தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?
மூப்பு கொஞ்சம் சங்கடமான விஷயம்தான். புலன்கள் தடுமாறும். நினைவு தவறும். கண் , போன்ற புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும். பேசுவது கேட்காது. கேட்டாலும் மனதில் நிற்காது. சுற்றி உள்ள இளையவர்கள் , கேலி செய்வார்கள். நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை ஏளனம் செய்வது தாங்க முடியாத ஒன்று தான்.
என்ன செய்வது ? காய்ந்த மட்டையைப் பார்த்து இள மட்டை பரிகசிப்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.
அப்படி ஒரு மூப்பு வருமுன்னம், நல்லதைத் தேடு மனமே என்று மனதிடம் சொன்னால் அது எங்கே கேட்கிறது.
புலன் இன்பங்களின் பின்னால் ஓடுகிறது. உணவு, இசை, உறவுகள், நட்புகள், சினிமா, நாடகம், ஊர் சுற்றல் என்று ஆசைகளின் பின்னால் அங்காடி நாய் போல் அலைகிறது இந்த மனம்.
சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறது. ஒரு வேளை அந்த மனதுக்கும் நமக்கும் ஏதோ பழைய பகை இருக்குமோ ? அதனால் தான் நாம் நல்லது சொன்னால் கேட்காமல் நம்மை தீய வழிகளில் இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகப் படுகிறார் நாவுக்கரசர்.
பாடல்
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.
பொருள்
எழுது = கண்ணில் மை எழுதும்
கொடியிடையார்= கொடி போன்ற இடையைக் கொண்ட
ஏழை மென்றோள் = மெலிந்து இருக்கும் மெல்லிய தோள்கள் கொண்ட
இளையார்கள்= இளம் பெண்கள்
நம்மை யிகழா முன்னம் = நம்மை இகழ்வதன் முன்னம்
பழுது படநினையேல் = கெட்ட வழியில் செல்ல நினைக்காதே
பாவி நெஞ்சே = பாவி நெஞ்சே
பண்டுதான் = முன்பு, பழைய காலத்தில்
என்னோடு =என்னோடு
பகைதா னுண்டோ = உனக்கு பகை ஏதேனும் உண்டோ ?
முழுதுலகில் = முழுமையான உலகில். அனைத்து உலகிலும்
வானவர்கள் = தேவர்கள்
முற்றுங் கூடி = அனைவரும் கூடி
முடியால் =தலையால்
உறவணங்கி = முற்றும் தரையில் பட வணங்கி
முற்றம் பற்றி = முழுவதும் பற்றி
அழுது = அழுது
திருவடிக்கே பூசை செய்ய = திருவடிகளுக்கே பூசை செய்ய
இருக்கின்றான் = இருக்கின்றான்
ஊர்போலும் ஆரூர் தானே = ஊர்தான் திருவாரூர்
வயதாகும். மதி மயங்கும். அதற்கு முன் எது சரியோ அதை செய்து விட வேண்டும்.
உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே , குற்றாலத்தானையே கூறு என்பார் பட்டினத்தார்.
நேற்று வரை எப்படியோ. இன்றில் இருந்து ஆரம்பிப்போமா ?
http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_25.html
மிக அருமை
ReplyDeleteநல்ல கருத்து.அவசியம் காலம் தாழ்த்தாமல் கடை
ReplyDeleteபிடிக்க வேண்டும்