Pages

Saturday, February 29, 2020

திருக்குறள் - வளையல்

திருக்குறள் - வளையல் 


பெண்கள் அணியும் ஆபரணங்களில் வளையலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த மெலிந்த, நீண்ட கைகளில் தவழும் வளையல்கள், அது தரும் மெல்லிய ஓசை...அதுவும் ஒரு சுகம் தான்.

ஆண்களைப் போல பெண்களுக்கு விரல் மட்டும் முன்கை சேரும் இடங்கள் ஆண்களை போல பருமனாக இருக்காது. எனவே, வளையல் எளிதாக கையில் போகும்.

இராமன் வந்து மணவறையில் வந்து அமர்ந்து இருக்கிறான். தோழிகள் சீதையை அழைத்து வருகிறார்கள். சீதைக்கு இராமனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். நேரில் எப்படி பார்க்க முடியும். வெட்கம் ஒரு புறம். எல்லோரும் இருக்கிறார்கள். தலை நிமிர்ந்து பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற அச்சம் மறு புறம்.

யாருக்கும் தெரியாமல், கையில் உள்ள வளையல்களை சரி செய்வது மாதிரி  கொண்டே இராமனை பார்த்து விடுகிறாள் (சைட் அடிப்பது என்று சொல்லலாமா?)

"கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."



எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.

கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்.


பழைய சினிமா பாடல் ஒன்று...இலக்கிய தரம் சற்றும் குறையாத ஒன்று...


சின்னவளை முகம் சிவந்தவளை

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு

என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு

பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்

பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ

இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்

நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்

மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ

அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ

இது கண்ணதாசன் காட்டும் வளையல்.

வள்ளுவர் காட்டும் வளையல் வேறு விதம்.

ஏதோ ஒரு காரணத்தால், தலைவன் தலைவியை விட்டு பிரிய வேண்டிய நிர்பந்தம். 

ஆனால், அவளோ அவன் நினைவாகவே இருக்கிறாள். அவன் பிரிந்த மாதிரியே இல்லை அவளுக்கு.  அவன் கூடவே இருப்பது போலவும், அவளை கொஞ்சுவதும் போலவும், கனவில் அவனுடன் வாழ்கிறாள்.

ஆனால், அவ்வப்போது நிஜமும் புரியாமல் இல்லை. அவனை காணாமல் தவிக்கிறாள். சாப்பிட பிடிக்கவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை.

எப்படா வருவான் என்று ஏங்குகிறாள்.

இப்படி அவனை நினைத்து ஏங்கி ஏங்கி அவள் மெலிந்து போகிறாள். அவள் அணிந்திருந்த  வளையல்கள் கையை விட்டு நழுவி கீழே விழுகின்றன.

"அவன் பிரிந்து போய் விட்டான் என்று அவன் சொல்லாவிட்டாலும், இந்த நெகிழ்ந்து விழும் வளையல்கள் சொல்லி விடுகின்றனவே " என்று அந்த வளையல் மேல் கோவிக்கிறாள்.


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்


துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு பிரிந்து போனதை

தூற்றா =  சொல்லாதா

கொல் = சந்தேகம்

முன்கை = முன்னங் கையில்

இறை = மணிக்கட்டு

இறவா நின்ற = கழல்கின்ற

வளை = வளையல்

ஒரு பக்கம் காதல், பிரிவு, ஏக்கம், தவிப்பு என்று எல்லாம் இருக்கிறது. இதன் அர்த்தம்  இன்னும் ஆழமாக புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் இலக்கணம்  படிக்க வேண்டும்.

இலக்கண அறிவு, இலக்கியத்தின் சுவையை மேலும் கூட்டும்.

தமிழில் உள்ள வினை சொற்களை மூன்றாக பிரிக்கலாம்.

பகுதி + இடை நிலை + விகுதி

அனைத்து வினை (செயல்) சொற்களுக்கும் இது பொருந்தும்.

இதில்

பகுதி என்பது , செயலை குறிக்கும்.

இடை நிலை என்பது காலத்தைக் காட்டும்

விகுதி என்பது பால், மற்றும் ஒருமை பன்மையை குறிக்கும்.

