Saturday, September 21, 2019

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி

கம்ப இராமாயணம் - வரும் நாள் அன்றி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்?

அது ஒரு கதை. அவ்வளவுதானே. உலகில் எத்தனையோ ஆயிரம் கதைகள் இருக்கின்றன. போதா குறைக்கு சினிமா, நாடகம், தொலைக் காட்சி நெடு நாடகங்கள் (சீரியல்) என்று இருக்கின்றன. இதில், இராமாயணம் போன்ற இலக்கியங்களும் ஒன்று. வேறு என்ன இருக்கிறது அதில் ?

இருக்கிறது.

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்கள் வெறும் கதை அல்ல. அவை வாழ்க்கை நெறி முறைகளை சொல்ல வந்தவை.

அறம் , அறம் என்று சதா சர்வகாலமும் அதைப் பற்றியே சிந்தித்து, அதை எப்படி நமக்குச் சொல்லலாம் என்று இப்படிப் பட்ட கதைகளின் ஊடே அவற்றை சொல்ல முயற்சிக்கின்றன.

கதை அல்ல முக்கியம். வாழ்க்கை அறம் தான் முக்கியம்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அறம் சொல்ல ஒரு இடம் காலம் வேண்டாமா?

கதா நாயகனும், கதா நாயகியும் காதலித்து, ஆடி பாடி மகிழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு மாலை நேரம் வேண்டும், பூஞ்சோலை வேண்டும் , மஞ்சள் வெயில் வேண்டும்....அல்லவா?

கம்பனுக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. அறம் சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால் , இடம் பொருள் ஏவல் பார்ப்பது இல்லை.  எங்கெல்லாம் முடியுமோ, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லி விடுவது என்ற முடிவோடு காப்பியம் செய்கிறான்.

அவன் வாழக்கை தத்துவம் சொல்லும் இடத்தைப் பாருங்கள்....

மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இரத்தம் சொட்ட சொட்ட, ஊரே பார்த்து  மிரண்டு போக இராவணன் சபையில் வந்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


அவமானம், வலி, வேதனை, கோபம், கொந்தளிப்பு...

இந்த இடத்தில் அறம் சொல்கிறான் கம்பன்.

சொல்லும் இடமா இது ? சொல்கிறான் கம்பன்

"என்ன தான் முயற்சி செய்தாலும், தவம் செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது. அதன் படிதான் எல்லாம் நடக்கும். வரும் நாள் அன்றி எதுவும் யாருக்கும் வந்து விடாது. நீ எவ்வளவோ தவம் செய்தாய் அதன் பலன் இப்போதுதான் உனக்கு கிடைக்கப் போகிறது (அதாவது சீதையை அடைவதுதான் உன் தவப் பயன்)" என்கிறாள் சூர்ப்பனகை, இராவணனிடம்.

பாடல்

“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘


பொருள் 

“தருவது விதியே என்றால் = பலன்களை தருவது விதியே

தவம் பெரிது = பெரிய தவம்

உடையரேனும், = செய்தவர்கள் என்றாலும்

வருவது  = வரக்கூடியவை

வரும் நாள் அன்றி = வரக்கூடிய நாள் இல்லாமல்

வந்து கைகூட வற்றோ? = அதற்கு முன்னால் வந்து விடுமா? (வராது)

ஒருபது முகமும் = 10 தலைகளும்

கண்ணும், = கண்களும்

உருவமும் = பலமான உருவமும்

மார்பும் = பரந்த மார்பும்

தோள்கள்  இருபதும் = இருப்பது தோள்களும்

படைத்த செல்வம் = தவம் செய்து நீ படைத்த செல்வம்

எய்துவது = அடைவது

இனி நீ = இனிமேல்தான்

எந்தாய்!‘‘ = என் தந்தை போன்றவனே


நீ இதுவரை  பெற்றது எல்லாம் ஒரு பலன் இல்லை. நீ செய்த தவத்தின் பலன் இப்போதுதான் கிடைக்கப் போகிறது. இத்தனை காலம் நீ பொறுத்து இருக்க வேண்டியது இருந்தது. சீதைதான் உன் தவப் பயன் என்கிறாள் சூர்ப்பனகை.

ஆகும் நாள் அன்றி, ஒன்றும் வந்து சேராது என்று வாழ்க்கை தத்துவம் கூறுவது யார்?  சூர்ப்பனகை என்ற அரக்கி.

கூறியது யாருக்கு? இராவணன் என்ற அரக்கனுக்கு

கூறிய இடம்?  அவன் அரசவை

கூறிய நேரம்? காதும், மூக்கும், முலையும் இழந்து இரத்தம் சொட்ட நின்ற நேரம்.

இதுவா இடம், பொருள், ஏவல் ?

விதி வலியது. எல்லாம் என்னால் ஆனது என்று ஆடாதே. உனக்கு இப்போது செல்வம் வர  வேண்டும் என்று இருந்தால் வரும். நீ என்ன தவம் செய்தாலும், நேரம் சரி  இல்லை என்றால் வராது. ஆடாதே என்று அறம் சொல்கிறான் கம்பன்.

நான் படித்தேன், நான் திறமையாக வேலை செய்தேன், என் சாதுரியம், என்று மார்  தட்டாதே. அடங்கு.

உன்னை விட படித்தவன், உன்னை விட திறமைசாலிகள், உன்னைவிட சாதுரியம் மிக்கவர்கள்  உனக்கு பல படிகள் கீழே இருக்கிறார்கள்.

உன்னை விட குறைவாக படித்தவர்கள், குறைவான திறமை உள்ளவர்கள் உனக்கு பல படி மேலே இருக்கிறார்கள்.

இதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது என்று கம்பன் கேட்கிறான்.


அறிவோம். ஆணவம் குறைத்து வாழ்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_21.html

No comments:

Post a Comment