வினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை
சமயங்கள் பல வித செய்திகளை சொல்லுகின்றன. இறைவன், ஆத்மா, வீடு பேறு , புலன்களின் மாயத் தன்மை, கர்ம வினை, பாவம், புண்ணியம் என்று பலவிதமான விஷயங்களை பற்றி கூறுகின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதை காணலாம். அந்த முரண்களை விலக்க மேலும் பல விதிகளை சமயம் படைக்கிறது. சட்டத்தில் ஓட்டைகளும், அந்த ஓட்டைகளை சரி செய்ய மீண்டும் ஒரு சட்ட திருத்தம் வருவதும் போல இவை முடிவு இல்லாமல் போய் கொண்டே இருக்கின்றன.
ஒன்றிலிருந்து ஒன்றாக, மீண்டும் மீண்டும் சுத்திக் கொண்டே இருக்கும்.
ஒரு கால கட்டத்தில் இவை எல்லாம் சரியா ? இல்லை நம்மை போட்டு குழப்பும் உத்திகளா என்ற சந்தேகம் நமக்கு வரலாம்.
பெரும்பாலோனர் இதற்குள்ளே போவது இல்லை . கோவிலுக்குப் போனோமா , சாமி கும்பிட்டோமா, அர்ச்சனை பண்ணினோமா, பிரசாதம் வாங்கினோமா என்று வந்து விடுகிறார்கள். இந்த தர்க்க சிக்கலுக்குள் எல்லாம் போய் மண்டைய உடைத்துக் கொள்வது இல்லை.
இதையெல்லாம் கேட்டு, நம் அறியாமையை நாம் ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி போய் விடுவார்கள்.
வினா வெண்பா என்ற சைவ சிந்தாந்த நூல், இந்த அடைப்படை சித்தாங்களை கேள்வி கேட்கிறது. கேள்வி கேட்பது மட்டும் அல்ல, சில சமயம் கேலியும் செய்கிறது.
பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன.
அதில் இருந்து ஒன்று
பாடல்
ஒன்றி நுகர்வதிவன் ஊணும் உறுதொழிலும்
என்றும் இடையில் இடமில்லை - ஒன்றித்
தெரியா அருள்மருதச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.
பொருள்
ஒன்றி = ஒன்றாக
நுகர்வதிவன் = நுகர்வது இவன்
ஊணும் = உடலும்
உறுதொழிலும் = செய்யும் பெரிய தொழிலும்
என்றும் = எப்போதும்
இடையில் = இரண்டுக்கும் இடையில்
இடமில்லை = இடம் இல்லை
ஒன்றித் = ஒன்றாகத்
தெரியா = தெரியாத
அருள்மருதச் சம்பந்தா = சம்பந்தனே
சேர்ந்து = சேர்ந்து
பிரியா = பிரியாமல்
வாறு எவ்வாறு = இருப்பது எவ்வாறு
பேசு = சொல்
அதாவது,
இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறான் என்றால், எனக்குள்ளும், நான் அனுபவிக்கும் பொருள்களின் உள்ளும் அவன் இருக்கிறான் அல்லவா.
அப்படி என்றால், புலன்கள் எவ்வாறு எதையும் அனுபவிக்க முடியும் ? அனுபவம் என்பது அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது என்று என்ற இரண்டு வேண்டும் அல்லவா. இரண்டுமே இறைவன் தான் என்றால், பின் அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?
"ஊணும் உறுதொழிலும்" : ஊன் என்பது இந்த உடல். உறு தொழில் என்பது அனுபவம்.
"என்றும் இடையில் இடமில்லை ": இரண்டுக்கும் இடையில் இடைவெளி இல்லை. அனுபவம் பெறுபவனுக்கும், அனுபவத்துக்கும் இடையில் இடைவெளி இல்லை . இரண்டுமே ஒன்றுதான் என்றால், அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றான் என்றால், அவனை நாம் ஏன் வணங்க வேண்டும். வணங்குவது யார், வணங்கப் படுவது யார் ? எல்லாமே இறைவன் இறைவன் தான் என்றால் , இறைவனே ஏன் இறைவனை வணங்க வேண்டும் ?
