Saturday, August 22, 2015

பிரபந்தம் - மூப்பு வருமுன்

பிரபந்தம் - மூப்பு வருமுன் 




மூப்பு என்பது ஏதோ ஒரு நாளில் வருவது இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் மூப்பு அடைந்து கொண்டே இருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக வயது எறிக் கொண்டே போகிறது.

அங்கங்கே சில பல நரை முடிகள். கண்ணாடியின் வலிமை (பவர்) ஏறிக் கொண்டே போகும். காது கொஞ்சம் கொஞ்சம் கேட்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்லில் பிரச்னை. 

இருந்தும், ஏதோ மூப்பு என்பது பின்னாளில் வரும் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இதைப் படிக்கும் இந்த நேரத்திலும் உங்கள் வயது ஏறிக் கொண்டிருக்கிறது. 

மூப்பு வருவதற்கு முன் எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன ஒரு நாளில் வரும் ஒன்றா என்ன. 

மேலும், மூப்பு வந்த பின், நம் உடல் நம் வசம் இருக்காது.  நட என்றால் கால்கள் நடக்காது. முட்டு வலிக்கும். பேசலாம் என்றால் இருமல் வந்து தடுக்கும். பிறர் சொல்வது காதில் சரியாக விழாது. 

தள்ளிப் போடாதீர்கள். கை கால்கள் மற்றும் ஏனைய புலன்கள் நன்றாக இருக்கும் போது நல்ல விஷயங்களை செய்து விடுங்கள். 

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.....

பாடல்  

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

சீர் பிரித்த பின் 

முற்ற மூத்துக் கோல் துணையாக  முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் ,
பெற்ற தாய் போல்வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

பொருள் 

முற்ற மூத்துக் = ரொம்பவும் வயதாகி 

கோல் துணையாக = கோலைத் துணையாகக் கொண்டு 

முன்னடி நோக்கி வளைந்து = முதுகு காலை பார்க்கப் போவது போல வளைந்து 

இற்ற கால் போல் = உடைந்த காலால் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி 

தள்ளி = தள்ளித் தள்ளி நடந்து 

மெள்ள இருந்து = கொஞ்ச தூரம் நடந்தவுடன், மேலே நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து 

அங்கு = அன்று 

இளையா முன் = மூச்சு இரைத்து வலிமை குன்றும் முன் 
,
பெற்ற தாய் போல்வந்த = பெற்ற தாய் போல வடிவு கொண்டு வந்த 

பேய்ச்சி = பூதகி என்ற அரக்கியின் 

பெரு முலை ஊடு = பெருத்த முலைகளின் ஊடே 

உயிரை = அவளின் உயிரை 

வற்ற வாங்கி = ஒட்ட உறிஞ்சி வாங்கி 

உண்ட வாயான் = உண்ட வாயை கொண்ட கண்ணனை 

வதரி வணங்குதுமே = பத்ரி நாத்தில் வணங்குவோமே 


மூப்பை அறிந்து கொள்ளுங்கள். அது என்றோ வருவது இல்லை.  நாளும் வருவது. ஒவ்வொரு நொடியும் வருவது. 

புலன்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே நல்லதைச் செய்யுங்கள். 

2 comments:

  1. மூப்பும், இறப்பும் இயற்கையானவை. அதற்காக இளமைக் காலத்திலேயே பஜனை செய்து கொண்டே இருக்க முடியாது!

    ReplyDelete