Sunday, October 7, 2018

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்


அது ஒரு அடர்த்த காடு. அதில் தனியாக நீங்கள் போய் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஐந்து பெரிய கரிய மதம் கொண்ட யானைகள் உங்களை வளைத்து விடுகிறது. என்ன செய்வீர்கள்?

எதிர்த்து போராட முடியுமா? ஒரு யானையோடு போரிடுவதே முடியாத காரியம். ஒருவேளை ஒரு யானையை எப்படியாவது சமாளித்து விடலாம் அல்லது அதனிடம் இருந்து தப்பி ஓடி விடலாம் என்றால் இங்கே ஐந்து யானைகள். ஐந்தும் மதம் கொண்ட பெரிய யானைகள்.

சிக்கினால் சட்னி தான்.

நீங்கள் ஒண்ணும் காட்டுக்குப் போகப் போவது இல்லை. யானையும் வரப்போவது இல்லை. ஒரு வேளை அப்படி ஒன்று நடந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

ஏன் என்றால்....

நீங்கள் அப்படி ஒரு சிக்கலில் நாளும் இருக்கிறீர்கள். யானை பக்கத்திலேயே இருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை. அவை உங்களை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறது. அது தெரியாமல் இருக்கிறீர்கள்.

மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

"என்னுடைய ஐந்து புலன்களும் பெரிய கரிய யானைகள் போல என்ன மிரட்டுகின்றன...அவற்றிற்கு அஞ்சி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்ப  எந்த யானை வந்து என்னை தூக்கிப் போட்டு மிதிக்குமோ தெரியாது...என்னை காப்பாற்று " என்று கதறுகிறார்.

ஆபத்து தெரிந்ததால் அலறுகிறார். நம்மக்குத் தெரியவில்லை....

பாடல்

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்கும் கறைக்கண்டனே.


பொருள்

அடற்கரி போல் = அடல் + கரி = மிக வலிமையான யானையைப் போல

ஐம் புலன்களுக் கஞ்சி = ஐந்து புலன்களுக்கு அஞ்சி

அழிந்த என்னை = நாளும் அழியும் என்னை

விடற்கரி யாய் = விட்டு விட முடியாதவனே

விட்டிடுதி கண் டாய் = என்னை விட்டு விடாதே

விழுத் தொண்டர்க்கல்லால் = விழுமிய தொண்டர்களுக்கு அல்லாமல்

தொடற்கரி யாய் = மற்றவர்கள் உன்னை நெருங்க முடியாது

சுடர் மாமணியே = சுடர் விடும் மணி போன்றவனே

சுடு தீச்சுழலக் = சுடுகின்ற தீ சுழல

கடற்கரி தாய் = கடல் + அரிதாய் = கடலில் அபூர்வமாக

எழு நஞ்சமு தாக்கும் = எழுந்த நஞ்சை அமுதாக்கியவனே

கறைக்கண்டனே = கண்டத்தில் (கழுத்தில்) கறை உள்ளவனே


இறைவன் விடுவதற்கு அறியதானவன். ஒரு முறை அவனை பிடித்து விட்டால், பின் அவனை விட முடியாது.

அப்படி அவனை கண்டு கொண்டவர்கள் வேறு எதுவும் வேண்டாம், உன்னை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

உன்னுடைய பச்சை மேனியும், பவளம் போல் சிவந்த வாயும், தாமரை போல் சிவந்த கண்ணும்...இவற்றை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன். அந்த சுவர்க்கம் எல்லாம் வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.


குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.


என்பார் நாவுக்கரசர்.

குனித்த (வளைந்த) புருவம், கொவ்வை செவ்வாய், அதில் குமிழியிடும் சிறப்பும், குளிர்ந்த சடையும், சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறும், இனிமையாக எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால், மீண்டும் மீண்டும் இங்கு மனிதராக பிறக்கும் வரமே வேண்டும் என்கிறார்.

மணி வாசகர் சொல்கிறார்,  இறைவா உன்னை விட முடியாது என்று.

நாளும் ஐந்து புலன்களுக்கு அஞ்சி வாழ்கிறேன். என்னை இந்த பயத்தில் இருந்து காப்பாற்று என்கிறார்.

அவரால் காப்பாற்ற முடியுமா ?

முடியும் என்றும் சொல்கிறார்.

தேவர்களும் அசுரர்களும் பாற் கடலை கடைந்த போது கொதிக்கும் கொடுமையான நஞ்சு வந்தது. அந்த நஞ்சையே அமுதமாக எண்ணி உண்டு அதனால் கழுத்தில் கரிய கறை கொண்டவனே, அவ்வளவு பெரிய ஆபத்தையே நீ எளிதாக சமாளித்து விட்டாய். என்ன காப்பதா பெரிய பிரமாதம் உனக்கு என்று ஆண்டவனுக்கு ஐஸ் வைக்கிறார்.

இறைவனை எப்படி அடைவது என்றும் இடையில் சொல்லுகிறார். புத்தகங்களை படித்து , ஆராய்ந்து, தர்க்கம் பண்ணி புத்தியால் அவனை அடைய முடியாது. மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன்.

சித்தமும் செல்லா சேயோன் காண்க

என்பார் மணிவாசகர். சித்தத்தால் அவனை அறிய முடியாது.


"விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்" தொண்டு செய்வதன் மூலம், பக்தியின் மூலமே அவனை அடைய முடியும் என்கிறார்.

இறைவனைத் தவிர வேறு யாரும் நம்மை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் சொல்லாமல் சொல்கிறார்.

நீத்தல் விண்ணப்பம் நூறு பாடலைகளை கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். வேறு எதையும் படிக்கத் தோன்றாது.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_7.html

2 comments:

  1. இதற்கு முன்பே விடுதல் விண்ணப்பம் இந்த blogஇல் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அருமை. நன்றி.

    ReplyDelete
  2. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது.

    ReplyDelete