தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2
நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.
போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.
எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.
இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.
அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.
பாடல்
ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.
சீர் பிரித்த பின்
ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே
பொருள்
ஒன்றி இருந்து = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து
நினைமின்கள் = மனதில் நினையுங்கள்
உம் தமக்கு = உங்களுக்கு
ஊனமில்லை = ஒரு குறையுமில்லை
கன்றிய = மிகுந்த கோபம் உள்ள
காலனை = எமனை
காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்
அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக
சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்
தில்லையுள் = சிதம்பரத்தில்
சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்
நட்டம் = நடனம் புரியும் அவன்
என்று வந்தாய் = எப்ப வந்தாய்
என்னும் = என்று கேட்பது போல தோன்றும்
எம் பெருமான் = என்னுடைய பெருமான்
தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே
ஒன்றி இருந்து நினைமின்கள்: எது ஒன்ற வேண்டும் ? எதோடு ஒன்ற வேண்டும் ?
கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே
ஐந்து புலன்களும் ஒவ்வொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.
கை பூ போடுகிறது.
விழி பிரகாரத்தில் போகும் அந்த சிவப்பு சேலையை பார்க்கிறது
மனம், இன்று அலுவலகத்தில் என்ன மீட்டிங் என்று யோசிக்கிறது
நாக்கு ஏதோ பொய் சொல்கிறது
உடம்பு வேறொன்றில் நாட்டம் கொள்கிறது
செவியோ அருகில் இருப்பவர்கள் பேசுவதை கேட்கிறது
இப்படி இருந்தால், நான் செய்யும் பூசையை எவ்வாறு ஏற்றுக் கொள்வாய் ஈசனே என்று புலம்புகிறார் பட்டினத்தார்.
ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அதோடு மனமும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றி இருந்து நினைமின்கள்.
கன்றிய காலனை காலால் கடிந்தவன் : என்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடுவில் காலனை காலால் உதைத்தவர் என்று ஒரு வரியைப் போடுகிறார் திருநாவுக்கரசர் என்று தோன்றுகிறதா ?
அவர், நாவுக்கு அரசர். அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்வாரா ?
ஐந்து புலன்களும் மனமும் ஒன்றி இருந்தால் என்ன ஆகும் ? ஏன் ஒன்ற வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அது.
மாக்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் என்பது அவர் விதி. அவர் ஆயுள் முடிந்ததும் , அவர் உயிரை எடுக்க காலன் வந்தான். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டி பிடித்துக் கொண்டார். அதற்காக விட முடியுமா ? காலன் அவன் கடமையை செய்ய முயன்றான். அவனை காலால் எட்டி உதைத்து அவன் கடமையை செய்ய விடமால் செய்தது எந்த விதத்தில் நியாயம் ? அந்த சிவனின் செயல் போற்றுதலுக்கு உரியதா ?
தன் பக்தன் என்பதற்காக அவனுக்கு விதியில் இருந்து விலக்கு அளிப்பதா ? சரி, அப்படியே விதிவிலக்கு அளித்தாலும், அதற்கு முன்னும், பின்னும் அப்படி யாருக்கும் விதி விலக்கு அளித்த மாதிரி தெரியவில்லை. மார்க்கண்டேயர் மட்டும் தான் உண்மையான பக்தரா ?
அது அல்ல கதையின் அர்த்தம்.
மார்க்கண்டேயர் மனம் ஒன்று பட்டு இறைவனை வழிபட்டார். அவர் காலத்தை கடந்து விட்டார். காலம் என்பது அவருக்கு இல்லை. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்றெல்லாம் ஒன்று இல்லை. நிகழ் காலம் மட்டும்தான் உண்டு. இறந்த காலம் , எதிர் காலம் என்பதை காட்ட முடியுமா ? இறந்த காலம், இறந்து போய் விட்டது. இனிமேல் அதை காண முடியுமா. எதிர் காலம் வரவே வராது. கானல் நீர் போல அது ஒரு கற்பனை. நம்மால் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது. இருப்பது ஒரே ஒரு காலம்தான். அது தான் நிகழ் காலம். இது புரியாத சாதாரண மனிதர்கள் இறந்த காலம், எதிர் காலம் இவற்றிற்கு இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள்.
யோகிகளுக்கு இறந்த காலமும் இல்லை. எதிர் காலமும் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் உண்டு. அப்படி என்றால் அவர் காலத்தை கடந்து சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை காலம் என்பது இல்லை. அவர் என்றும் பதினாறு என்பதின் தத்துவம், யோகிகள் கால தத்துவத்தை கடந்து சென்று விடுகிறார்கள்.
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவ யோகிகளே காலத்தை வென்று இருப்பார். மரிப்பார் வெறும் கர்மிகளே என்பார் அருணகிரிநாதர்.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.
காலத்தை வென்று இருக்கலாம்.
பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?
என்பார் பத்திரகிரியார்.
பிறப்பும் இறப்பும் அற்ற இடம், காலம் நின்று போன இடம்.
தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் : தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் நாடுகிறான்.
சிற்றம்பலம் - சின்ன அம்பலம். அம்பலம்என்றால் பொது இடம். மேடை மாதிரி.
சிற்றம்பலம் என்று ஒன்று இருந்தால், பேரம்பலம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? எது பேரம்பலம் ? இந்த உலகம் , பிரபஞ்சம் தான் பேரம்பலம். இந்த பேரம்பலம் ஏன் இருக்கிறது ? எதற்காக இத்தனை நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள்...இவை எல்லாம் ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கின்றன. இப்படி சுத்தி சுத்தி அடையப்போவது என்ன ?
ஒன்றும் இல்லை. உலகம் இருப்பதற்கு ஒரு காரணம் இல்லை. நம் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் இல்லை.
இது ஒரு பெரிய விளையாட்டு. லீலா. ரொம்ப சீரியஸ் ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். இறைவனே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறான். நடனம் என்பது ரொம்ப சீரியஸ் ஆன வேலையா ?
நடனம் ஆடி எதை சாதிக்க முடியும் ?
ஒன்றும் இல்லை.
மகிழ்ச்சியாக இருங்கள். சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லம். பாடுங்கள். ஆடுங்கள்.
இந்த உலகம் ஒரு மகிழ்ச்சி பிரவாகம். மனமும் புலன்களும் பிரிந்து கிடந்தால் இந்த மகிழ்ச்சி கிட்டாது. அவை ஒன்றும் போது , காலம் கடந்த இன்பம் பிரவாகமா ஓடும்.
இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, இரவு , பகல் என்ற எல்லாம் இருமைகளும் மறைந்து நிர்மலமான நிலை வரும்.
மேலோட்டமான பாடலுக்கு உள்ளே , எவ்வளவு ஆழ்ந்த பொருள் செறிவு.
நேரம் உண்டாக்கி, தேவாரம் முழுவதும் படியுங்கள். கொட்டிக் கிடக்கிறது.
No comments:
Post a Comment