கம்ப இராமாயணம் - நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்
சூர்பனகையை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு, சீதையுடன் பர்ணசாலைக்குள் போய் விட்டான் இராமன்.
வெளியே நின்ற சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள். கம்பன் பல பாடல்களால் சூர்ப்பனகையின் காமத்தை விவரிக்கிறான்.
சூர்ப்பனகைக்கு இராமன் போனது கூடத் தெரியவில்லை. நேரில் நிற்பது போலவே தெரிகிறது.
அவனிடம் பேசுகிறாள்...அவன் எதிரில் நிற்பதாக நினைத்துக் கொண்டு...
"கண் மையால் மலை செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருப்பவனே, இராமா, என் மனதில் வஞ்சனையும், மாயையும் இருக்கிறது. அவற்றை நீ நீக்கி அருள் புரிவாய்"
என்று வேணுகிறாள். நஞ்சை தெரியாமல் குடித்தவர்கள் எப்படி தவிப்பார்களோ அப்படித் தவிக்கிறாள்.
மிக மிக ஆச்சரியமான பாடல். இது சூர்ப்பனகை சொல்லியது என்று சொல்லாமல், ஏதோ ஒரு பெரிய பக்தர் சொல்லியது என்று நினைத்துப் பார்த்தால், அப்படியே பக்தி இரசம் பொங்கும்.
என் மனதில் உள்ள அழுகை எல்லாம் நீக்கி எனக்கு அருள் புரிவாய், அஞ்சன வன்ணனனே என்று வேண்டுகிறாள்.
பாடல்
'வஞ்சனைக் கொடு மாயை‘
வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு, எனது ஆவத்தை
நீக்கு' எனும்;
'அஞ்சனக் கிரியே!
அருளாய்' எனும்;
நஞ்சு நக்கினர் போல
நடுங் குவாள்.
பொருள்
'வஞ்சனைக் = வஞ்சனை
கொடு மாயை = கொடுமையான மாயை
வளர்க்கும் = இவற்றை வளர்க்கும்
என் = என்னுடைய
நெஞ்சு புக்கு = எனது நெஞ்சில் புகுந்து
எனது ஆவத்தை = எனக்கு வந்த ஆபத்தை
நீக்கு = நீக்குவாய்
எனும்; = என்று வேண்டுவாள்
'அஞ்சனக் கிரியே! = அஞ்சனம் என்றால் கண்ணுக்கு இடும் மை. அஞ்சன கிரியே என்றால், மையால் ஆன மலை போன்றவனே என்று அர்த்தம். இராமன் அவ்வளவு கருப்பு.
அருளாய்' எனும்; = எனக்கு அருள் செய்வாய் என்று வேண்டுவாள்
நஞ்சு நக்கினர் போல = நஞ்சை உண்டவர் போல
நடுங் குவாள். = நடுங்குவாள்
இராமன் மேல் கொண்ட காதலை விடவும் முடியவில்லை. உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.
தவிக்கிறாள்.
பலருக்கு, காமம் என்றால் ஏதோ அசிங்கம், அது ஒரு தேவை இல்லாத ஒன்று, உடல் சார்ந்த ஒரு தேடல், பசி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சூர்ப்பனகை மூலம் கம்பன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுகிறான்.
காமத்தின் உச்சியில் பக்தி பிறக்கிறது.
சூர்ப்பனகை தன் தவறுகளை உணர்கிறாள். தன் மனதில் உள்ள குற்றங்களை வாய் விட்டு ஒப்புக் கொள்கிறாள்.
இராமனிடம் சரணாகதி அடைகிறாள்.
என் மனதில் உள்ள குற்றங்களை நீக்கி அருள் புரிவாய் என்று வேண்டுகிறாள்.
"அஞ்சன கிரியே அருள் புரிவாய்"
என்று அரற்றுகிறாள்.
காமம் ஒரு படிக்கட்டு. அதில் ஏறி மேலே சென்று விட வேண்டும். படியிலேயே நின்று கொண்டு இருக்கக் கூடாது.
சூர்ப்பனகை செய்த தவறு, அங்கேயே நின்றது.
அடுத்து வரும் சில பாடல்களில் சூர்ப்பனகை காதலாகி கசிந்து, நெகிழ்ந்து உருகுவதை கம்பன் காட்டுகிறான். படிக்கும் நமக்கே அவள் மேல் ஒரு பரிதாப எண்ணம் எழும்.
அதையும் படிப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_9.html
உடல் இச்சையை நீக்கி விட்டால், அளவில்லாத அன்பும் ஒரு வகையில் காமமோ."காமத்தின் உச்சியில் பக்தி பிறக்கிறது." .அழகாக சொன்னீர்கள். அவள் தன் தவறை உணர்ந்து தான் கூறுகின்றாளா?
ReplyDelete"காமத்தின் உச்சியில் பக்தி பிறக்கிறது" என்பதன் பொருள் என்ன?
ReplyDeleteஒரு விதத்தில் பார்த்தால், இது ஒரு சால்ஜாப்பாக இருக்கிறது.
அதிகமான காம வெறியில் தவிப்பவர் கன்னுக்குத் அந்த ஆடவனையோ பெண்ணையோ பார்த்தால், ஏதோ தேவனும் தேவியும் போலத் தெரிவார் போலும். அதற்கு பக்தி என்று எப்படிச் சொல்வது?