Wednesday, September 18, 2019

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே

இராமானுஜர் நூற்றந்தாதி - மறையினை மன்ன வைப்பவரே


தாய் நமக்கு தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். அவள் சொல்லித்தான், தந்தை யார் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.

தந்தை நமக்கு ஆசிரியரை அறிமுகப் படுத்துகிறார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.

ஆசிரியர் நமக்கு இறைவனை அறிமுகப் படுத்துவார்.

அதெல்லாம் இல்லை, ஆசிரியர் பாடம் சொல்லித் தருவார்.அவருக்கே கடவுள் என்றால் யார் என்று தெரியாது. அவர் எப்படி எனக்கு கடவுளை காட்ட முடியும் என்று சிலர் கேட்கலாம்.

அவர் கடவுளை காட்ட வேண்டாம். கல்வியை ஒழுங்காக சொல்லித் தந்தால் போதும். அந்த கல்வி இறைவனை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த்தும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்பார் வள்ளுவர்.

கல்வி, இறைவனின் திருவடிகளில் கொண்டு சேர்க்கும்.

எனவேதான் ஆசிரியர், ஆச்சாரியனை நம் இனம் கொண்டாடுகிறது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

என்பார் அருணகிரிநாதர்.

ஆச்சாரியன் கையை பிடித்துக் கொண்டு இறைவனை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இறைவனை விட்டு விடுங்கள் ,
அவனை கண்ட ஆழ்வார்களை விட்டு விடுங்கள்,
ஆழ்வார்களை மனதால் எப்போதும் கொண்ட இராமாநுஜரையும் விட்டு விடுங்கள்.
இராமானுஜரை மனதில் கொண்ட அடியவர்கள் யாரோ, அவர்களே இந்த உலகில் வேதம் நிலைத்து நிற்க செய்பவர்கள் என்கிறார்  அமுதனார்.

பாடல்


இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.


பொருள்


இறைவனைக் = இறைவனை

காணும் = காணும் போது

இதயத் திருள்கெட = இதயத்தில் உள்ள இருள் எல்லாம் கெட

ஞானமென்னும் = ஞானம் என்ற

நிறைவிளக் கேற்றிய = நிறைவான விளக்கை ஏற்றிய

பூதத் திருவடி = பூதத்தாழ்வார்

தாள்கள் = திருவடிகள்

நெஞ்சத் = மனதில்

துறைய = உறைந்து இருக்கும்படி

வைத் தாளும் = வைத்து போற்றும்

இராமா னுசன் = இராமானுசன்

புகழ் = புகழை

ஓதும் நல்லோர் = சொல்லும் நல்லவர்ககள்

மறையினைக்  = வேதத்தை

காத்த = காத்து

இந்த மண்ணகத் தே = இந்த மண்ணில்

மன்ன = நிலைத்து நிற்கும்படி

வைப்பவரே. = செய்வார்கள்


என்ன சொல்ல வருகிறார்?

இராமானுஜரை மனதில் வைத்து இருந்தாலே போதும், அவர்கள் தீய செயல்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்லும் வழி நல்ல வழியாகத்தான் இருக்கும். வேதம் சொன்ன வழியாகத்தான் இருக்கும். வேதத்தில் சொன்ன படி   வாழ்வதால், அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாழ்வார்கள். வேதம் வாழ்க்கையோடு சேர்ந்து நிலைத்து நிற்கும்.

யாருமே அதில் சொன்ன படி வாழாவிட்டால், பின் அந்த நூலுக்கு என்னதான் பலன், பயன்?

அது எப்படி இராமனுசரை மனதில் வைத்தாலே நாம் நல்லவர்களாகி விடுவோமா?

உதாரணம் பார்ப்போம்.

கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.

"அதெல்லாம் நடை முறை இல்லை, நான் சாதாரண மனுஷன்/மனுஷி, நம்மால் அது முடியாது,  மனது ஏற்றுக் கொள்கிறது ஆனால் செய்யத்தான் முடியவில்லை " என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்கு அல்ல.


ஆய் தந்து, அவன், அவ் உரை
    கூறலும் ‘ஐயன், ‘நின் தன்
வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர்
    கண் இலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல்
    சலிக்கின்றது என்னோ? ‘

"வாய் தந்தன கூறுதியோ
    மறை தந்த நாவால்?"

வேதம் சொன்ன வாயால், வாய்க்கு வந்த படி பேசலாமா" என்று கேட்கிறான். படித்தால் மட்டும் போதாது, அதற்கு தக வாழவும் வேண்டும்.

இராமாநுஜரை மனதில் வைத்தவர்கள், வேதம் நிலைத்து இருக்கும் படி வாழ்வார்கள்.

அதாவது, நான் இராமானுஜரை வழிபடுகிறேன், அவரை மனதால் எப்போதும் வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, வேதம் காட்டிய நல் வழியில் வாழவும் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி மத பேதம் இல்லாமல், எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் இராமானுஜர். அவரை மனதில் வைத்தவர்கள் அப்படி செய்ய வேண்டும் என்பது மறைமுக கட்டளை.

முடியுமா என்ன ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_18.html

1 comment:

  1. முயற்சி பண்ணால் முடிவது சாத்தியமே.
    இந்த ராமானுஜ நூற்றந்தாதி முழுவதற்கும் வரிசையாக விளக்கம் கூறினால் தன்யனாவேன். .

    ReplyDelete