சிலப்பதிகாரம் - பெரும் தோள் எழுதி
கோவலன் மற்றும் கண்ணகியின் திருமணச் சடங்குகள் இனிதே நடந்து முடிந்தன.
இரவு தொடங்கி விட்டது.
அவர்களின் முதலிரவு காட்சியினை இளங்கோ அடிகள் என்ற துறவி காட்டுகிறார்.
கத்தி மேல் நடப்பது போன்ற வேலை. ஒரு வார்த்தை பிசகினாலும் முகம் சுளிக்க நேரிடலாம். அதே சமயம், ஒரு பெண்ணும், ஆணும் முதன் முதலில் தனிமையில் சந்திக்கும் அந்த இன்பத்தையும் காட்ட வேண்டும்.
தமிழ் இலக்கியம் சிற்றின்பத்தை கண்டு ஓடியதில்லை. உலகப் பொதுமறை எழுதிய வள்ளுவரும், இன்பத்துப் பால் எழுதினர். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்ற பக்தி இலக்கியங்களிலும் சிற்றின்பம் என்பது நாயக நாயகி பாவமாக ஊடாடிக் கிடந்தது.
தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்தார்கள். அக வாழ்க்கையை பற்றி பேச அவர்கள் தயங்கியதே இல்லை. பிற்காலத்தில் எங்கிருந்தோ இந்த சங்கடம் வந்துவிட்டது. ஆண் பெண் உறவு என்பது ஏதோ அசிங்கமானது, தவிர்க்கமுடியாத ஒரு நிர்பந்தம் என்ற உணர்வு வந்து விட்டது.
நம் தமிழ் இலக்கியம், ஆண் பெண் உறவை தலை மேல் வைத்து கொண்டாடி இருக்கிறது.
"இரவு நேரம். பெரிய கட்டில். கட்டில் பூராவும் மலர் தூவி இருக்கிறது. கோவலனும் கண்ணகியும் தனித்து இருக்கிறார்கள். சந்திரனும், சூரியனும் ஒன்றாக சேர்ந்து இருந்தது போல இருந்ததாம். கோவலன், அங்கிருந்த சந்தனம், குங்குமம் இவற்றை மயிலிறகால் தொட்டு கண்ணகியின் தோளில் படம் வரைந்தான். அவர்கள் இருவரும் அணிந்திருந்த மாலையில் இருந்து பூக்கள் உதிர்ந்தன. அந்த மாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி நின்றன. அப்போது, தீராத காதோலோடு கோவலன் கண்ணகியின் முகம் பார்த்து சொல்லுவான் "
பாடல்
சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ,
தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:
பொருள்
சுரும்பு = வண்டுகள்
உணக் கிடந்த = தேன் உண்ணும்படி கிடந்த
நறும் பூஞ் சேக்கைக் = நல்ல பூக்களின் சேர்க்கை
கரும்பும் வல்லியும் = கரும்பு வல்லி என்பவை இன்பத்தை தூண்டும் படங்கள் என்று விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்
பெரும் தோள் எழுதி = அவளுடய தோளில் வரைந்து. இலக்கியத்தில் அவ்வளவுதான் சொல்ல முடியும்.உரை ஆசிரியர்கள் அவன் எங்கெல்லாம் படம் வரைந்தான் என்று சொல்லுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் தேடி கண்டு கொள்க.
முதிர் = முதிர்ந்த
கடல் = கடல் (சூழ்ந்த)
ஞாலம் முழுவதும் விளக்கும் = இந்த உலகம் முழுவதும் விளங்கும்
கதிர் = நிலவும், சூரியனும்
ஒருங்கு இருந்த காட்சி போல, = ஒன்றாக இருந்த காட்சி போல
வண்டு வாய் திறப்ப = வண்டுகள் வாய் திறக்க
நெடு நிலா விரிந்த = நெடுக வெண்மையான ஒளி பரப்பும் நிலவின் ஒளி போல
வெண் தோட்டு மல்லிகை விரியல் = வெண்மையான மல்லிகை மலரில் கட்டிய (விரியல் என்றால் பூமாலை என்று பொருள்)
மாலையொடு = மாலையோடு (மல்லிகைப் பூ மாலை)
கழுநீர்ப் = நீலோற்பலம் என்ற ஒருவகை மலர். தாமரை போல் நீரில் பூக்கும் ஒரு மலர்
பிணையல் = மாலை
முழுநெறி பிறழ = அந்த மாலையில் உள்ள மலர்கள் மாலையில் இருந்து உதிர்ந்து விழ
தாரும் மாலையும் = அவர்கள் அணிந்திருந்த மாலைகள்
மயங்கி = மூச்சு முட்டி மயங்கி
கையற்று = என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து, செயல் இழந்து
தீராக் காதலின் = தீராத காதலோடு
திரு முகம் நோக்கி = கண்ணகியின் அழகிய முகத்தைப் பார்த்து
கோவலன் கூறும் = கோவலன் கூறும்
ஓர் குறியாக் கட்டுரை = ஒரு குறிப்பான கட்டுரை.
கத்தி மேல் நடக்கும் வித்தைதானே? சொல்லவும் வேண்டும், முழுவதுமாக சொல்லவும் கூடாது.
வயது வராத பிள்ளைகள் படித்தால் விகல்பமாக ஒன்றும் தெரியாது.
வயது வந்தவர்களுக்கு, திருமணம் முடித்தவர்களுக்கு அந்த வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கும். அவற்றை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மகிழ்வார்கள்.
Pornography என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆண் பெண் உறவை கொச்சைப் படுத்தாமல், அழகாகவும் சொல்ல முடியும் என்று காட்டுகிறார் அடிகளார்.
அழகாக சொல்லப் படிக்க வேண்டும். .அடிகளார் நினைத்து இருந்தால், இந்த பகுதியை விட்டு விட்டுப் போயிருக்கலாம்.
நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். படிக்க வேண்டும்.
யோசித்துப் பார்ப்போம்...எத்தனை முறை நாம் நம்முடைய ஆழமான, நுண்ணிய, மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று.
"இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க" என்று கடைசியாக மனைவியிடம் எப்போது கூறினோம்.
இந்த T ஷர்ட் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று கணவனிடம் எப்போது கூறினோம்?
இன்னிக்கு சாப்பாடு பிரமாதம்...செஞ்ச கைக்கு ஒரு முத்தம் தரணும் என்று அவள் கையை எப்போது பிடித்து அன்பை வெளிப்படுத்தினோம்?
மெல்லிய, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அவரை மழுங்க அடித்துக் கொண்டிருக்கிறோம்.
கோபம், எரிச்சல், வெறுப்பு...இவற்றை காட்ட நாம் என்றுமே தயங்கியது இல்லை. அன்பு, பாசம், காதல், காமம் இவற்றை வெளிப்படுத்துவதில் ஒரு தயக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
நான், எல்லோரையும் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்லுகிறேன்.
உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த பழக வேண்டும்.
இளங்கோ அதோடு விடவில்லை. மேலும் போகிறார்.
முதலிரவில், மனைவியோடு ஏதோ சொல்லப் போகிறான் கோவலன்.
என்ன சொல்லி இருப்பான் ?
நீங்களும் விகல்பமில்லாமல் ரசனையுடன் கோடி காட்டி இருக்கிறீர்கள்..
ReplyDelete//நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்//
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள்.