திருக்குறள் - பொறுமை - மறப்போம், மன்னிப்போம்
முந்தைய குறள் பற்றி சில வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து இருந்தார்கள்.
ஒரு முக்கிய குறிப்பு.
இங்கே பொறுமை என்பது, பொறுமையாக ஒரு வேலையைச் செய்வதை குறிப்பது அல்ல. பொறுமையாக சாலையை கடப்பது, பொறுமையாக ஒரு காரியத்தை செய்வது, மரம் வளர்ந்து கனி கொடுக்கும் வரை பொறுமையாக இருப்பது...அந்தப் பொறுமையைப் பற்றி திருவள்ளுவர் கூறவில்லை.
இங்கே பொறுமை என்பது , பொறுத்துக் கொல்வதைப் பற்றியதாகும். நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை என்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும்.
அடுத்த குறளுக்குப் போவோம்.
சிலர், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுவார்கள் ஆனால், "அவனுக்கு ஆண்டவன் கொடுப்பான், எனக்கு கெடுதல் செய்தவன் நல்லா இருக்க மாட்டான்" என்று மனதுக்குள் கிடந்து புளுங்குவார்கள். தாங்களே சென்று கெடுதல் செய்யாமல் பொறுத்துக் கொண்டாலும், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கேடு வரவேண்டும் என்று மனதில் விரும்புவார்கள்.
அப்படி அவர்களுக்கு கேடு வந்து விட்டால், "பத்தியா , நான் நினச்சேன், எனக்கு கேடு செய்தவனுக்கு ஆண்டவனே பார்த்து கொடுத்தான் " என்று மனதுக்குள் மகிழ்ச்சி அடைவார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்,
"நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் நல்லது தான். ஆனால், அந்த தீமையை மறந்து விடுவது அதைவிட நல்லது"
என்று.
பாடல்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று
பொருள்
பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்
இறப்பினை = மிகையான தீய செயல்களை
என்றும் = எப்போதும்
அதனை = அந்த தீய செயல்களை
மறத்தல் = மறந்து விடுதல்
அதனின்று = அதை விட
நன்று = நல்லது
மனதுக்குள் வைத்து பொறுமிக் கொண்டே இருந்தால், அது நமக்குத்தான் கேடு விளைவிக்கும்.
"சரி கழுத , விட்டுத் தள்ளு" என்று உதறி விட்டு மேலே செல்ல வேண்டும்.
மாறாக, "இப்படி செய்து விட்டானே, இப்படி செய்து விட்டானே" என்று மனதுக்குள் வைத்து பொருமிக் கொண்டு இருந்தால், அது நம் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கும்.
மறந்து விடுதல் , நல்லது என்கிறார்.
"ஆமா, இப்படி நமக்கு தீமை செய்தவனை எல்லாம் மன்னித்தும், மறந்தும் இருந்தால், எல்லோரும் நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போய் விடுவார்கள். நாம் சரியான இளிச்ச வாயர்களாக இருக்க வேண்டியதுதான்...இதெல்லாம் சொல்ல/கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு சரி வருமா "
என்று உங்கள் சார்பாக வள்ளுவரிடம் கேட்டேன்.
அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_13.html
படிப்பவர்களின் ஆவலை தூண்டும் வண்ணம் அழகாக முடிக்கிறீர்கள்.பேஷ்,பேஷ்.
ReplyDelete