பகுதியையும், விகுதியையும் அப்படியே வைத்துக் கொண்டு, இடை நிலையை மட்டும் மாற்றினால் காலம் மாறிவிடும்.

உதாரணாமாக

வந்தான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
த் = இறந்த கால இடை நிலை (ந் என மாறியது விகாரம்)
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


இதில் உள்ள த் என்ற இடை நிலையை மட்டும் தூக்கிவிட்டு 'வ்'  என்று போட்டால் அது  எதிர்காலமாக மாறி விடும்.

வருவான்

வா = பகுதி (வ என குறுகியது விகாரம்).
வ்  = எதிர் கால இடை நிலை
ஆன் = ஆண் பால், படர்க்கை, ஒருமை வினை முற்று


சரியை, சந்தம், விகாரம் என்று சில விஷயங்கள்  இருக்கிறது. ரொம்ப மண்டையை உடைக்க வேண்டாம்.

நிகழ் காலம் காட்டும் இடைநிலை கிறு , கின்று , ஆநின்று

என்ற மூன்று சொற்கள் உள்ளான்.

வருகின்றான் (கின்று)
சாப்பிடுகிறான் (கிறு)


இதில் ஆநின்று என்ற இடை நிலை தற்கால தமிழில் புழக்கத்தில் இல்லை.

அதை விட்டு விட்டோம். காலப் போக்கில் அதன் பயன்பாடு மறைந்து விட்டது.

இப்போது குறளுக்கு வருவோம்.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

இறவா நின்ற வளை

"ஆநின்று" என்ற இடை நிலை நிகழ் காலத்தை குறித்து நின்றது.

என்ன அர்த்தம்.

வளையல் நழுவி கீழே விழுந்து கொண்டே இருக்கிறது. அதை கீழே விழுந்து விடாமல் அவளும்  மேலே இழுத்து விட்டுக் கொண்டே இருக்கிறாள்.

கீழே விழுந்தால் என்னவாம்? எடுத்து அலமாரியில் வைத்து கொள்ளலாம் தானே.

அது அல்ல.

அவன் போட்ட வளையல். கையைப் பிடித்து, மென்மையாக, முகத்தைப் பார்த்துக் கொண்டே, கொஞ்சிக் கொண்டே போட்டு விட்ட வளையல்.  அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. எனவே, அது கையை விட்டு கழன்று கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள்.

இரண்டாவது, ஒரு வேளை வளையல் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டால், ஊரார்  என்ன சொல்லுவார்கள் "பாவம் இந்த பிள்ளையை இப்படி தவிக்க விட்டு விட்டு  அவன் பாட்டுக்கு வேலை அது இது னு ஊர் சுத்தக் கிளம்பிட்டானே..." என்று அவனை குத்தம் சொல்லுவார்கள். மற்றவர்கள் அவனை  தூற்றுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, தான் மெலிந்தாலும், வளையல் நெகிழ்ந்து கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும் !

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_29.html

Friday, February 28, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2

திருப்புகழ் - இரகு நாயக வருக - பாகம் 2


இதன் முதல் பாகத்தை இங்கே காணலாம்

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

இராமனின் குழந்தைப் பருவத்தை மூல நூல் எழுதிய வால் மீகியும் சரி, வழி நூல் எழுதிய கம்பரும் சரி, பாடாமலேயே விட்டு விட்டார்கள். எதை எதையோ விரிவாக எழுதியவர்கள், கதாநாயகனின் இளமை பருவத்தை பாடாமல் விட்டு விட்டார்கள்.

அந்த குறை தீர்க்க ஆழ்வார்களும் , அருணகிரிநாதரும் நிறைய பாடி இருக்கிறார்கள்.

ஒரு தாய், பிள்ளையை பாராட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்ப்பது என்பது பெரிய அதிசயம் அல்ல.

தன்னை ஒரு தாயக நினைத்துக் கொண்டு, கோசாலையாக நினைத்துக் கொண்டு பாடுகிறார்.



