108 திவ்ய தேசம் - திருவாலி
ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.
ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.
அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.
"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.
பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.
இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.
பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.
கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.
பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?
இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.
அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம் மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.
அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.
சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.
மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.
"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே, மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "
என்று வண்டை தூது விடுகிறார்.
பாடல்
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
பெரியதிருமொழி 3-6-1
பொருள்
தூவிரிய = சிறகுகள் விரிய
மலருழக்கித் = மலரின் உள்ளே சென்று
துணையோடும் = உன் துணையோடு
பிரியாதே = எப்போதும் பிரியாமல்
பூவிரிய = மலர் விரிந்து
மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்
பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட
சிறுவண்டே = சிறு வண்டே
தீவிரிய = தீ வளர்த்து
மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்
புகழாளர் = புகழ் படைத்தவர்கள்
திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்
ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான
வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்
கென்னிலைமை யுரையாயே = என் நிலைமையை சொல்ல மாட்டாயா
மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.
உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.
அது என்ன அர்த்தம் ?
https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html
என்ன அர்த்தம்என அறிய் உங்கள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDelete