இராமாயணம் - பதவி சுகமா ?
இன்று பதவி என்றால் ஏதோ சுகம், அதிகாரம், பொருள் செய்யும் வழி என்று பலர் நினைக்கிறார்கள்.
பதவி என்பது எவ்வளவு பெரிய சுமை என்று அதை ஒழுங்காக செய்பவர்களுக்குத்தான் தெரியும்.
ஒவ்வொரு பதவியும் ஒரு சுமை.
கூரிய வாளின் மேல் நடப்பது மாதிரி என்கிறார் வசிட்டர். கொஞ்சம் நடை பிசகினாலும், காலை அறுத்து விடும்.
இத்தனை நாள் ஒழுங்காக நடந்தேனே, இன்று ஒரு நாள் சற்று பிசகி விட்டதே என்று சொன்னால் முடியுமா ? எல்லா நேரமும் எச்சரிக்கையோடு இருக்க
வேண்டும்.
வேலையின் பளு, மேலதிகாரிகளின் நெருக்கடி, பொது மக்களின் எதிர்பார்ப்பு என்று ஏகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவில் வேலை செய்ய வேண்டி வரும்.
சாதாரண பதவிக்கே இப்படி என்றால்,சக்கரவர்த்தி என்றால் எப்படி இருக்கும் ?
பாடல்
கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே!
பொருள்
கோளும் = கோள்களைப் போல தத்தமது வழியில் செல்லும்
ஐம்பொறியும் = ஐந்து பொறிகளும் (புலன்களும் )
குறைய = கட்டுப் பாட்டுக்குள் இருக்க
பொருள் = செல்வத்தை
நாளும் கண்டு =ஒவ்வொரு நாளும் பெருக்கி
நடுக்குறு நோன்மையின் = பகைவர்கள் கண்டு நடுங்கும்படி
ஆளும் அவ் அரசே அரசு = ஆளும் அரசே நல்ல அரசு
அன்னது = அது
வாளின் மேல் வரு மா தவம் = கூர்மையான கத்தியின் மேல் நடப்பது போன்ற பெரிய தவம்
மைந்தனே! = மைந்தனே
ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது அறிவு, ஆற்றல், எல்லாம் இல்லை.
ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது புலனடக்கம். அது இல்லாவிட்டால் மற்றது எது இருந்தும் பலன் இல்லை.
அடுத்து வேண்டியது , பொருளை பெருக்கும் வழி.
மூன்றாவது, பகைவர் நடுங்கும் ஆற்றல்
புலனடக்கம் இல்லாமல் கெட்டான் இராவணன். அறிவு, ஆற்றல், தவ வலிமை என்று எல்லாம் இருந்தும், புலனடக்கம் இல்லாததால் அழிந்தான்.
ஐயா தாங்கள் தமிழுக்குச் செய்யும் இத்தொண்டை வாழ்த்துகிறேன். வளரட்டும் உங்கள் தமிழ்ப்பணி... யார் வாழ்த்தினாலும், தூற்றினாலும், வாழ்த்தவும் தூற்றவும் இல்லாரேனும் தளராது உங்கள் பணி தொடரட்டும்....
ReplyDeleteமேலே தமிழார்வன் அவர்கள் சொன்னது மிக உண்மை...மிக இனிமை.
ReplyDelete