சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே
பாடல்
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
பொருள்
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே = சொல்லும் மனமும் கடந்து நின்ற மறையோனே
கறந்தபால் = அப்போதுதான் கறந்த பாலோடு
கன்னலொடு= கன்னல் என்றால் கரும்பு. இங்கே சர்க்கரை
நெய்கலந்தாற் போலச் = நெய் கலந்தார்ப் போல
சிறந்தடியார் = சிறந்து அடியார்
சிந்தனையுள் = சிந்தனையுள்
தேனூறி நின்று = தேன் ஊற நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் = பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் பெருமான்
ஏதோ மாணிக்க வாசகர் சர்கரைப் பொங்கல் செய்வதற்கு சொல்லித் தருவது போல இருக்கிறதா ?
அப்படி அல்ல.
மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார்.
எல்லோரும் இன்பம் வேண்டும், இன்பம் வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏன் ?
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.
ஆசை புலன்கள் வழி வருகிறது.
புலன்கள் மனதால் செலுத்தப் படுகிறது.
புலன்களை அடக்க வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும்.
மனதை எப்படி அடக்குவது ?
அது தான் சிக்கலான விஷயம்.
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை கட்டுப் படுத்த நினைக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அது நம்மை மீறிச் செல்லும்.
மருந்து சாப்பிடுவதற்கு முன் குரங்கை நினைக்காதே என்றால் கட்டாயம் நினைக்கும்.
மனதை அடக்குவது என்றால் எது மனதை அடக்கும் ?
மனம் தான் மனதை அடக்க வேண்டும். அது எப்படி மனமே மனதை அடக்க முடியும் ?
மனதை அடக்க இரண்டு வழிகள்.
ஒன்று , மனதை ஒன்றில் இலயிக்க விடுவது. மனம் ஒன்றில் இலயித்து விட்டால் வேறு ஒன்றின் பின்னால் போகாது.
ஆனால் , இந்த இலயிப்பு நிரந்தரமாக இருக்காது. இலயிப்பு தீரும்போது, மீண்டும் மனம் அதன் வழியில் தறி கேட்டு ஓட ஆரம்பிக்கும்.
அதற்கு நிரந்திர தீர்வு, "மனோ நாசம்".
மனமே இல்லை என்றால் ?
இதைத்தான் மனோ நாசம் என்கிறார்கள்.
இதைத்தான் இரமண மகரிஷி
பாடல்
இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற
சீர் பிரித்த பின்
இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.
மனம் ஓடுங்கள் மனோ இலயம், மனோ நாசம் என்று இரண்டு உண்டு.
இலையித்துள்ளது (அதாவது இலயித்த மனம்) மீண்டும் எழும்.
மீண்டும் எழாது உரு மாய்ந்தால். அதாவது மனம் நாசம் ஆனால், அது மீண்டும் எழாது.
அதைத்தான் - "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே" என்றார்.
மனம் கழிந்த பின் நிற்பவன் அவன்.
"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று"
சிற்றின்பம் தாண்டி பேரின்பம் அடையும் போது அந்த இன்பம் பாலோடு, சர்க்கரை சேர்த்து , அதோடு நெய்யும் கலந்து தேன் போல தித்திக்கக் கூடியது.
அந்த பரமானந்தம் பெற்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.
"அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை " என்பார்
ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை என்று கரை புரண்டு ஓடும் ஆனந்த வெள்ளத்தைப் பற்றி கூறுகிறார் அபிராமி பட்டர்.
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!
இராமலிங்க அடிகளார் கூறுகிறார்
தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்
சருக்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே
தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றிபத்தைத்தான் உதாரணம் சொல்ல முடியும்.
இது ஒரு சுவை. இதை விட பெரிய சுவை பேரின்பம்.
ஆழ்ந்து படித்து உணர வேண்டிய பாடல்கள்.
பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றிபத்தைத்தான் உதாரணம் சொல்ல முடியும்.
இது ஒரு சுவை. இதை விட பெரிய சுவை பேரின்பம்.
ஆழ்ந்து படித்து உணர வேண்டிய பாடல்கள்.
எப்படி உனக்கு இத்தனை பாடல்கள் நினைவு இருக்கின்றன!
ReplyDeleteமனங்கழிய என்பதன் பொருள் நன்றாக இருந்தது. இராமலிங்க அடிகளார் பாடல் படிக்கும்போது அந்த இனிப்புப் பண்டத்தை உன்ன வேண்டும்போல் இருந்தது!