திருக்குறள் - யாமும் உளேம் கொல்
காதலை, பிரிவை, அன்பை, ஏக்கத்தை, ஆண் பெண் உறவின் சிக்கலை ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா ?
வியக்க வைக்கும் காமத்துப் பால். ஒற்றை வார்த்தையில் ஒரு மனதின் அத்தனை உணர்ச்சிகளையும் ஏற்ற முடியுமா ? சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.
பாடல்
யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்
பொருள்
யாமும் = நாங்களும்
உளேம்கொல் = இருக்கிறோமா ?
அவர்நெஞ்சத்து = அவருடைய நெஞ்சத்தில்
எம்நெஞ்சத்து = எங்கள் நெஞ்சில்
ஓஒ உளரே அவர் = அவர் இருப்பது போல
அவ்வளவுதான் பாடல்.
கொட்டிக் கிடைக்கும் உணர்ச்சிகளை எப்படி சொல்லுவது.
அவர் நெஞ்சத்து என்பதால் இது ஒரு பெண்ணின் மன நிலையை குறிக்கும் பாடல் என்று தெரிகிறது.
இரண்டாவது, என் மனதில் அவர் இருப்பது போல அவர் மனதில் நான் இருப்பேனா என்று கேட்பது போல உள்ள பாடல். ஒவ்வொரு வார்த்தையிலும் கொட்டிக் கிடக்கும் அர்த்தம்.
மூன்றாவது, "யாமும்" என்பதில் அவன் மனத்தில் யார் யாரோ இருக்கிறார்கள். நானு'ம்' இருக்கிறேனா என்று கேட்கிறாள். யாம் உளேம் கொல் என்று சொல்லி இருக்கலாம். யாமும் என்ற சொல்லில் அவன் மனதில் வேறு யாரோ இருக்கிறார்களோ என்ற பெண்ணின் இயல்பாலான சந்தேகம் தொக்கி நிற்கிறது.
பாரதி சொல்லுவான் "யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் "என்று. கண்டது அவன் மட்டும் தான். ஆனால், தன்னை சொல்லும் போது "யாம்" என்று கூறுகிறான். ஆங்கிலத்தில் "royal we " என்று சொல்வார்கள். அவள் ஒரு பெரிய இடத்துப் பெண் அல்லது ஏதோ ஒரு சிறப்பு அவளிடம் இருக்க வேண்டும்.
யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்பார் நாவுக்கரசர்.
நான்காவது, "உளேம் கொல்" இருக்கிறோமா என்பது கேள்விக் குறி. இருக்க வேண்டும். ஆனால் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை மறந்திருப்பானோ என்ற பயம் இருக்கிறது.
ஐந்தாவது, யானும் என்று ஒருமையில் சொல்லி இருக்கலாம். யாமும் என்று பன்மையில் சொல்லும் போது ஒரு அன்யோன்யம் விட்டுப் போகிறது. "எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று மனைவி கேட்பதற்கும் "எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.
ஆறாவது, எம் நெஞ்சில் அவரே இருப்பது போல. மீண்டும் பன்மை. எம் நெஞ்சில் என்கிறாள். என் நெஞ்சில் என்று சொல்லி இருந்தால் தளை ஒண்ணும் தட்டி இருக்காது.
ஏழாவது, எம் நெஞ்சில் அவர் இருப்பது போல என்று கூறும் போது , "என் நெஞ்சில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதே மாதிரி அவன் நெஞ்சிலும் நான் மட்டும் தான் இருக்க வேண்டும், வேறு யாரும் இருக்கக் கூடாது" என்று அவள் எதிர்பார்ப்பது தெரிகிறது.
எட்டாவது, "உளரே அவர்" உளர் அவர் என்று சொல்லி இருக்கலாம். உளரே என்ற ஏகாரத்தில் ஒரு அழுத்தம்.ஒரு உறுதி. இராமன் வந்தான் என்று சொல்வதற்கும். இராமனே வந்தான் உள்ளதற்கும் உள்ள வேறுபாடு. இராமன் வந்தான் என்றால் ஏதோ ஒரு ஆள் வந்தான் என்று தெரியும். இராமனே வந்தான் என்றால் ஏதோ வராத , வருவான்னு எதிர்பார்க்காத ஆள் வந்த வியப்பு, சந்தோஷம். அவர் வந்து பத்திரிகை கொடுத்தார் என்பதற்கும், "அவரே" வந்து பத்திரிகை கொடுத்தார் என்று சொல்லுவது போல.
ஒன்பதாவது, ,ஓஒ உளரே அவர். அது என்ன ஓ ஓ ? அந்த ஓ விற்குப் பின்னால் ஆயிரம் அர்த்தம். வேலை முடியலை'யோ' அதனால் என்னை நினைக்க நேரம் இல்லை'யோ' ? ஒரு வேளை உடம்பு கிடம்பு சரியில்லை'யோ' ? நான் ஏதாவது தப்பாக சொல்லி அல்லது செய்திருப்பே'னோ'. அதனால் கோபித்துக் கொண்டிருப்பா"னோ ". ஒரு வேளை இனிமேல் என்னை நினைக்கவே மாட்டா"னோ" என்று ஆயிரம் "ஓ" அந்த இரண்டு ஓஓ வில். இன்னும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு நீங்கள் நீட்டிக் கொள்ளுங்கள். அது ஓஓஓ.....குறளைப் படித்துப் பாருங்கள். அந்த நீண்ட ஓ ஓ புரியும்.
இப்போது இந்த அர்த்தத்தை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
தனிமையில் , பிரிவில் வாடும் ஒரு பெண்ணின் சோகம் ஊதுவத்தி புகையாக பரவுவதை உணர்வீர்கள்.
வார்த்தைகளை சுருக்க சுருக்க கவிதை பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கும்.
அப்படி என்றால் மௌனம் எவ்வளவு உயர்ந்தது ?
http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_22.html
சருங்க சொல்லியே பெரிதாக விளக்குவது எப்படி வைரத்துக்கு பட்டை தீட்டினால் போல ஜொலிக்க செய்கிறதோ.மௌனம் என்னவெல்லாம் செய்யும் என்கிற கேள்வியோடு முடித்தது அருமையாக இருந்தது.
ReplyDelete