நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்றொன்றினை காணாதே
வீட்டில் சின்ன குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும். சீருடை உடுத்து, பையை தூக்கிக் கொண்டு போவார்கள். அப்படி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வரும் பெற்றோர்களுக்கு வரும் வழியில் உள்ள பிள்ளைகளை பார்ப்பார்கள். எல்லா பிள்ளைகளும் , தங்கள் பிள்ளைகளைப் போலவே இருக்கும்.
காதலிப்பவர்களுக்கு தெரியும்...காதலிப்பவர் ஆணாக இருந்தால் ..எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர்களின் காதலி போலவே தோன்றும். யாராவது பெண் எதிரில் வந்தால், தங்கள் காதலியே வருவது போல இருக்கும்.
இவை மானுட அனுபவங்கள்.
இறை அனுபவங்கள் உள்ளவர்களுக்கு உலகில் எதைப் பார்த்தாலும் இறைவனை பார்ப்பது போலவே இருக்கும். எல்லாம் இறை மயமாகத் தெரியும்.
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
என்பார் பாரதியார். காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களில், கேட்கும் ஒலியில் எல்லாம், தீயின் சூட்டில் எல்லாம் கண்ணனை கண்டார் பாரதியார்.
"எங்கெங்கும் காணினினும் சக்தியடா தம்பி அவள் ஏழு கடல் அவள் வண்ணமடா" என்பார் பாரதிதாசன்.
மனமெல்லாம் எது நிறைந்திருக்கிறதோ, அதுவே எங்கும் தெரியும்.
பாணாழ்வார் பாடுகிறார்...அவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே என்று.
பாடல்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!
பொருள்
கொண்டல் = நீர் கொண்ட மேகம்
வண்ணனைக் = அது போல கரிய வண்ணம் கொண்டவனை
கோவலனாய் = கோகுலத்தில் பிறந்து
வெண்ணெய் = வெண்ணெய்
உண்டவாயன் = உண்ட வாயை உடையவனை
என் உள்ளம் கவர்ந்தானை = என் உள்ளம் கவர்ந்தவனை
அண்டர்கோன் = தேவர்களுக்கு தலைவனை
அணி அரங்கன் = திருவரங்கத்தின்
என் அமுதினை = என் அமுதம் போன்றவனை
கண்ட கண்கள் = கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாதே! = வேறு எதையும் காணாதே
இதில் கடைசி வரிக்கு, "அவனை மட்டுமே பார்க்கும். வேறு யாரையும், எதையும் பார்க்க மாட்டேன் " என்று ஆழ்வார் கூறியதாகத்தான் பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.
எனக்கு சற்று வேறு விதமாக தோன்றுகிறது.
ஒரு முறை இறை அனுபவம் பெற்றவர்களுக்கு உலகில் உள்ள அனைத்துமே இறைவனின் வெளிப்பாடாகவே தோன்றும். எதைப் பார்த்தாலும் அவனாகவே தோன்றுவதால், "அவனை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே" என்று கூறியதாகத்தான் தோன்றுகிறது.
பிள்ளைகளிடம் பெற்றோரின் சாயல் இருக்கும்.
பூனை குட்டி பூனை மாதிரி இருக்கும்.
புளியங்கன்று புளிய மரம் போல இருக்கும்.
இதில் இருந்து ஒன்று தோன்றுகிறதோ, மூலத்தின் சாயல் அதில் இருந்து தோன்றியதில் இருக்கத்தானே செய்யும்.
இந்த உலகம் எல்லாம் இறைவன் படைத்தது என்றால், இறைவனின் சாயல் அனைத்திலும் இருக்கும் அல்லவா ?
மலத்தில் இறைவன் இருக்கிறான். அதையும் கும்பிடு என்கிறார் பாரதியார். இந்த உலகம் அனைத்தும் இறைவன் என்றால், மலமும் இறைவன் படைப்புத்தான் , அதிலும் அவன் இருக்கிறான் என்ற மிக உயர்ந்த இறை அனுபவம் அவருக்கு.
கீழான பன்றியில், குப்பை கூளத்தில் இறைவனை கண்டவர் அவர்.
கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.
கழுதை, பன்றி, தேள், கூளம் , மலத்தினையும் வணங்க வேண்டும் என்கிறார்.
சரி இப்படித்தான் பாணாழவார் நினைத்துப் பாடி இருப்பாரா? தெரியாது.
கொண்டல் வண்ணனை என்கிறார்.
கரிய மேகம் என்று பொருள் சொல்லி விடலாம்.
சற்று யோசித்தால் தெரியும்...மேகம் நல்லவன், கெட்டவன் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், முட்டாள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக பெய்கிறது.
அது போல இறைவனுக்கு எந்த பேதமும் இல்லை. எல்லோரும் சமம் அவன் முன்னால் என்பதற்காக "கொண்டல் வண்ணன்" என்று கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
பாணாழ்வார் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். அந்த பத்து பாடல்களை ஆராய்ச்சி செய்து முனைவர் (doctr ) பட்டம் பெற்று இருக்கிறார்கள். அவ்வளவு அர்த்தம் இருக்கிறது. அவ்வளவு ஆழம்.
படித்துப் பாருங்கள்.
https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_13.html
ReplyDelete"மற்றொன்றினைக் காணாதே" என்பதற்கு நல்ல பொருள் சொல்லி இருக்கிறாய். அருமை.