இராமாயணம் - எது முன்னால் சென்றது
இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவு ஆகி விட்டது.
தசரதன், வசிட்டனிடம் இரமானுக்கு வேண்டிய அறிவுரைகளை சொல்லச் சொன்னான். அது ஒரு பண்பாடு.
வசிட்டனும் மகிழ்வுடன் அந்தக் காரியத்தை செய்து முடிக்க விரைவாக இராமன் இருக்கும் இடம் தேடி செல்கிறான்.
வசிட்டன் முந்திப் போனானா அல்லது அவன் உவகை முந்திப் போனதா என்று யார் முன்னால் போனது என்று தெரியவில்லையாம்...
அவ்வளவு மகிழ்வு. நல்ல மாணவனுக்கு சொல்லித் தர வேண்டும் என்றால் ஆசிரியருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும்.
இராமனை விட நல்ல மாணவன் எங்கு கிடைக்கப் போகிறான் வசிட்டனுக்கு...
பாடல்
முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்.
பொருள்
முனிவனும் = வசிட்ட முனிவனும்
உவகையும் = அவனுடைய உவகையும்
தானும் = அவனும்
முந்துவான் = முந்திச் சென்றான். எது முந்தியது ?
மனுகுல நாயகன் = மனு வம்சத்தின் நாயகன், தலைவன்
வாயில் முன்னினான்; = வாசலை அடைந்தான்
அனையவன் வரவு கேட்டு = வசிட்டனின் வரவு கேட்டு
அலங்கல் வீரனும் = மாலை அணிந்த வீரனான இராமனும்
இனிது எதிர்கொண்டு = இன்பத்தோடு எதிரில் சென்று
தன் இருக்கை எய்தினான்.= தன் ஆசனத்தில் அமர்ந்தான்.
தான் ஒரு சக்ரவத்தி ஆகப் போகிறேன் என்ற ஆணவம் இல்லை இராமனிடம்.
ஆசிரியர் வருகிறார் என்றால் எழுந்து , எதிர் சென்று வரவேற்று அமரப்
பண்ணுகிறான். அந்த அடக்கம் வேண்டும். ஆசிரியர் மேல் மரியாதை.
நேரமோ இரவு பின்னேரம்.
சொல்லித் தர ஆசிரியனுக்கு ஆவல்.
கற்றுக் கொள்ள மாணவனுக்கு ஆவல். வேண்டாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று இருவரும் சொல்லவில்லை.
சொல்லி இருந்தால் ஒன்றும் பண்ணி இருக்க முடியாது. இருந்தும் சொல்லவில்லை. எந்த ஒரு பண்பாட்டின் உச்சத்தில் நாம் இருந்திருக்கிறோம்.
இன்று எங்கிருக்கிறோம்....
No comments:
Post a Comment