இராமாயணம் - வீடணன் சரணாகதி
இராமாயணத்தில் இன்னொரு சிக்கலான பகுதி வீடணன் சரணாகதி.
வீடணன் செய்தது சரியா , தவறா என்ற கேள்வி இன்று வரை பேசப் பட்டுவருகிறது.
விடைதான் கிடைத்தபாடில்லை.
சரி என்று சொல்லுபவர்கள் , வீடணன் அறத்தின்பால் நின்றான், இராமன் என்ற கடவுளின் பக்கம் நின்றான் என்று வாதிடுகிறார்கள்.
தவறு என்று சொல்லுபவர்கள், என்ன இருந்தாலும் அண்ணனை காட்டி கொடுத்திருக்கக் கூடாது, தவறு என்று வீடணன் நினைத்தால் ஒதுங்கி போய் இருக்க வேண்டும்.மாறாக இராமனிடம் போய் ,இராவணனின் இரகசியங்களை சொல்லி இருக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.
எது சரி, எது தவறு என்று அறிய சரியான அளவு கோல் இல்லை.
அது நம் வேலையும் இல்லை.
இதில் இருந்து நமக்கு என்ன பாடம் என்று நாம் பார்ப்போம்.
இராமன் மூன்று பேரை தன் தம்பியர் என்றான்.
குகன், சுக்ரீவன், வீடணன்.
ஏன் மூன்று பேர் ? இன்னும் கொஞ்ச பேரை தம்பி என்று சொல்லி இருந்தால் என்ன குறைந்து போய் விடும்.
அதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது.
குகன், அன்பே வடிவானவன். "தாயின் நல்லான்" என்பான் கம்பன். இராமனை காண வரும்போது தேனும் மீனும் கொண்டுவந்தான் (பிரசாதம்). இராமன் பசித்து இருக்கக் கூடாது என்ற அன்பில் கொண்டுவந்தான். படிப்பு அறிவு இல்லை. அன்பு மட்டுமே அவனிடம் இருந்தது. அது ஒரு பக்தி மார்க்கம்.
சுக்ரீவன் - அன்பால் கரைந்தவன் இல்லை. இராமனுக்காக வேலை செய்தான். சீதையை கண்டு பிடிக்க உதவி செய்தான். சண்டை போட்டான். அது கர்ம மார்க்கம்.
வீடணன் - அன்பு இல்லை, பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் அறிவில் சிறந்தவன். சாத்திரங்கள் அறிந்தவன். நல்லது கெட்டது அறிந்தவன். அறம் எது என்று அறிந்தவன். பெரிய அறிவாளி என்று கம்பன் கூறுவான். இது ஞான மார்க்கம்.
பக்தி, கர்ம, ஞான மார்கத்தில் இறைவனை அடையலாம் என்று கம்பன் சொல்லாமல் சொன்ன சூத்திரம் இது.
பக்தி கொண்ட குகன் , உன்னுடனையே இருந்து விடுகிறான். அந்த 'இன்னலின் இருக்கை ' நோக்கி போக மாட்டேன் என்கிறான். உனக்கு வேண்டிய காய் கனிகளை கொண்டு தருவேன். வழி அமைத்துத் தருவேன் என்று பாகவத கைங்கரியம் பற்றி பேசுகிறான்.
சுக்ரீவன், நடுவில் கொஞ்சம் மறந்தாலும், பின் இராமனுக்கு உதவினான்.
வீடணன் - இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். இராவணன் கேட்க வில்லை. தன் மந்திரகளிடம் கலந்து ஆலோசித்து , இராமனை வந்து அடைகிறான். உணர்ச்சி வசப்பட்டு அல்ல. அறிவினால் ஆராய்ந்து, விசாரித்து கொண்டு வந்து சேர்கிறான்.
பக்தி, கர்மா மற்றும் ஞானத்தின் உச்சம் இறைவனை அடைவதுதான். தானே அங்கே இழுத்துக் கொண்டு போய் விடும்.
கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.
அறிவு , ஆண்டவனிடம் கொண்டு போய் சேர்க்கும் என்பது வள்ளுவரின் முடிவு.
வீடணனை கொண்டு சேர்த்தது எப்படி என்று பார்ப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_29.html
கர்ம, ஞான, பக்தி மார்க்கங்கள் இந்த மூன்று பேர் என்ற பொருள் இனிமை.
ReplyDelete