இராமாயணம் - பரதன் - தவறான வழியில் வந்த செல்வம்
தவறான வழியில் வரும் செல்வத்தை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
இன்று சிக்கல் என்ன என்றால் தவறு செய்ய யாருக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை. மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் கொஞ்சம் இருக்கிறது. மத்தபடி தவறான வழியில் செல்வம் சேர்க்க நிறைய பேர் தயார்தான்.
ஓட்டுக்கு காசு என்றால் வாங்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களை பார்க்கலாம்.
உழைக்காமல், இலவசமாக ஏதாவது கிடைக்கிறது என்றால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள்.
தவறு செய்வதில் சுகமும் சுவையும் வந்து விட்டது.
இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் ஒரு கலை என்றே ஆகி விட்டது இந்த நாட்டில்.
எப்படி சாமர்த்தியமாக கொடுப்பது, எப்படி மாட்டிக் கொள்ளாமல் வாங்குவதில் போட்டி நிலவுகிறது.
இதற்கு வேறு வேறு பெயர்கள் - அன்பளிப்பு, capitation fee , நன்கொடை ,lobby என்று.
தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் கொடுத்தாலும், எப்படி கொடுத்தாலும் தொடக் கூடாது.
அயோத்தியின் அரசாட்சி பொறுப்பை கைகேயி கேட்ட வரத்தால் தசரதன் பரதனுக்கு கொடுத்தான்.
அதை, பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் அவன் மேல் குறை காண முடியாது.
தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் தந்தாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது அதை "தீ வினை" என்று ஒதுக்கி விட்டான் பரதன். நாம் என்றால் "தீ வினை" செய்வது போல அதை எடுத்துக் கொண்டிருப்போம். தீ வினையை யார் ஒதுக்கிறார்கள் ?
சற்று நேரம் யோசித்துப் பார்ப்போம்.
பதவி என்றால் ஏதோ சாதாரண பதவி இல்லை. சக்கரவர்த்தி பதவி. முடி சூடிக் கொண்டால், பரதனை எதிர்த்து யார் பேச முடியும். அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி இருக்கலாம்.
பரதனுக்கு தகாத வழியில் வரும் செல்வத்தின் மேல் துளியும் ஆசை இல்லை. அதை வெறுத்தான்.
எல்லோரும் அப்படி இருந்தால், இந்த நாட்டில் கறுப்பு பணம் இருக்குமா, கொள்ளை, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கோர்ட்டு, வாய்தா, வக்கீல் என்று இதெல்லாம் இருக்குமா ? தனக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் ஆசை வைக்காமல் இருக்கும் ஒரு நல்ல குணம் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்மை என்று யோசித்துப் பாருங்கள்.
‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
தெரியன் அம்மா!
பொருள்
‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்
தாதை உதவிய = தந்தை கொடுத்த
தரணி தன்னை,= இந்த உலகை
‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி
சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி
போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது
புகழினோய்! = புகழ் உடையவனே
தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்
ஆயிரம் இராமர்= ஆயிரம் இராமர்கள்
நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?
தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை
மனத் தூய்மை என்றால் அது பரதன் தான் !
No comments:
Post a Comment