Friday, August 28, 2015

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும்

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும் 


வாழ்கையை எப்படி இன்பமாக, வெற்றிகரமாக வாழ்வது ?

ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்வில் உயர முடியும்.

நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறேன், தினமும் பல் விளக்குகிறேன், நடை பயிற்சி செய்கிறேன்...யார் பொருளையும் இதுவரை திருடியது கிடையாது ...நான் முன்னேற முடியுமா என்று கேட்கலாம்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் சொல்வது இது.

ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது.

வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏதாவது கீறல் விழுந்தால் அதில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

அதாவது மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல்.

அது, போல உயர்ந்தவர்கள், சான்றோர்கள், படித்தவர்கள் , செய்வதை கண்டு அதன் படி வாழ்வது ஒழுக்கம்.

மேலும், ஒழுக்கம் என்பது துளி போல் விட்டு விட்டு விழுவது அல்ல. விடாமல், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒழுக்கமும் விடாமல் கடை பிடிப்பது.

பெரியவர்கள் செய்த நல்ல செய்கைகளை விடாமல் கடை பிடித்தால் அது ஒழுக்கம் எனப்படும்.

அப்படி வாழ்ந்தால் , வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற முடியும் அல்லவா ?

அந்த ஒழுக்கத்தை வாழ்வில் கடை பிடித்தவன் பரதன்.

எப்படி ?

பாடல்

‘மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் அலது அறநெறி; குறை உண்டாகுமோ?

பொருள் 

‘மாளவும் உளன் ஒரு மன்னன் = தன் வாக்கை காப்பாற்றவும், அரச நெறியை காக்கவும் உயிரையே கொடுத்தான் ஒரு மன்னன் (தசரதன்)

வன்சொலால் = கொடிய சொல்லால் (வரத்தால் )

மீளவும் உளன் ஒரு வீரன் = பதினாலு வருடம் கானகம் போய் மீண்டு வர உள்ளான் ஒரு வீரன்

மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன் = பரந்த இந்த உலகை ஆள உள்ளான் பரதன்

ஆயினால் = ஆகையால்

கோள் அலது அறநெறி; =   அறநெறிக்கு ஒரு குற்றம் இல்லை

குறை உண்டாகுமோ? = ஒரு குறையும் இல்லை


நான் இந்த அரசை ஆண்டால் அது அறநெறிக்கு புறம்பானது, குற்றம் உள்ளது என்கிறான்.

தசரதன், இராமன் என்ற இரண்டு பெரியவர்களை எதுத்துக் கொள்கிறான் பரதன்.

சொன்ன சொல்லைக் காக்கவும், அரச நெறியைக் காக்கவும் உயிரைக் கொடுத்து உயர்ந்தவன்  தசரதன்.

தந்தையின் சொல்லை காப்பாற்ற கானகம் போய் தனை உயர்த்திக் கொண்டவன்   இராமன்.


அவர்களை தன் வாழ்வுக்கு உதாரணமாகக் கொள்கிறான் பரதன்.

நம்மை விட வாழ்வில் உயர்ந்தவர்களை , அவர்களின் வாழ்கை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

தசரதனும், இராமனும் தங்கள் செயல்கள் உயர்ந்தவர்கள்.

செயற்கரிய செய்வார் பெரியார்,  சிரியர் செயற்கரிய செய்கலாதார் என்று வள்ளுவன்  சொன்னது போல, செயற்கரிய செயல்களை செய்து பெரியவர்களாக  உயர்ந்தவர்கள் தசரதனும், இராமனும்.


அவர்களின் வாழ்கையை முன் உதாரணமாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தவன்  பரதன்.

பரதன் உயர்ந்தது இருக்கட்டும்....

நீங்கள் உயர, யாரை முன் உதாரணமாகக் கொண்டிருக்கிறீர்கள் ?

சிந்திப்போம்.



2 comments:

  1. இதைத்தான், வரதுங்க ராம பாண்டியன் கூறியது:

    "செஞ்சுடரின் மைந்தனையும், தென்னி லங்கை வேந்தனையும்
    பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே - விஞ்சு
    விரதமே பூண்டிந்த மேதினியா யாண்ட
    பரதனையும் ராமனையும் பார்"

    இருவர் சகோதரர்களாக இருக்கலா; ஆனால் சகோதரத்வம் இருக்கும் என்று கூறமுடியாது.

    ReplyDelete
  2. ஒழுக்கம் என்ற சொல்லுக்கு நல்ல விளக்கம். நன்றி.

    TRR அவர்கள் எழுதிய பாடலும் நன்றாக இருக்கிறது. "செஞ்சுடரின் மைந்தன்" யாராக இருக்கும் என்று தெரியவில்லை. கர்ணனோ?

    ReplyDelete