Friday, August 21, 2015

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பாட்டனார் வீட்டில் இருந்து வருகிறான் பரதன். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. நேராக வந்து தாயைப் பார்க்கிறான்.

தான் கேட்ட வரத்தால் தசரதன் மாண்டான், இராமன் கானகம் போனான், நீ அரசு பெற்றாய் என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள் கைகேயி.

அதைக் கேட்ட பரதன் துடித்துப்  போகிறான்.

"உன் சூழ்ச்சியினால் என் தந்தை இறந்து போனான், என் அண்ணன் கானகம் போனான்,  என்ற சொல்லைக் கேட்ட பின்னும், உன் வாயைக் கிழிக்காமல் இருக்கிறேனே...உலகில் உள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் ...பரதனுக்கும் இந்த அரசை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போல என்று தானே சொல்லுவார்கள் " என்று நினைத்து துடிக்கிறான்.


பாடல்

‘மாண்டனன் எந்தை என் தன்முன் மாதவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டில் என் வாய்; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பொருள் 

‘மாண்டனன் எந்தை = என் தந்தை இறந்தான்

என் தன்முன்  = எனக்கு முன் பிறந்தவன்

மாதவம் = பெரிய தவம் செய்ய

பூண்டனன் = தவ வேடம் பூண்டு கானகம் சென்றான்

நின் கொடும் புணர்ப்பினால் = உன்னுடைய பெரிய சூழ்ச்சியால்

என்றால் = என்று

கீண்டில் என் வாய் = கிழிக்க வில்லையே உன் வாயையை

அது கேட்டும் நின்ற யான் = இவற்றை கேட்டும் ஒன்றும் செய்யாமல் இருந்த நான்

ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்? = இந்த அரசை ஆசையால் ஆண்டதற்கு சமம் என்று ஆகும் அல்லவா ?

ஒரு தவற்றை நாமே செய்ய வேண்டும் என்று இல்லை.  நமக்காக மற்றவர்கள் செய்யும் போது அதை தட்டிக் கேட்காமல் இருந்தாலே அந்தத் தவற்றை நாமே செய்தது போலத்தான்.

ஒரு அலுவலகம், ஒரு நிறுவனம், ஒரு அரசு நடக்கிறது என்றால் அதன் தலைமையில் உள்ளவர்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. அவர்களுக்கு கீழே உள்ளவர்களும் ஒழுங்காக இருக்கிறார்களா என்று அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அங்கு நடக்கும் தவறுகள் அவர்களே செய்தது மாதரித்தான்.

பிரதம மந்திரி நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு கீழே உள்ள மந்திரிகளும்  நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, யாரோ ஒரு தவறைச் செய்து அதன் மூலம் நமக்கு ஒரு பலன்  கிடைக்கும் என்றால், அதையும் விலக்க வேண்டும்.

 பரதன் சொல்லிச்  வரம் கேட்கவில்லை கைகேயி

இருந்தாலும், அந்த வரத்தால் வரும் நன்மை தனக்கு வேண்டாம் என்று ஒதுக்குகிறான் பரதன்.

யார் செய்த தவறில் இருந்தும் நமக்கு ஒரு நன்மை வரும் என்றாலும், அது வேண்டாம் என்றே  வைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏன் பரதன் கோடி இராமர்களை விட உயர்ந்தான் என்று தெரிகிறதா ?

இன்னும் வரும்


No comments:

Post a Comment