சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
சிவ புராணத்தில், அடுத்த ஐந்து வரிகள்
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
எல்லாவற்றிலும் ஒரு வேகம். போகும் இடம் தெரிந்த மாதிரி ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். யாரையாவது நிறுத்தி எங்கே போய் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், எல்லோரும் போகிறார்கள் நானும் போகிறேன் என்பதே பதிலாக இருக்கும்.
நம் ஊரில் காய் கறி அங்காடி (மார்கெட்) இருக்கும். அங்கு சில நாய்கள் அலைந்து கொண்டிருக்கும். முதலில் ஒரு வாசலில் இருந்து குறைக்கும். பின் அங்கும் இங்கும் ஓடும். பின் வேறு ஏதோ வாசலில் இன்னொரு நாய் குரைப்பதைக் கேட்கும். அங்கு ஓடும். அங்குள்ள நாய்களோடு சண்டை போடும். இப்படி நாள் முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாளின் முடிவில் தளர்ந்து போகும். என்ன செய்து விட்டாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது.
மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே என்பார் பட்டினத்தடிகள்.
உடல் அலைவது, ஓடுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மனம் இருக்கிறதே, அது ஒரு கணம் ஒரு இடத்தில் நிற்கிறதா ? ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓட்டத்தை நிறுத்தினால் அல்லவா மனதை எதிலாவது ஒருமுகப் படுத்த முடியும்.
என்ன செய்யட்டும் என்று கேட்ட அருணகிரி நாதரை , ஒண்ணும் செய்யாதே "சும்மா இரு" என்றான் முருகன்.
மணிவாசகர் சொல்கிறார் - என் வேகத்தை கெடுத்து என்னை ஆட்கொண்ட தலைவன் அடி வெல்க என்கிறார்.
பிறந்து இறந்து பிறந்து இறந்து என்ற சுழலை நிறுத்தி, அதை வேறோரோடு அறுப்பவன் அவன். கிளையை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும். வேரோடு அறுக்க வேண்டும். பிஞ்ஞகன் என்றால் தலைக் கோலம் கொண்டவன் என்று பொருள். ஆகாய கங்கை, பிறைச் சந்திரன், என்று தலையில் கொண்டவன் அவன்.
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
தன்னிடம் வராதவர்களுக்கு அவன் தூரத்தில் நிற்கிறான். சொல்லப் போனால் அவன் அவர்களை விடுவது இல்லை. அவர்கள்தான் அவனை விட்டு விலகிப் போகிறார்கள். புறத்தில் உள்ளவர்களுக்கு சேயோன் (அண்மை என்றால் அருகில். சேய்மை என்றால் தூரத்தில்) அவன்.
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
கரம் குவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்களுக்கு மகிழ்ந்து அருள் புரிபவன்.
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
இறைவன் இருக்கும் இடம் இரண்டு என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. ஒன்று நம் மனம். இன்னொன்று தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல தூரத்தில் உள்ளது. இதனால் தான் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்க வேண்டும் என்று சொல்வது. அது பேரம்பலம், இது சிற்றம்பலம்.
No comments:
Post a Comment