Monday, January 29, 2018

திருக்குறள் - நட்பு - ஊதியம்

திருக்குறள் - நட்பு - ஊதியம்



ஒருவருக்கு ஊதியம் என்பது பேதையரின் நட்பை விடுவது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்

ஊதியம் = ஊதியம், பேறு ,

என்பது = என்பது

ஒருவற்குப் = ஒருவருக்கு

பேதையார் = அறிவில்லாதவர்

கேண்மை = நட்பை

ஒரீஇ விடல் = விலக்குதல் , விட்டு விடுதல்


அவ்வளவுதான் அர்த்தம்.

அறிவில்லாதவர் சேர்க்கையை விட்டு விட்டால் எப்படி நமக்கு அது ஊதியமாகும் ?

ஊதியம் என்றால் என்ன ?

இப்போதைக்கு வருமானம், சம்பளம், இலாபம் என்று வைத்துக் கொள்வோம். பின் மற்றவரை சேர்க்கலாம்.

நமக்கு  ஊதியம் வேண்டும் என்றால் என்ன  செய்ய வேண்டும் ?

நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும்.

அறிவில்லாதவர்களுடன் சேர்ந்தால் இது எல்லாம் நடக்காது என்கிறார்.

எப்படி என்று  பார்ப்போம்.

நல்ல கோர்ஸில் சேர்ந்து படிக்க வேண்டும். எது நல்ல கோர்ஸ் ?

நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். எது நல்ல கல்லூரி ?

நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும். எது நல்ல நிறுவனம் ?

இப்படி நிறைய கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தால் தான் நல்ல ஊதியம் கிடைக்கும். அது,  மூடர்களோடு சேர்ந்தால் கிடைக்காது.

இரண்டாவது, அறிவற்ற பேதைகள் தங்கள் நேரத்தை வீணடிப்பது மாத்திரம் அல்ல,  நமது நேரத்தையும் சேர்த்து வீணடித்து விடுவார்கள். நல்ல ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு அவர்களால் நழுவிப் போய் விடும்.

மூன்றாவது, அவர்கள் தவறான வழியில் செல்லும் போது , அவர்களோடு சேர்ந்த நம்மையும்  உலகம் தவறாகத்தான் நினைக்கும். காட்டில் வேங்கை மரம் தீப் பிடித்து எரியும். அதோடு கூட , அருகில் உள்ள சந்தன மரமும் சேர்ந்து எரியும் . தீயவர்களோடு, அறிவற்ற மூடர்களோடு சேர்ந்து திரிந்தால் உலகம் நம்மையும் அப்படித்தான் பார்க்கும்.

மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.



நான்காவது, அறிவுள்ளவர்களோடு சேரும் போது , அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று ஒரு உத்வேகம், உற்சாகம் பிறக்கும். அது நம்மை நல் வழிப் படுத்தும்.

உங்களுக்கு ஊதியம் வேண்டுமா ? அறிவற்ற பேதைகளின் சகவாசத்தை விடுங்கள். நாளடைவில் உங்கள் ஊதியம் தானாக உயர்கிறதா என்று பாருங்கள்.

அறிவற்ற பேதைகள் நேரில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

Whatsapp , Facebook போன்றவற்றின் மூலமும் நமது பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

வெட்டி அரட்டை. தேவையில்லாத forward , அர்த்தம் இல்லாத விவாதங்கள் என்று காலம் போய் விடும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அறிவற்றவர்களின் நடப்பை எல்லா விதத்திலும் தவிர்க்க வேண்டும். அதுவே நல்ல ஊதியம் காண வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/01/blog-post_79.html



அது மட்டும் அல்ல, நாமும் அப்படி ஒரு நண்பராய் மற்றவர்களுக்கு இருக்க வேண்டும்.





2 comments:

  1. எல்லா இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.ரொம்ப உசத்தி.

    ReplyDelete
  2. கடைப்பிடிக்க வேண்டிய செய்தி.

    ReplyDelete