பாடல் (இரண்டாம் பகுதி)




எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


எந்தை வருக = என் தந்தை போன்றவனே வருக

ரகு நாயக வருக = ரகு நாயகனே வருக

மைந்த வருக = மைந்தனே வருக

மகனே யினிவருக = மகனே வருக

என் கண் வருக = என் கண்ணே வருக

என தாருயிர் வருக = எனது உயிரே வருக

அபிராம இங்கு வருக = அழகிய இராமா வருக

அரசே வருக = என் இராசா வருக

முலை யுண்க வருக = என்னிடம் பால் அருந்த வா

மலர் சூடிட வருக = பூ சூடிக்கொள்ள வருக

என்று = என்று

பரிவினொடு = பாசத்தோடு

கோசலை புகல = கோசலை அழைக்க

வருமாயன் = வரும் மாயன் அவன்


சிந்தை மகிழு மருகா  = அப்படிப்பட்ட திருமாலின் மனம் மகிழும் மருமகனே

குறவரிள = இளமையான குற மகள்

வஞ்சி = பெண்

மருவு மழகா  = அணைக்கும் அழகா

அமரர் சிறை சிந்த = தேவர்களின் சிறை பொடி பொடியாக

அசுரர் கிளை வேரொடு மடிய = அசுரர் குலம் வேரோடு மடிய

அடுதீரா = போர் செய்யும் தீரனே


திங்க ளரவு = திங்கள், பாம்பு (அரவு = பாம்பு)

நதி சூடிய பரமர் = கங்கை இவற்றை சூடிய சிவன்

தந்த குமர = தந்த குமரனே

அலையே கரைபொருத = (கடல்) அலை கரையோடு மோத

செந்தி னகரி லினிதே  = (திரு) செந்தில் நகரில் இனிதே

மருவிவளர் = சேர்ந்து வளரும்

பெருமாளே. = பெருமாளே

என்ன ஒரு இனிமையான பாடல்.

இப்படி எவ்வளவு இருக்கிறது திருப்புகழில்.


டும்முறு டுப்புறு கேட்க நேரம் இருக்கு. இதை வாசிக்க நேரம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/2.html

ஆத்திச் சூடி - உயர்வது எப்படி

ஆத்திச் சூடி  - உயர்வது எப்படி 


நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அது மட்டும் தெரிஞ்சிட்டா போதும். வேற என்ன வேண்டும்.

ஆனால், அந்த பட்டியல் பெரிசா இருக்குமோ?

கடின உழைப்பு, நேர்மை, நீதி, நாணயம், பெரிய மனிதர்கள் தொடர்பு, கொஞ்சம் மூலதனம் என்று நீண்டு கொண்டே போகுமோ?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒளவையார் ஒரு எளிய வழி சொல்கிறார்.

நாம் உயராமல் இருக்கக் காரணம் நம்மிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. நம்மிடம் நிறைய கெட்ட குணங்கள் இருப்பதுதான் காரணம் என்று.

யோசித்துப் பார்ப்போம்.

ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வீணாக செலவழிக்கிறோம்?

டிவி, whatsapp , facebook , youtube , தொலைபேசியில் அரட்டை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன்  பயனற்ற உரையாடல், வீடியோ கேம்ஸ், குப்பையான நாவல்கள், வார இதழ்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் அரட்டை, நண்பர்களோடு ஊர் சுற்றுவது ....இப்படி ஒரு நாளில் பொழுதை எவ்வளவு வீணாகக் கழிக்கிறோம்?

அது ஒரு பக்கம் இருக்க

காப்பி, டீ, புகை பிடித்தல், மது, அளவுக்கு அதிகாக உண்பது, இனிப்பு, எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, நொறுக்குத் தீனி, என்று   எத்தனை தீய உணவு பழக்கங்கள் இருக்கிறதோ அத்தைனயும் நம்மிடம் இருக்கிறது.

காலையில எந்திரிச்சவுடன் ஒரு காப்பி உள்ள போனாத்தான் வேலை நடக்கும் னு பெருமையா வேறு சொல்லிக் கொள்வது.

அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அளவுக்கு அதிகமான தூக்கம், சோம்பேறித்தனம், செய்ய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது (procrastination ), முடிவு எடுக்காமல் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவது போன்ற தீய பழக்கங்கள் இன்னொரு பக்கம்.

அதை இன்னொரு பக்கம் வையுங்கள்.

