சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க
பாடல்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
இறைவன் பல்வேறு வடிவங்களிலும், உருவிலும், இருக்கக் காரணம், பல்வேறு மதங்களும், மதக் கோட்பாடுகளும் இருக்கக் காரணம் மனிதர்கள் பல்வேறு விதமாக இருக்கிறார்கள் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.
இந்த கருத்து மீண்டும் மீண்டும், விடாமல் நமது சமய நூல்களில் எங்கும் காணக் கிடைக்கிறது.
சற்று ஆழமாகப் படித்தால் நமக்கு புரிபடும்.
இந்த ஐந்து வரிகளில் மணிவாசகர் என்ன சொல்ல வருகிறார் ?
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஆகமம் என்றால் வேத புத்தகம். வேதமாக அல்லது மந்திரமாக நின்றவன் தாள் வாழ்க .
ஏகன் அனேகன் - ஒன்றாய் பலவடிவாய் நின்ற இறைவன் தாள் வாழ்க
அதாவது, இறைவன் மனித வடிவிலும் வருகிறான், மந்திர வடிவிலும் வருகிறான், ஒன்றாய் பலவாய் இருக்கிறான்.
இதே கருத்தை சொல்ல வந்த திருநாவுக்கரசரும்,
விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியன்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
விறகில் தீயைப் போலவும்
பாலில் உள்ள நெய்யைப் போலவும்
மணியில் உள்ள சோதியைப் போலவும் இருக்கிறான் என்கிறார்.
மணியில் உள்ள ஜோதி , ஒளி எளிதில் தெரியும். கையில் எடுத்துப் பார்த்தால் உடனே கண்ணுக்குப் புலப் படும்.
பாலில் உள்ள நெய்யை அவ்வளவு எளிதாக காண முடியாது. காய்ச்சி, உரை விட்டு, தயிர் ஆக்கி, தயிரைக் கடைந்து, மோர் ஆக்கி, அந்த மோரில் இருந்து வெண்ணை எடுத்து, அதை உருக்கி நெய்யை அடைய வேண்டும்.
விறகில் உள்ள தீயை வெளியே கொண்டுவருவது மோரைக் கடைவது போல எளிதானது அல்ல.
சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான்.
சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான்.
வேறு சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான்.
கடைசி வரியைப் பாருங்கள்
முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
சிலருக்கு முன் நிற்கும்.
சிலருக்கு கடைய முன் நிற்கும்
சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும்
இதை சொல்ல வந்த சேக்கிழாரும்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
ஓத முடியாத ஒரு உருவம்
நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம்
அளவு இல்லாத ஜோதி வடிவம்
இதையே அருணகிரி நாதரும்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
அபிராமி பட்டர் கூறுவார்
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே
இப்படி இறைவன் என்பது ஒரு தனி மனித பயணம், தனி மனித தேடுதல், தனை மனித அனுபவமாய் இருக்கிறது.
ஆளுக்குத் தகுந்த மாதிரி இறை அனுபவம் மாறுகிறது.
இதில் என் அனுபவம் உயர்ந்தது, உன் அனுபவம் தாழ்ந்தது என்று சொல்ல என்ன இருக்கிறது.
ஒவ்வொருவரின் அனுபவமும் மிகத் தனிப்பட்டது.
ஒருவரின் அனுபவத்தை இன்னொருவர் பின் பற்றுவதும் சரி அல்ல. நான் புறப்பட்ட இடத்தில் இருந்து நான் இறைவனை சென்று அடைய எடுத்துக் கொண்ட வழி எனக்கு சரியாக இருக்கலாம். அதே வழி உங்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.
உங்கள் வழி, நீங்கள் புறப்படும் இடத்தைப் பொருத்தது.
எல்லோருக்கும் ஒரு வழி என்றால், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து புறப்பட வேண்டும்.
ஏகன், அநேகன் இறைவன் அடி வாழ்க ...
அவன் ஒருவன், அவன் பலவாகவும் இருக்கிறான்....
இறைவன் இருக்கிறான் என்று சொல்பவர்களும் சரிதான்.
இல்லை என்று சொல்பவர்களும் சரிதான்
அவனுக்கு உருவம் இருக்கிறது என்றாலும் சரி, உருவம் இல்லை என்றாலும் சரி...
இது சிவ புராணத்தில் முதல் ஐந்து அடிக்கு மட்டும் உள்ள விளக்கம்...
இன்னும் இருக்கிறது.
அவ்வளவுதானா?!
ReplyDeleteஇதை என்னவென்று சொல்வது? இங்கே கொஞ்சம் "தெரிந்தெடுத்துப் படித்தல்" (selective reading) நடக்கிறது.
ReplyDeleteஎன்னதான் உருவமில்லாதவன், ஜோதி போன்றவன் என்று சொன்னாலும், ஆரம்பம் என்னவோ "நமச்சிவாய" என்றுதான் இருக்கிறது. இந்தப் புலவர்களுக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்திருக்கிறது போலும் - அதனால்தால் உருவமில்லாதவன் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், அருமையான தமிழ்ச் சுவை வழியும் பாடல்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தந்ததற்கு நன்றி.