Thursday, June 13, 2019

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம்

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம் 


ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று.

மற்ற காப்பியங்களில் இருந்து மிக மாறுபட்டது சிலப்பதிகாரம்.

இராமாயணமும், பாரதமும் வேற்று மொழியில் எழுதப்பட்டு பின் தமிழில் மடை மாற்றம் செய்யப்பட்டது.

அதில் உள்ள கதா பாத்திரங்கள் நமக்கு அந்நியமானவர்கள். அவர்கள் பெயர், அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நம்மில் இருந்து வேறுபட்டது.

கடவுள்கள் அவதாரங்களாக வந்து காப்பியத்தை வழி நடத்திப் போனார்கள்.

சிலப்பதிகாரத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

நம்ம ஊர் மதுரை, திருச்சி, பூம்புகார் என்று நம்மைச் சுற்றி நிகழ்ந்த கதை. கோவலன், கண்ணகி, மாதவி, என்ற கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராய் உள்ள கதா பாத்திரங்கள்.

பலவீனமான கதாநாயகன். வரம் வாங்கி, போர் செய்து, பெரிய தாதா கிடையாது. பணக்கார வீட்டுப் பையன். விலை மகள் பின் போனவன். சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு வெறும் கையோடு வருகிறான். ஒரு கொல்லன் போட்டுக் கொடுக்க, வெட்டுப் பட்டு சாகிறான்.

பூவாக இருந்த கதாநாயகி, எரிமலையாக வெடிக்கிறாள். ஊரையே எரித்து சாம்பலாக்குறாள்.

இராமாயணத்தில் சீதை, மிகுந்த ஆற்றல் உள்ளவள் தான்.

இந்த உலகை எல்லாம் என் சொல்லால் சுட்டு எரித்து விடுவேன் ஆனால் அது இராமனின்   வில்லாற்றலுக்கு மாசு என்று விட்டு விட்டேன் என்கிறாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆக்கமோ
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்

தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு இருந்து விடுகிறாள்.

அதற்கு முன்னால் , இராமனைக் காணாமல் தூக்கு போட்டு தற்கொலை கூட செய்யத் துணிகிறாள். அவ்வளவு பலவீனமாக காட்டுகிறான் கம்பன் அவளை.

பாரதத்தில், திரௌபதி, துரியோதனன் தொடையில் இருந்து வந்த இரத்தத்தை தடவித் தான் என் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததோடு சரி.  மற்றபடி அரண்மனையில் தங்கி விட்டாள்.

ஆனால், கண்ணகியோ, வெகுண்டு எழுந்து நீதி கேட்டாள் , ஊரை எரித்தாள்.

இன்று feminism , equal rights என்று பேசுபவர்களுக்கு முன்னால் கண்ணகி நிற்கிறாள். போராடினாள்.

மிக மிக சுவையான கதைப் போக்கு, சட்டு சட்டென்று மாறும் கதைப் போக்கு, கதைத் தளம், அடி நாதமாய் ஓடும் கணவன் மனைவி உறவு, அதில் ஏற்படும் சிக்கல்,  அரசியலும் , தனி மனித வாழ்வும் கலந்து நிற்கும் ஒரு வினோத கலவை.

இவற்றிற்கு மேலாக மிக முக்கியமான மூன்று அறங்களை வலியுறுத்தி, அதை சுற்றியே  கதையை நகர்த்தி, முடிவில் அந்த அறங்களின் வலிமையை நிலை நிறுத்திப் போகிறது இந்த காப்பியம்.

அது என்ன மூன்று அறம் ?

மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_13.html

2 comments:

  1. இன்னும் சிலப்பதிகாரத்துக்கு மாறாக ஒரு வித்தியாசம் கூறலாம்,ராமாயணமும் மஹா பாரதமும் சற்றே கடவுள் சம்பந்த பட்டது.

    ஆரம்பமே தூள் பறக்கிறதே.ஆவலுடன் காத்திருக்கிறேன்! .

    ReplyDelete
  2. சிலப்கதிகாரத்திலும் சிலபல பகுத்தறிவுக்கு ஒவ்வா நிகழ்வுகள் பதிவாகியிருந்தாலும் இக்காப்பியத்தின் கதை மாந்தர்கள் நம் போன்ற மானுடர்கள் தான். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை சிலப்பதிகாரக் கதை மாந்தர்களும் செய்திருப்பார்கள்! நமக்குள்ள அபிலாசைகளும் மனமாச்சரியங்களும் அவர்களுக்கும் பொருந்தும்!

    அதனால் தான் சிலம்பு மக்களுக்கான அணிகலன் ஆனது. உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் மக்களின் காப்பியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்தப்பணி வாழ்த்துதலுக்குரியது!

    ReplyDelete