பொறாமை, கோள் சொல்வது,  வதந்திகளை பரப்புவது (யோசிக்காமல், சரி பார்க்காமல்  whatsapp செய்திகளை அப்படியே மனம் போன போக்கில் மற்றவர்களுக்கு  அனுப்புவது. இதில் "forwarded as received" னு ஒரு disclaimer வேற,  கோபம் கொள்வது, மற்றவர்கள் சொல்வதை , செய்வதை சகித்துக் கொள்ளாமல் இருப்பது,  நான் சொல்வதே சரி என்று முரண்டு பிடிப்பது,  சிண்டு முடிவது, போட்டுக் கொடுப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது, குடும்பத்தை பிரிப்பது ....

இப்படி கொஞ்சம்  தீய பழக்கங்கள்.


பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவை எல்லாம் விட்டு விட்டால் எப்படி இருக்கும்?

இந்த தீய பழக்கம் எதுவுமே இல்லாமல் இருந்தால் நாம் எப்படி இருப்போம்?

நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது  இந்த தீய பழக்கங்கள் தான்.

தீய பழக்கம் என்றால் ஏதோ திருடுவது, கொள்ளை அடிப்பது, கொலை செய்வது  என்பது மட்டும் அல்ல.

நமக்கு நாமே தீங்கு செய்துகொள்வதும் தீய பழக்கம் தானே.

வீணாக பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பதும் தீய பழக்கம் தானே.

இவற்றை எல்லாம் களைந்து விட்டால் நாம் எவ்வளவு சிறந்தவர்களாக இருப்போம்  என்று எண்ணிப்பார்ப்போம்.

இதைத்தான் கிழவி இரண்டே வார்த்தையில்  சொல்லிவிட்டுப் போனாள்

"கீழ்மை யகற்று"

இதெல்லாம் கீழ்மையானதோ, அவற்றை அகற்று.

கீழானது எல்லாம் நம்மை விட்டு விட்டு போய் விட்டால், நாம் தானாகவே உயர்ந்து விடுவோம்.

கீழான குணங்களை வைத்துக் கொண்டு, எவ்வளவு தான் முயன்றாலும், முன்னேற முடியாது.

களை எடுத்தால்தான் பயிர் வளரும்.

களை இருக்கும் போது எவ்வளவு நீர் ஊற்றி, உரம் போட்டாலும், பயிர் நன்றாக வளராது.

அட்டாங்க யோகத்தில் முதல் அங்கம் "இயமம்" எனப்படுவது.

இயமம் என்றால் "தீய பழக்கங்களை, கீழான பழக்கங்களை விட்டு விடுவது".

நாளுக்கு நாலு பாக்கெட் புகை பிடித்துக் கொண்டு நான் பிராணாயாமம் செய்கிறேன் என்றால் அதில்  ஏதாவது பலன் இருக்குமா?

ஒரு பட்டியல் போடுங்கள்.

உங்களிடம் உள்ள தீய, கீழான பழக்கங்கள் என்னென்ன என்று.

ஒவ்வொன்றாக விட்டு விட முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு கீழான பழக்கம் உங்களை விட்டு போகும் போதும், எவ்வளவு சுகமாக இருக்கிறது  என்று பாருங்கள்.

கீழ்மை அகற்று.

வாழ்வில் உயர இதை விட சுருக்கமா எப்படி சொல்ல முடியும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_28.html

Thursday, February 27, 2020

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?

கம்ப இராமாயணம் - எனக்கு இன் அருள் ஈவது?


சீதை, காப்பியத்தின் கதாநாயகி. திருமகளின் அம்சம். கற்பின் கனலி. இராமனின் மனைவி.


இராவணன், வலிமையானவன், பெரிய சிவ பக்தன், அறிவுள்ளவன், திறமை உள்ளவன்.

தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் சீதையை வேண்டுகிறான்.

காப்பியம் எழுதிய கம்பனுக்கு இது ஒரு சிக்கலான இடம்.

எல்லை தாண்டி விடக் கூடாது. விரசம் தலை தூக்கக் கூடாது. அதே சமயம் அவர்களுக்குள் நடந்த உரையாடலை சுவையாகவும் சொல்ல வேண்டும்.

தகாத உறவுக்கு இராவணன் அழைக்கிறான். அழைப்பவனும் ஏதோ சாதரணமானவன் அல்ல. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" கொண்டவன்.

