திருக்குறள் - பின் நோக்காச் சொல்
புறங்கூறாமை.
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது. அது கூடாது என்கிறார் வள்ளுவர்.
பாடல்
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்
பொருள்
கண்நின்று = கண் முன்னால் நின்று
கண்ணறச் = கண் அற . கருணை இல்லாமல் சுடு சொல்
சொல்லினும் = சொன்னாலும்
சொல்லற்க = சொல்லாமல் இருக்க
முன்இன்று = முன்னின்று
பின்நோக்காச் = பின்னால் நோக்க முடியாத
சொல் = சொல்லை
முன் பாதி புரிகிறது.
கண்நின்று கண்ணறச் சொல்லினும்
அது சரி. அது என்ன
முன்இன்று பின்நோக்காச் சொல் ?
முன்னால் சென்ற பின் , அவன் பின்னால் சொல்லக் கூடாது என்று பொருள் சொல்லலாம். ஆனால், "நோக்கா" என்ற சொல் இடிக்கிறது.
நாம் மற்றவர்களைப் பற்றி பிறரிடம் பேசும் போது , ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் இப்போது சொல்வதை , அந்த குறிப்பிட்ட நபரின் முன்னால் சொல்லுவோமா என்று. சொல்ல முடியாது என்றால், அந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.
அவரின் முன் நின்று , பின்னால் ஒரு நாளில் சொல்லுவோமா ? இது ஒரு பொருள்.
நாம் ஒருவரை பற்றி மற்றவரிடம் ஏதோ சொல்லி விடுகிறோம். அந்த விஷயம் எப்படியோ கசிந்து கசிந்து அந்த குறிப்பிட்ட நபரின் காதுகளுக்கு சென்று அடைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
நாம் தான் அதை சொன்னோம் என்பது அவருக்கு தெரிந்து விட்டது. அவருக்கு தெரிந்து விட்டது என்று நமக்கும் தெரிந்து விட்டது.
அதற்குப் பின்னால், அவரை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியுமா ?
அவர் முன் நின்று , பின்னாளில் முகம் பார்த்து பேச முடியுமா ?
முன்னின்று பின்நோக்கா சொல். பின்னடையக் கூடாது.
எனவே,ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் போது , பேசும் விஷயத்தை அந்த குறிப்பிட்ட நபரின் முகத்துக்கு நேரே கூற முடியுமா ? என்று சிந்திக்க வேண்டும்.
ஒருவேளை நாம் இரகசியமாக சொல்வது அவர் காதுக்குப் போய் சேர்ந்து விட்டால், நாம் அவர் முகத்தில் விழிக்க முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும்.
இந்த இரண்டு கேள்விக்கும் முடியும் என்று பதில் சொல்ல முடிந்தால் அதைப் பற்றி பேசலாம். இல்லை என்றால் பேசக் கூடாது.
பேசப்படும் விஷயம் உண்மையா பொய்யா எனப்பதல்ல கேள்வி.
அவர் முன்னால் அதை சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வி.
பொதுவாக , ஒருவரின் குறையை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. அவர்களின் சிறப்பை மற்றவர்களிடம் சொல்லலாம்.
சிலரை நம்பி நாம் எதையாவது சொல்லுவோம். அவர்கள் , யாரிடம் அதை சொல்லக் கூடாதோ அவர்களிடம் போய் சொல்லி நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள். பல உறவுகள் இதனால் முறிந்தது உண்டு. நாள் வாய்ப்புகள் கை நழுவிப் போனது உண்டு.
மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேச வேண்டும்.
நல்லது அல்லாததை அவர்கள் முன் , அவர்களிடம் கூற வேண்டும். அதை கூட வள்ளுவர் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.
கண்நின்று கண்ணறச் சொல்லினும்
கண்ணற என்றால் கண்ணோட்டம் இல்லாமல் என்று அர்த்தம். கண்ணோட்டம் என்றால் கருணை, இரக்கம் , அன்பு என்று பொருள். அன்பில்லாத சொற்களை சொல்லக் கூடாது.
அப்படியே சொல்ல வேண்டி வந்தால் ....என்று சொல்ல வந்தார் ...
"சொல்லினும்" என்று ஒரு ' ம் ' சேர்க்கிறார்.
சொன்னால் கூட என்ற அர்த்தத்தில்.
கருணை இல்லாத சொற்களை சொன்னால் கூட, முன்னின்று பின் நோக்காச் சொல்லை சொல்லக் கூடாது.
எதைச் சொல்லலாம் என்றால், கண்ணோட்டம் உள்ள சொற்களை கூறலாம்.
மற்றவர்கள் மேல் கருணை கொண்டு, அன்பு கொண்ட நல்ல வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும்.
இனிமேல் வேறு யாரையாவது பற்றி பேச வேண்டும் என்றால், இந்தக் குறளை சிந்தித்துப் பாருங்கள்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_62.html
அழகாக நன்றாக புரியும்படி சொன்னீர்கள்.இந்த கருத்தையே சம்ஸ்க்ரிதத்தில் ஒரு ஸ்லோகம் மூலம் சொல்வதுண்டு.
ReplyDeleteसत्यं ब्रूयात् प्रियं ब्रूयात् न ब्रूयात् सत्यमप्रियम् । प्रियम्च नानृतं ब्रूयात् ऐश धर्मः सनातनः ॥
உண்மையை சொல்,பிரியத்தை சொல் .உண்மையாக இருந்தாலும் பிரியமல்லாதவற்றை சொல்லாதே,இதமாக இருப்பினும் பொய்யை சொல்லாதே. இதுதான் சனாதன தர்மம்.
நேரில் பார்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய முறையை இது விவரிப்பது போல் தெரிகிறது. ஆனால் வள்ளுவர் ஒரு படி மேல் போய் ஒருவர் பின்னாலிருந்தும் சொல்லக்கூடாது என்கிறார்.