Friday, June 21, 2019

சிலப்பதிகாரம் - மங்கல நல் அமளி ஏற்றினார்

சிலப்பதிகாரம்  - மங்கல நல் அமளி ஏற்றினார் 


உலகில் எல்லோரும் வேண்டுவது எது என்று கேட்டால், "நினைத்தது நடக்க வேண்டும்" என்பதுதானே.

நினைப்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது நடந்துவிட்டால் சந்தோஷம் தானே?

எந்த வயதிலும், ஏதோ ஒரு கனவோடுதான் மனிதன் வாழ்கிறான். அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

எப்படி நினைத்ததை அடைவது? அது சாத்தியமா?

சாத்தியம் என்று அறிவிக்கிறது தமிழ் இலக்கியம்.

தமிழ் இலக்கியம் என்ன பெரிய அறிவியல் கோட்பாடா? அது சொன்னால் அது சரியாக இருக்குமா ? நானும் தான் எவ்வளவோ நினைக்கிறேன். எங்கே நடக்கிறது? ஒண்ணு ரெண்டு நடந்தால் அதுவே பெரிய விஷயம். இதில் எங்கே நினைப்பதெல்லாம் நடப்பது. இதெல்லாம், சும்மா இலக்கியம் படிக்க நல்லா இருக்கும். நடைமுறை சாத்தியமா ? என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் ஓடலாம்.

கேள்வியை அப்படி ஒரு புறம் வைத்திருங்கள்.

வள்ளுவர் சொல்கிறார்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


அதாவது, நினைத்ததை , நினைத்த மாதிரியே அடைவார்கள் யார் என்றால் அப்படி நினைத்தவர்கள்  மன உறுதி கொண்டவர்களாக இருந்தால்.

ஒரு பொருளை அடைய வேண்டுமானால், முதலில் அதுபற்றிய சிந்தனை மனதில் எழ வேண்டும். அது என்ன பொருள், அதை எப்படி அடைவது, எவ்வளவு சீக்கிரம் அடைவது, அதை அடைய என்னென்ன வழி முறைகள், அதை அடைய  என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் உதவி என்ற எண்ணங்கள் முதலில் வர வேண்டும்.

அதன் பின், அவற்றை செயல் படுத்துவதில் உறுதி வேண்டும்.

இரண்டும் இருந்து விட்டால், வாழ்வில் எதையும் அடையலாம் என்கிறார் வள்ளுவர்.

இதில் முக்கியமானது என்ன என்றால், "எண்ணங்கள்". மனதில் நாம் எதை நினைக்கிறோமோ, அதையே அடைவோம்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர்தம் 
உள்ளது அணையது உயர்வு 

என்பதும் வள்ளுவம்.

எனவே, மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே ஓட விட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்

"மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையே ஓட விட வேண்டும். "


எண்ணங்கள் நல்லவைகளாக இருந்தால், உயர்ந்தவைகளாக இருந்தால், வாழ்வும் சிறக்கும்.

சரி, அதுக்கும், இந்த சிலப்பதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் முடிந்து விட்டது. அங்குள்ள மக்கள்  எல்லாம் அவர்களை வாழ்த்துகிறார்கள்.

வாழ்த்தில் தெரிந்தோ தெரியாமலோ அமங்கல சொற்கள் வந்து விழுந்து விடுகின்றன.   இளங்கோ அடிகள் தெரிந்தே அப்படிச் செய்தாரா அல்லது பின் வரப் போகும்   அமங்கல நிகழ்வுகளுக்கு இவை ஒரு தீய சகுனங்கள் மாதிரி முன்பே வந்து  விழுந்தனவா என்று தெரியாது.

பாடல்


‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-

பொருள்


‘காதலற் = கோவலனும் கண்ணகியும்

பிரியாமல் = ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல்

கவவுக் கை = பிடித்த கை

ஞெகிழாமல், = நெகிழ்ந்து விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீது இல்லாமல் வாழ்க

என ஏத்தி = என வாழ்த்தி

 சில் மலர் கொடு தூவி = மலர் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகத்தின்

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்றவளை (கண்ணகியை)

மங்கல = மங்கல

நல் அமளி ஏற்றினார் = கட்டில் ,  படுக்கை. இங்கே ஆசனம் என்று கொள்ளலாம்.

அமளி என்றால் சண்டை, சச்சரவு. (பாராளுமன்றத்தில் அமளி. எதிர் கட்சிகள் வெளி நடப்பு ).கட்டிலுக்கு, படுக்கைக்கு, மெத்தைக்கு  அமளி என்று பெயர். கணவன் மனைவி அன்பு செய்வதைப் பார்த்தால் ஏதோ மல் யுத்தம் நடப்பது மாதிரிதானே இருக்கும்.

மாணிக்க வாசகர் சொல்கிறார் "போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு " என்று.

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்




இந்த வாழ்த்தைப் பார்த்தாலே, ஏதோ நல்ல வாழ்த்து மாதிரிதான் இருக்கும்.

ஆனால், சற்று உன்னிப்பாக கவனித்தால் தெரியும், அதில் ஊடாடும் அமங்கலம் .

"காதலர் பிரியாமல்"

"ஒருவரை ஒருவர் கை விட்டு விடாமல்"

"தீமை இன்றி"

என்று சொல்லும்போது பிரிதல், கை விடுதல், தீமை என்ற அமங்கல சொற்கள்  நிறைந்து இருப்பதைக் காணலாம்.

இது எப்படி இருக்கிறது என்றால்

"பெண்ணும் மாப்பிளையம், ஒருவரை ஒருவர் சந்தேகப் படாமல், ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாகாமல்,  வாந்தி பேதி என்று எந்த நோயும் இல்லாமல், அற்ப ஆயுளில் போகாமல் வாழ்க "

என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அப்படி வாழ்த்தினார்கள், காதலர்கள் பிரிந்தார்கள், கை நழுவியது, தீமை வந்து சேர்ந்தது .

எனவே, மறந்து தீய, அமங்கல சொற்களை சொல்லக் கூடாது, நினைக்கக் கூடாது.

நினைவு சொல்லாக மாறும்.

சொல், செயலாக மாறும்.

தமிழ் இலக்கியம் அதை நம்பியது.

நாமும் நம்பிவிட்டுப் போவோமே. நல்லதை நினைப்போம். நல்லது நிகழும் என்று நம்புவோம்.

காசா பணமா...

2 comments:

  1. தெரிந்தோ தெரியாமலோ வரப்போகும் தீமைகளை கோடி காட்டுவது போல் வார்த்தைகள் அமைந்துவிட்டது.நீங்கள் எடுத்து காட்டி இருக்காவிட்டால் தெரிந்தே இருக்காது.

    ReplyDelete
  2. நிறைமொழிமாந்தர் நினைவுக்கு வருகின்றனர் தங்கள் விளக்கதில். இலங்கை ஜெயராஜ் அவர்கள் உரையில் கேட்ட ஞாபகம். கவுந்தி அடிகளை 'நிறைமொழிமாந்தர்'க்கு உதாரணம் சொல்வார்.

    காட்சி: கோவலனையும் கண்ணகியையும் அடைக்கலம் காத்து கூட்டிச் செல்கிறார் கவுந்தி அடிகள்.

    அவர்கள் பயணத்தின் நடுவே இருவர் இவர்களை அசிங்கமாகக் கிண்டல் செய்ய, வெகுண்டு சினந்த கவுந்தி அடிகள், 'முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக' என்று சொல்லி முடிக்கு முன்பே அவர்கள் கிழ நரிகளாய் மாறி ஓடினர் என்று.

    ReplyDelete