யோசித்துப் பாருங்கள். எத்தனயோ படங்கள் வந்து இருக்கின்றன. ஒரு படத்திலாவது, வில்லனும், கதாநாயகியும் பேசிய பேச்சு மனதில் நின்று இருக்கிறதா?

வில்லன் முரட்டுத் தனமாய் பேசுவான், கதாநாயகி கீச்சுக் குரலில் கத்துவாள்.

இராவணனும், சீதையும் பேசிய பேச்சை கம்பன் காட்டுகிறான் பாருங்கள்.

கத்தி மேல் நடப்பது போன்ற இடம்.

பாடல்

அவ் இடத்துஅருக எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்துஎனக்கு இன் அருள் ஈவது ?
நொவ் இடைக்குயிலே ! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தைஅமிழ்து என வேண்டுவான்.

பொருள்


அவ் இடத்து = அந்த இடத்துக்கு (அசோக வனத்துக்கு)

அருக எய்தி = நெருங்கி வந்து

அரக்கன்தான் = இராவணன்

'எவ் இடத்து = எந்த இடத்தில்

எனக்கு இன் அருள் ஈவது ? = எனக்கு அருள் புரிவாய்

நொவ் இடைக்குயிலே ! = நோகும் இடை கொண்ட குயிலே

 நுவல்க' = சொல்வாய்

என்றனன், = என்றான்

வெவ் விடத்தை = வெம்மையான விஷத்தை

அமிழ்து என வேண்டுவான். = அமிழ்து என்று நினைத்து அதை வேண்டுவான்

அவள் அன்பை, அருள் என்று சொல்கிறான். ஆண்டவனிடம் பக்தன் அருள் வேண்டுவது போல. இராவணனைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆள். அவள் காலடியில் நாய் குட்டி போல கிடக்கிறான்.  எவ்வளவு கண்ணியமாக, மரியாதையுடன், பணிவோடு கேட்கிறான்.

மாற்றான் மனைவியை, நஞ்சு என்று நினைத்து ஒதுக்க வேண்டும். ஆனால், அவனோ, அதை அமுதம் என்று நினைத்து விரும்புகிறான்.


இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன. நேரம் இருப்பின், அவற்றையும் பார்ப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_27.html



Wednesday, February 26, 2020

திருக்குறள் - இல்வாழ்க்கை

திருக்குறள் - இல்வாழ்க்கை 


மீண்டும் திருக்குறளுக்குப் போவோம்.

இல் வாழ்வான் கடமையாக பதினோரு கடமைகளை சொல்லிவிட்டார்.

இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதே நமக்கு வேலையா? இதுக்கு எதுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்?  நமக்கென்று ஒரு இன்பம் கிடையாதா என்று கேள்வி எழலாம்.

வள்ளுவர் சொல்கிறார்.

பாடல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

பொருள்

அன்பும்  = அன்பும்

அறனும்  = அறமும்

உடைத்தாயின் = இருந்தால்

இல்வாழ்க்கை = இல்லற வாழ்க்கை

பண்பும் பயனும் அது = பெற்ற பண்பும் பயனும் அது

இது என்ன ஒண்ணும் புரியலையே. அன்பு, அறன் , பண்பு, பயன் னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போறார்.

சிந்திப்போம்.

பண்பு என்பது குணம். பண்புள்ள மனிதன் என்றால், நல்ல குணம், பழக்க வழக்கம் உள்ள மனிதன் என்று அர்த்தம்.

பண்பு என்பது இயற்கையாக இருக்க வேண்டும். எப்போதும் இருக்க வேண்டும்.

அவர் வெள்ளிக் கிழமை தோறும் உண்மை பேசுவார், செவ்வாய் கிழமை இலஞ்சம் வாங்க மாட்டார்   என்று சொன்னால் அது அவர் பண்பைக் காட்டாது.

உயிரே போனாலும், ஒரு காசு ஒருத்தர் கிட்ட இருந்து இலஞ்சமா வாங்க மாட்டார் என்று சொன்னால், அது அவரின் நேர்மையான பண்பைக் காட்டும்.

அது போல,

இல்லறத்தின் பண்பு எதுவாக இருக்க வேண்டும் என்றால், அன்பு.


