இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?
விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்து,பின் இராமனால் சாப விமோசனம் பெறுகிறான். அவன் விண்ணுலகம் போகுமுன் சில சொல்லிப் போகிறான்.
அவன் வாயிலாக கம்பன் இராமனே பரம்பொருள் என்று திகட்ட திகட்ட சொல்லுகிறான்.
பாடல்
பனி நின்ற பெரும் பிறவிக் கடல்
கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்
"நன்று" என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை
மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு,
என் செய்வாரோ?
பொருள்
பனி நின்ற = பனி போல குளிர்ந்த
பெரும் = பெரிய
பிறவிக் கடல் = பிறவி என்ற கடலை
கடக்கும் = கரை ஏற
புணை பற்றி = தெப்பத்தைப் பற்றி
நனி நின்ற சமயத்தோர் = பெரிய சமயங்களைச் சேர்ந்தோர்
எல்லாரும் = எல்லாரும்
"நன்று" என்னத் = நல்லது என்று
தனி நின்ற தத்துவத்தின் = தனிப்பட்டு நின்ற தத்துவத்தின்
தகை மூர்த்தி நீ ஆகின் = உயர்ந்த மூர்த்தி நீ என்றால்
இனி = இனிமேல்
நின்ற = நிற்கும், இருக்கும்
முதல் தேவர் = முதல் என்று சொல்லப் படும் மற்ற தேவர்கள்
என் கொண்டு, = எதைக் கொண்டு
என் செய்வாரோ? = எதைச் செய்வார்களோ ?
பிறவி என்ற பெருங்கடலை கடக்க தெப்பமாக, மற்ற சமயத்தவரும், உன்னை பற்றிக் கொண்டார்கள். உயர்ந்த தனி மூர்த்தி நீ. இது இப்படி என்றால், மற்ற தெய்வங்கள் என்ன செய்யும். ஒன்றும் ஒன்றும் செய்யாது.
பாடலின் சாரம் அது.
கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.
பிறவி என்பது பெரிய கடல்தான். நீந்திக் கடந்து விடமுடியுமா ? கை கால் சோர்ந்து விடும் அல்லவா ? அப்போது பற்றிக் கொள்ள ஒரு தெப்பம் வேண்டும் அல்லவா ? அந்த தெப்பமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பற்றிக் கொள்கிறார்கள்.
கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் , நல்ல துணையாவது நமச்சிவாய என்ற நாமமே என்றார் அப்பர்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
என்பது அவர் வாக்கு.
அந்தப் பிறவிக் கடல் கொஞ்சம் வெது வெதுப்பாக இருந்தால் நீந்த சுகமாக இருக்கும். ஆனால் அது அப்படி இல்லை. பனி போல சிலீர் என்று குளிக்கிறது. அந்தத் தண்ணீரில் எப்படி இறங்குவது. இறங்குவது என்ன இறங்குவது. தூக்கிப் போட்டு விட்டார்கள். நடுங்குகிறது. குளிர்கிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பாய்கிறது.
வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.
அந்தக் குளிர் கடலில் , நீந்திக் கரை ஏற , அனைத்து சமயத்தினரும் இராமனைப் பற்றிக் கொண்டார்கள் என்றால் மற்ற தேவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்கிறார் கம்பர்.
எங்கெங்கோ போய் துன்பப் படாதீர்கள். இராமனைப் பற்றிக் கொள்ளுங்கள். பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கரையேற சிறந்த தெப்பம் அவன் தான்.
இதில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது? என்ன பெரிய கவிதை இன்பம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லை. மன்னிக்கவும்.
ReplyDelete