மணிவாசகர் சொல்கிறார், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

இறைவனை வணங்கி அருள் பெற்றவர்கள் கூட, பின்னாளில் அது ஏதோ தாங்களே  செய்தது போல ஆணவம்  கொள்கிறார்கள்.

அரக்கர்கள் கதை எல்லாம் அதுதான். தவம் செய்து, அருள் பெற்று, அதனால் ஆணவம் கொண்டு, அறம் அல்லாதன செய்து மாண்டு போவார்கள். நாம் தவம் செய்வது கூட அவன் அருளாலே என்ற எண்ணம் இல்லாதது தான் ஆணவத்திற்கு காரணம்.

எனக்கு என்ன தெரியும். அவன் அருள்  செய்தான், அதனால் நான் அவனை வணங்கினேன் என்று பணிவோடு சொல்கிறார் மணிவாசகர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் இனி யான்" - முந்தை என்றால் முற்பிறவி கூட அல்ல, இதற்கு முன்னால் செய்த வினைகள் எத்தனையோ. அவை அனைத்தும் ஓய இந்த சிவ புராணத்தை உரைப்பேன் என்கிறான்.

அந்த வினை முழுவதும் ஓயும் வரை உரைக்க வேண்டும்.

செய்த வினைகள் நம்மை விட்டு போகுமா ?

வினை போவதாவது ? ஓடும் என்கிறார் அருணகிரி நாதர்

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

 பாடல்


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி

பொருள்

சிவனவனென் = சிவன் அவன் என் 

சிந்தையுள் நின்ற அதனால் = என்னுடைய சிந்தனையில் நின்ற அதனால்

அவனரு ளாலே = அவனுடைய அருளாலே

அவன்தாள் வணங்கிச் = அவனுடைய திருவடிகளை வணங்கி

சிந்தை மகிழச் = மனம் மகிழ

சிவபுரா ணந்தன்னை = சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் = முன்பு செய்த வினைகள் அனைத்தும்

ஓய வுரைப்பனியான் = ஓயும் படி உரைப்பேன் நான்

கண்ணுதலான் றன் = கண் + நுதலான் + தன்  = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவன்

கருணைக் கண்காட்ட வந்தெய்தி = கருணை என்ற கண்ணை காட்ட வந்து எய்தி

எண்ணுதற் கெட்டா = எண்ணுவதற்கு எட்டா. நினைத்து கூட பார்க்க முடியாத 

எழிலார் கழிலிறைஞ்சி = அழகான கழல் அணிந்த அந்த திருவடிகளை வேண்டி ....



8 comments:

  1. "ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து ஏத்தஅருள் செய்த" -- பிரம்ம‍னே சிவனைப் பணிவதற்கு (தொழுவதற்கு) சிவபெருமானின் அருள் வேண்டியுள்ள‍து என்று தேவாரம் சொல்கிறது!

    ReplyDelete
  2. சத்தியமான உண்மை....நமது அத்துணை செயல்களையும் அவனருளாலே அவன்தாள் வணங்கியென்று நினைத்து செய்யும்பொழுது காரியம் சிறப்படையும்.இது எனது அனுபவ உண்மை.....சரணாகதி நிலையின் ஆரம்பமே இந்த வரிகள்தான்.....

    ReplyDelete
  3. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    ReplyDelete
  4. அவனுடைய அருள்

    ReplyDelete
  5. அவனை வணங்க அவனுடைய உத்தரவு வேண்டும் இது எளிய தமிழில் அவ்வளவு தான். சரி... இந்த வாக்கியத்தை எழுத தூண்டியது எது?சிவபுராணம் ஒரு அனுபவமே.குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை. அவனை வணங்க குருவின் அருள் இங்கே அவசியமாகிறது. குருவின் வாயிலாக இறைவனை பற்றிய ரகசியங்களை நமக்கு கிடைக்கும். இது தான் வழி. பூசைகள் மூலம் நமக்கு கிடைப்பது பணவிரையும் மட்டுமே மிஞ்சும்.

    ReplyDelete
  6. அருமை அருமை

    ReplyDelete
  7. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க.
    அவன் அருளால் நான் இன்று சிவபுராணம் கேட்டு படித்து மகிழ்ந்தேன்.
    இவை அனைத்தும் என் அப்பன் கைலாசநாதர் அண்ணாமலையார் காரணம்.

    ReplyDelete