இல்லறத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்வதே அந்த இல்லறத்தின்  பண்பாக இருக்க வேண்டும்.

கணவன், மனைவி மேல்.

மனைவி, கணவன் மேல்.

பெற்றோர் பிள்ளைகள் மேல், பிள்ளைகள் பெற்றோர் மேல், சகோதர சகோதரிகள்,  மாமா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா , பேரன், பேத்தி , மருமகன், மருமகள் என்று குடும்பத்தில் ஒருவர் மீது மற்றவர் அன்பு செலுத்துவதே  வேலையாக இருக்க வேண்டும்.


அது ஒரு அன்பான குடும்பம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.  பார்த்தால் தெரிய வேண்டும்.

குடும்பத்தில் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும்,  புகழ் பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை.

அன்போடு இருங்கள். அதுதான் குடும்பப் பண்பாக இருக்க வேண்டும்.

அந்த குடும்பம் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை போட்டுத் தள்ளலாமா?  ஊரை அடித்து உலையில் போடலாமா?

இல்லை, குடும்பத்துக்குள் அன்பு இருக்க வேண்டும்.

குடும்பம், வெளி உலகத்தோடு அற வழியில் நிற்க வேண்டும்.

அன்போடு இருப்பதின் பயன் என்ன என்றால், அற வழியில் செல்வது.

ஒரு காரியம் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் வேண்டாமா?

அன்பான இல்லறத்தின் பயன், அறம்.

அறம் என்றால் என்ன என்பதை முந்தைய மூன்று குறள்களில் சுட்டிக் காட்டினார்.

இயல்பான மூவர், தென் புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, துறந்தார், தான்  என்று இவர்களோடு அறவழியில் ஈட்டிய பொருளை பகுத்து உண்டு வாழ்வது  இல் + அறம்  = இல்லறம்.

அன்போடு இருப்பது ,  குடும்பத்தின் பண்பு.

அதன் பயன், அற வழியில் செல்வது.

வீட்டில் அன்பும் இருக்க வேண்டும்,  அறமும் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அது பண்பாகவும், பயனாகவும் இருக்கும்.

இப்படி இல்லறம் நடத்தினால் போதுமா ? அப்புறம் இந்த துறவறம், வீடு பேறு , சொர்க்கம், இறைவன் திருவடி என்றெல்லாம் சொல்கிறார்களே அதை எல்லாம் எப்படி அடைவது?

இதையே செய்து கொண்டிருந்தால், அதை எப்போது அடைவது?

கேள்வி வருமா இல்லையா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_26.html

Tuesday, February 25, 2020

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..

ஆத்திச் சூடி - என்னத்த படிச்சு ..என்னத்த செய்ய ..


"அம்பது வயசாச்சு...இனிமேல் போட்டு என்னத்த படிச்சு...என்ன செய்ய. இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன வேலைக்கா போகப் போறேன்..." என்று பலர் அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறேன்.

"இப்பவே காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது" என்று வாழ்வின் முடிவை எதிர்பார்த்து வாழ்வில் சோர்ந்து போய் இருக்கும் பலரை பார்க்க முடிகிறது.

ஐம்பது எல்லாம் ஒரு வயசா? அல்லது அறுபது எல்லாம் ஒரு வயசா ?

எந்த வயசும் ஒரு பொருட்டு இல்லை. மனம் தான் முக்கியம்.

மனம் சோர்ந்து விட்டால் உடலும் சோர்ந்து விடும். மனதை துடி துடிப்பாக வைத்து இருக்க வேண்டும்.

புதிது புதிதாக கற்க வேண்டும். புதிய உடற் பயிற்சி செய்யலாம். ஓடலாம், மலை ஏறலாம், நீச்சல் கற்றுக் கொள்ளலாம்...இப்படி உடலை உறுதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

புதிதாக இசை கற்கலாம். பாட்டு, படம் வரைதல், புதிய சமையல் கலை, கணனியில் (computer) எவ்வளவோ இருக்க கற்றுக் கொள்ள.

புதிது புதிதாக எவ்வளவோ வருகிறது. அது பற்றி கற்கலாம். கற்றதை சொல்லித் தரலாம்.

ஊர் சுற்றலாம்.

புது உடைகள் வாங்கி போட்டுப் பார்க்கலாம்.