இல்லை..இல்லை...இது ஜீவாத்மா, அது பரமாத்மா என்று வேறு வேறானவை என்றால், இப்படி இது வேறானது ? யார் இந்த வேற்றுமையை தோற்றுவித்தது.
சரி, வேற்றுமை எப்படியோ வந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். பின் எப்படி இரண்டும் ஒன்றாகும் ? யார் சேர்த்தது வைப்பது ?
"சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு"- சேர்ந்து இருந்தது எப்படி பிரிந்தது ? பிரிந்தது பின் எப்படி சேரும், சொல்லு என்று கேட்கிறார்.
இந்த தத்துவ விசாரங்கள் எல்லாம் மனிதனே உண்டாக்கியவை. இதில் கிடந்து உழலாதே என்கிறார். இவை எல்லாம் மனிதர்களின் கற்பனையில் உதித்தவை. இவற்றில் இருந்து உண்மையை கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்.
எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. கேள்வி கேள். ஆராய்ச்சி பண்ணு என்கிறது.
இதில் உள்ள சிறப்பு என்ன என்றால், சைவ சித்தாந்தங்களை கேள்வி கேட்ட , கேலி செய்த இந்த வினா வெண்பாவை திருமுறை என்று கொண்டாடுகிறது சைவம். அது சைவத்தின் சிறப்பு. கேள்வி கேட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவது அல்ல சமயம். கேள்வி கேள். தேடு. கிண்டல் செய். ஆனால், தேடும் முயற்சியை விடாதே என்று சொல்வதாக, இந்த வினா வெண்பாவை திருமுறையாக ஏற்றுக் கொண்டது.
சைவ சமயத்தின் உன்னதம் அது.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனை, நக்கீரத் தேவர் என்று கொண்டாடியது.
சிவனை சைவ சமயத்தில் இருந்து தள்ளி வைக்கிறேன் என்று சொன்னவரை நாயன்மார் வரிசையில் வைத்து அழகு பார்த்தது சைவம்.
கேள்வி கேளுங்கள் . எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
அதுவே உண்மையான ஞானத்தின் முதல் படி.
ஞானம் விடுதலை தரும்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_18.html
இந்த மாதிரி யோசனைகளெல்லாம் முதலில் தோன்றவே இல்லையெனினும், நீங்கள் கேள்விகளை எழுப்பிய பின்னர் விடை தெரியாது குழம்பி போனதுதான் வாஸ்தவம். இந்து சமயத்திலே தர்க்கத்திற்கும் வாதத்திற்கும் இடம் உண்டு.ஓடி ஒளிவதில்லை.ஆனால் இது போன்ற வினாவிற்கு பதிலும் எளிதில் கிடைப்பது இல்லை.மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
ReplyDeleteஇதுபோன்று மேலும் பல பாடல்களை விளக்க வேண்டும்.சமயம் தமிழ் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இரண்டுமே அழியாத்தன்மை பெறுகின்றது.
ReplyDeleteநீங்கள் வழமை போல அழகாக எழுதியிருக்கிறீர்கள். சைவ சித்தாந்தம் எல்லோராலும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல. வினா வெண்பா என்பது மாணாக்கன் தன் குருநாதரை நோக்கி வினா எழுப்புவது போல அமைந்தது. கேள்வி கேட்கும் நிலையிலுள்ள மாணாக்கனொருவன் ஆசங்கைகளோடுதான் கேள்வி கேட்பான். அதுவும் உமாபதிசிவம் ஏதுந் தெரியாத ஒரு மாணாக்கனது நிலையில் தன்னைப் பாவனை செய்து கொண்டே வினாக்களை எழுப்பியிருக்கிறார். எனவே அப்படிப்பட்ட வினாக்கள் கேலி செய்வது போலவே தெரியும். சித்தாந்த அறிவில்லாதவன் அப்படித்தான் கேட்பான். அப்போதுதான் அவ்வாறான வினாக்களைக் கேட்பவர்களுக் சரியான விளக்கத்தைக் கொடுக்க முடியும்.அதனூடாக சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அறியத் தரலாம். இவ்வினாவிற்கான விடையைத் தெளிவாக அறிந்து கொண்டிருந்தால் இப்படி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பதைப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன். தங்கள் அரும்பணிக்கு எனது வாழ்த்துகள். நன்றி.
ReplyDelete