Saturday, October 20, 2018

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த 



நம்முடைய குழப்பங்களுக்கு ஒரு அளவு இருக்கிறதா? முதலில் நமது சொத்து மற்றும் உடமைகள்.


எவ்வளவு சொத்து சேர்ப்பது? பெரிய வீடு,  அதில் ஒரு நீச்சல் குளம், நாலைந்து காரு, பத்து பதினைந்து வேலைகாரர்கள் என்று  ஒரு பட்டியல் நீளும். ஆசை ஒரு புறம். பயம் ஒரு புறம். நம்மை விட அதிகம் இருப்பவனைப் பார்த்து பொறாமை, நம்மை விட குறைவாக உள்ளவனைப் பார்த்து ஒரு பெருமை....இப்படி கொஞ்சம் குழப்பங்கள்.


மனைவி ... என் மனைவியை விட அவன் மனைவி அழகாக இருக்கிறாள், அவளுக்கு பாட வரும், வீட்டை எப்படி பார்த்துக் கொள்கிறாள்,  எனக்கும் ஒன்று வாய்த்து இருக்கிறதே என்று கவலைப் படாதவர் யார்?


பிள்ளைகள் ... என்ன படித்தாலும் , இன்னும் படிக்கவில்லையே என்ற ஆதங்கம். நன்றாகக் படித்தால் பார்க்க இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம். இப்படி கொஞ்சம் குழப்பம்.


குலம்...உயர் குலத்தில் பிறந்தால் பெருமை, ஆணவம். இல்லை என்றால் தாழ்வு மனப்பான்மை.


கல்வி ... வித்யா கர்வம், படித்ததால் வரும் கர்வம், இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆசை, அதனால் மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணம்


பிறப்பு...இறப்பு ....இது பற்றிய குழப்பங்கள். இறப்புக்குப் பின் என்ன, பிறவியின் நோக்கம் என்ன, மறு பிறப்பு உண்டா ?


இந்த குழப்பங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?


தண்ணீர் கலங்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்யக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். அதுவே தெளியும். வண்டல் எல்லாம் அடியில் சென்று தங்கி விடும். தெளிந்த நீர் மேலே நிற்கும்.


மாறாக, அது தெளிந்து விட்டதா, இல்லையா என்று ஓயாமல் அதில் கரண்டியை விட்டு கிண்டிக் கொண்டே இருந்தால் அது தெளியவே தெளியாது.


எதைப் படிப்பது, யாரைக் கேட்பது, எந்த கடவுளை கும்பிடுவது, எப்படி கும்பிடுவது, எந்தக் கோவில், என்ன பூஜை என்று அலை பாயக் கூடாது.


பொறுமை. அமைதி.


பதட்டம் கொள்ளாமல், அமைதியாக இருக்கப் பழகினால், சித்த சலனங்கள்
அடங்கும். தெளிவு பிறக்கும்.


மணிவாசகர் சொல்கிறார்.


பாடல்


வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24


பொருள்


வைத்த நிதி = சேர்த்து வைத்த செல்வம்


பெண்டிர் = மனைவி


மக்கள் = மக்கள் , பிள்ளைகள்


குலங் = குலம்


கல்வியென்னும் = கல்வி என்று


பித்த உலகிற் = பித்துப் பிடித்த உலகில்


பிறப்போ டிறப்பென்னுஞ் = பிறப்போடு இறப்பு என்னும்


சித்த = சித்த


விகாரக் = மாற்றம்


கலக்கம் = கலக்கம்


தெளிவித்த = தெளிவு அடையும்படி செய்த


வித்தகத் தேவற்கே = உயர்ந்த தேவற்கே


சென்றூதாய் = சென்று நீ ஊதுவாய்


கோத்தும்பீ = கோ + தும்பி , உயர்ந்த வண்டே


மண்டையை போட்டு கிண்டாதீர்கள். மேலும் குழப்பம் தான் விளையும். தேடல் தொடர தொடர குழப்பம் அதிகரிக்கும்.


வரும்போது வரட்டும்.


மாலும் அயனும் தேடியே கிடைக்கவில்லை. நம்மாலா தேடிவிட முடியும்.  தேடினால்  கிடைக்காது என்பது அதன் பொருள்.


தேடுவது நிற்கும் போது உடலிலும் மனத்திலும் ஏறிய முறுக்கு குறையும். இரண்டும் லேசாகிப் போகும்.


தேடுதல் வியர்த்தம் என்று அறிந்த அன்று சித்தார்த்தன், புத்தன் ஆனான்.


மனதை தெளிய விடுங்கள். கலக்கங்கள் மறையும். அமைதி பிறக்கும்.


https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_20.html

2 comments:

  1. இந்த வாழ்க்கை விவகாரங்களில் மனதை அலையின் விடாமல் இருந்தால் தெளிவு பிறக்கும்.சரிதான்
    தேடுதல் நிற்க வேண்எடும்ன கூறுகிறேர்களே அது எதை குறிக்கின்றது? தெய்வத்தை மனதால் எப்பொழுதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டுமல்லவா?

    ReplyDelete
  2. திருவருளுக்கு அடியேனுடைய மன மொழி மெய்களால் நன்றி கலந்த வணக்கம் கூறி மகிழ்கிறேன்.தொடர் தேடலின் விளைவாக அவனே வந்து உம்மை சரண் அடைவான்.

    ReplyDelete