நாலாயிர திவ்ய பிரபந்தம் - பிழையெனக் கருதி னாயேல்
இந்த உடம்பு நோய்க்கு இடமான ஒன்று. நோய் உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. சமயம் பார்த்து வெளியே வருகிறது.
நோய்கள் நிறைந்த இந்த உடலை மெய் என்று கருதி, அதற்கு சோப்பு, எண்ணெய் , வாசனை திரவியங்கள் என்று போட்டு அழகு பார்க்கிறோம்.
அத்தனையும் பொய்.
உடம்பாவாவது ஏதோ நமக்கு உதவி செய்கிறது. வேலை செய்கிறது. புலன் இன்பங்களைத் தருகிறது.
ஆனால், இந்த தீயவர் சகவாசம் இருக்கிறதே, அதனால் என்ன பயன்? அத்தனையும் தீமையே. ஆனால், அதைத்தான் நாம் நாள் தோறும் கேட்கிறோம். தீயவர்கள் என்றால் ஏதோ கொலை களவு செய்பவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.
திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்
"பேயர்தாம் பேசும் அந்த பேச்சு" என்று.
அது என்ன பேயர் தாம் பேசும் பேச்சு?
பேயின் குணங்கள் என்ன ?
இருட்டில் மறைந்து இருக்கும். தன்னை வெளிப்படுத்தாது.
பிடித்தவர்களை விடாது.
தான் வெளிப்படாமல் மற்றவரின் உடம்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம் செயல்படும்.
அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் பேயர்கள் .
நான் சொல்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். அவர் சொன்னார் , இவர் சொன்னார் என்று யாருக்கு பினாலாவது மறைந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, தாங்கள் கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று சாதிப்பார்கள். எதையும் ஆராயும் அறிவு கிடையாது.
"நோய்க்கு இடமான இந்த உடலையும், பேயர்களின் பேச்சையும் நீ பிழை என்று கருதினால், அவற்றை விட்டு விட்டு, திரு வல்லவாழ் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமான் பெயரைக் கூறி, அவனோடு சேர்ந்து கொள் "
என்பது பாசுரம்.
பாடல்
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
பொருள்
நோயெலாம் = ஒண்ணு இரண்டு இல்லை, எல்லா நோயையையும்
பெய்ததோர் = சேர்த்த ஒரு
ஆக்கையை = உடலை
மெய்யெனக் = உண்மை என்று
கொண்டு = மனதில் நினைத்து
வாளா = ஒன்றும் செய்யாமல்
பேயர்தாம் = பேயர்களின்
பேசுமப் = பேசும் அந்தப்
பேச்சை = பேச்சை
நீ = நீ
பிழையெனக் = பிழை என்று
கருதி னாயேல், = நினைத்தால்
தீயலா = தீ உலா
வெங்கதிர்த் = சிவந்த கதிர்களை உடைய (சூரியனாய்)
திங்களாய் = குளிர் நிலவாய்
மங்குல் = மேகம் நிரம்பிய
வா னாகி நின்ற = வானமாகி விரிந்து நின்ற
மாயனார் = மாயனார்
வல்லவாழ் = திருவல்லவாழ்
சொல்லுமா = சொல்லுகின்ற
வல்லையாய் = வலிமை உடையவனாய்
மருவு நெஞ்சே. = சேர்ந்து கொள் நெஞ்சே
இறைவனுடன் சேர என்ன பயம்? வலிமை உடையாய் என்று ஏன் கூறுகிறார்?
உடல் பற்று இருக்கிறது.
உறவின் மேல் பற்று இருக்கிறது.
இவற்றை எல்லாம் விட பயமாக இருக்கிறது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்,இந்த உறவை எல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே, இந்த சுகத்தையெல்லாம் விட வேண்டி இருக்குமே என்ற பயம்.
மற்றவர்களுக்கு எதுவும் ஆகி விட்டால், அவர்களோடு உள்ள உறவு விட்டுப் போய் விடுமே. கணவன், மனைவி, பிள்ளைகள்...எப்படி விட முடியும்?
இறுக பற்றிக் கொண்டு இருக்கிறோம்.
"பயப்படாமல் விட்டு விட்டு வா...விடுகின்ற வலிமை உனக்கு இருக்கிறது....அந்த வலிமை வர வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று தான் வேண்டும், இவை எல்லாம் பிழை என்று உணர வேண்டும்"
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.
முதல் படி
உடல் பற்றை விடுவது
இரண்டாவது படி
உறவுகள் பிழை என்று அறிதல்
மூன்றாவது
அவன் பெயரைச் சொல்லுதல்
என்கிறார்.
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே
என்பார் பட்டினத்தார்.
இது காலாகாலத்தில் புரிந்தால் நல்லா இருக்கும்...
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_14.html
ரொம்ப ரொம்ப அற்புதமாக விளக்கினீர்கள்.இதைவிட சொல்ல என்ன இருக்கு. எல்லாம் தெரிந்தும் இந்த மனம் ஒத்துழைக்கவில்லையே. .
ReplyDelete