நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன்
முதியோர் இல்லத்துக்கு, அனாதை பிள்ளகைளை பராமரிக்க, ஏழை குழந்தையின் மருத்துவ செலவுக்கு என்று எத்தனையோ நன்கொடை வேண்டி விளம்பரங்கள் வரும்.
கொடுத்து உதவலாம் என்று நினைப்போம். ஆனால் ஏனோ மறந்து போகும். கொடுக்கக் கூடாது .என்றில்லை..மற்ற விஷயங்களில் மூழ்கி இதை மறந்து போவோம்.
நம்மால் ஒரு அனாதை ஆசிரமம் எடுத்து நடத்த முடியாது. யாரோ செய்கிறார்கள், நம்மால் ஆனதை செய்வோம் என்று நினைப்போம்...செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இராமர் இலங்கைக்குப் போக பாலம் கட்டினார்.குரங்குகள் எல்லாம் மலையைப் பிளந்து கல்லைக் கொண்டு வந்து போட்டு பாலம் செய்தன.
அங்கு ஒரு அணில் இருந்தது.நாமும் இராமருக்கு ஏதாவது உதவி செய்வோம் என்று நினைத்து, ஓடிச் சென்று கடலில் மூழ்கும். அதன் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொள்ளும்.
கரைக்கு ஓடி வந்து உடலை குலுக்கி அந்த மண்ணை கீழே தட்டி விடும். இப்படி கடலின் மண்ணை எல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடலாம் என்று அந்த அணில் எண்ணியது. இராமருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம்.
அந்த அணிலுக்கு இருந்த நல்ல உள்ளம் கூட எனக்கு இல்லையே என்று வருந்துகிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.
பாடல்
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.
பொருள்
குரங்குகள் = வானரங்கள்
மலையை தூக்கக் = மலையை பிளந்து கல்லைத் தூக்கி வந்து பாலம் போட
குளித்துத் = கடலில் குளித்து
தாம் = தான்
புரண்டிட் டோடி = புரண்டு இட்டு ஓடி
தரங்கநீ ரடைக்க லுற்ற = அலையும் கடலை அடைக்க நினைத்து
சலமிலா = சலனம் இல்லாத (இது முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லை)
அணிலம் போலேன் = அணில் போல கூட இல்லாத நான்
மரங்கள்போல் = மரத்தைப் போல
வலிய நெஞ்சம் = வன்மையான மனத்தைக் கொண்ட
வஞ்சனேன் = வஞ்ச மனம் உள்ள நான்
நெஞ்சு தன்னால் = மனதில்
அரங்கனார்க் காட்செய் யாதே = அரங்கனுக்கு ஆட் செய்யாமல்
அளியத்தே னயர்க்கின் றேனே. = அனாவசியமாக வாழ் நாளை வீணடிக்கின்றேனே
நல்ல காரியம் ஏதாவது செய்கிறோமா ?
நல்ல காரியங்களுக்கு உதவி செய்கிறோமா ?
தொண்டரடி தன்னைத் தானே கேட்டு அயர்ந்தார்.
நாமும் கேட்போம்.
Nice......self-introspect
ReplyDeleteசலமிலா = சலனம் இல்லாத (இது முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லை)
Your introspection to th e issue of charity is very thoughtful .Great effort.
ReplyDelete