எப்ப பாத்தாலும் ஒரே உடை. ஒரே மாதிரியான  உணவு, ஒரே மாதிரியான பழக்க வழக்கம், அதே மனிதர்களிடம் உறவு.

மனம் சுருங்கிப் போகாதா ?

ஒரு உற்சாகம் வேண்டாம்? ஒரு துடிதுடிப்பு வேண்டாம்? ஒரு உயிர்ப்பு வேண்டாம் ?


ஒளவை சொல்கிறாள்


"ஊக்கமது கை விடேல்"

எப்போதும் ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் ஆயிரம் நடக்கும். நல்லது நடக்கும். அல்லாததும் நடக்கும். அதற்காக ஊக்கத்தை கை விட்டு, சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடக் கூடாது.

ஒவ்வொரு நாளும், நமக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று நினைத்து துடிப்புடன் வாழ வேண்டும்.

உங்களோடு சேர்ந்து நேற்று இரவு தூங்கப் போன பல பேர் இன்று காலை எழுந்திருக்கவில்லை. அதுவே அவர்களின் கடைசி இரவாக இருந்தது.

நீங்கள் எழுந்து இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய விஷயம்.

எழுந்து என்ன பண்ணப் போகிறீர்கள்?

உற்சாகமாக இருங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

ஒரு துள்ளல். ஒரு வேகம் இருக்கட்டும் உங்கள் செயல்களில்.

அவ்வளவு வயசான கிழவி சொல்கிறாள்

"ஊக்கமது கை விடேல்" என்று.

கற்பதற்கும், செய்வதற்கும் எவ்வளவோ இருக்கிறது.

வாருங்கள் செய்வோம், கற்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_25.html

Monday, February 24, 2020

திருப்புகழ் - இரகு நாயக வருக

திருப்புகழ் - இரகு நாயக வருக 


ஆண் பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள், பிள்ளை சின்னஞ் சிறுவனாக இருக்கும் போது, அந்த ஆண் பிள்ளைக்கு, பெண் பிள்ளை போல பாவாடை , சட்டை போட்டு, இருக்கிற கொஞ்சம் முடியில் ஜடை பின்னி, பூ வைத்து, கண் மை போட்டு அழகு பார்ப்பார்கள். சில வீடுகளில் அந்தக் கோலத்தில் போட்டோ கூட இருக்கும்.  அதுவும் ஒரு அழகுதான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தாய்மை என்பது இயற்கையாக வரக் கூடியது. ஒரு பெண், தன் பிள்ளையை கருவில் சுமக்கிறாள். குழந்தை அவளுடலில் ஒரு பாகமாக இருக்கிறது. பிறந்த பின், தன் உதிரத்தை பாலாகத் தருகிறாள். பிள்ளையோடு ஒரு தாய்க்கு இருக்கும் உறவு என்பது மிக மிக இயற்கையானது.

ஆனால், தந்தைக்கு அப்படி ஒன்றும் கிடையாது. பிரசவம் ஆகி கொஞ்ச நேரம் கழித்துத்தான், தந்தை உள்ளே போவார். மனைவி மயக்கத்தில் கூட இருக்கலாம். பிள்ளையை பார்த்தவுடன் உடனே தந்தை பாசம் பீறிட்டுக் கொண்டு வராது. தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு இயற்கையாக வருவது அல்ல. இந்த சமுதாயம் அதை வலிந்து திணிக்கிறது. தாயக இருப்பது சுலபம். தந்தையாக இருப்பது மிகக் கடினம்.

அதிலும், தந்தை ஒரு தாயாக தன்னை நினைத்து உருகுவது அதனிலும் ரொம்ப கடினம்.

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு வயதுக்கு பின், உடம்பு தளர ஆரம்பிக்கும். என்ன உடற் பயிற்சி செய்தாலும், தொப்பை வரும். முடி நரைக்கும். பல்லு ஒவ்வொன்றாக ஆட்டம் காணும். முதுகு வளையும். உதடு தொங்கிப் போய் விடும். ஊன்று கோல் இல்லமால் நடக்க முடியாது. ஒரு கையில் ஊன்று கோல் வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும், "யார் இந்த கிழம்" என்று பேசத் தலைப்படுவார்கள். பதில் சொல்ல நினைத்தால் கிண் கிண் என்று இருமல்தான் வரும். நாக்கு குழறும். கண் மங்கும். காது கேட்காது.

புதுசு புதுசா நோய் வரும். அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் "பணத்தை இதில் போட்டு வச்சிருக்க...யார் கிட்ட எல்லாம் கடன் வாங்கி வச்சிருக்க " என்று சத்தம் போட்டு கேட்பார்கள்.

மலமும் ஜலமும் அது பாட்டுக்கு போகும். ஒரு கட்டுபாடு இருக்காது.  கட்டிய மனைவி கூட நம்மை பார்த்து அழுவாள். அந்த சமயத்தில் முருகா நீ மயில் மேல் வந்து என்னைக் காக்க வேண்டும் என்று உருகுகிறார் அருணகிரி.


பாடல்



தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.


பொருள் (சீர் பிரித்தாலே பொருள் விளங்கி விடும்)


தொந்தி சரிய  = வயிறு சரிந்து முன்னால் விழ

மயிரே வெளிற = முடி நரைக்க

நிரை தந்த மசைய = தந்தம் என்றால் பல். வரிசையான பற்கள் ஆட.

 முதுகே வளைய = முதுகு வளைய

இதழ் தொங்க = உதடு தொங்க

வொருகை தடிமேல் வர  = ஒரு கை தடிமேல் (கைத்தடி) வர


மகளிர்  நகையாடி = பெண்கள் எல்லாம் பார்த்து நகைக்கும் படி


தொண்டு கிழவ னிவனா ரென  = தொண்டு கிழவன் இவன் யார் என


இருமல் = இருமல்

கிண் கி ணெனமுன் = கிண் கிண் என்று இருமல் வர

உரையே குழற = பேச்சு குழற

விழி துஞ்சு குருடு படவே = கண் அடைத்து தெரியாமல் போக


செவிடுபடு  செவியாகி = காது கேட்காமல் போக


வந்த பிணியும் = நோய் வந்து

அதிலே மிடையும் = அதற்காக இடையில்

ஒரு = ஒரு

பண்டி தனும் = மருத்துவனும்

உறு வேதனையும் = படுகின்ற வேதனையும்

மிள மைந்தர் = இளமையான பிள்ளைகள்

உடைமை = சொத்து

கடனே தெனமுடுக = கடன் ஏது என கேள்வி மேல் கேள்வி கேட்க

துயர்மேவி = துக்கம் மேலிட


மங்கை யழுது விழவே = மனைவி அழுது விழ

 யமபடர்கள் = எமனின் தூதர்கள்

நின்று சருவ = நின்று உயிரை கவர

மலமே யொழுக = மலம் ஒழுக

வுயிர் மங்கு பொழுது = உயிர் மங்கும் பொழுது

கடிதே = வேகமாக

மயிலின்மிசை  = மயில் மேல்

வரவேணும் = வர வேண்டும்

-------------- மீதி பொருளை நாளை பார்ப்போமா? --------------------------------------

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.



https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_24.html

Saturday, February 22, 2020

ஆத்திச்சூடி - அழகு

ஆத்திச்சூடி - அழகு 

ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம். போகும் போது மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசு வாங்கிக் கொண்டு போகிறோம். அந்த பரிசுப் பொருளை அப்படியேவா கொடுக்கிறோம்? அதை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, அழகான காகிதத்தில் சுத்தி, அதற்கு மேல் ஒரு வண்ணை ரிப்பன் வைத்து கட்டி, ஒரு சிறு கார்டில் நம் பேரை எழுதித்தானே தருகிறோம். 

எப்படியும், அதை எல்லாம் கிழித்து குப்பையில் போடப் போகிறார்கள். பின் எதற்கு வேலை மெனக்கெட்டு இவ்வளவு வேலை?

இரவு, வேலை எல்லாம் முடிந்து படுக்கப் போகிறோம். படுக்கை அழகாக விரித்து, தலையணை எல்லாம் ஒழுங்காக வைத்து, அறை சுத்தமாக இருந்தால், மனதுக்கு ஒரு சுகம் இருக்கும் இல்லையா. அதை விட்டு விட்டு, கசங்கிய படுக்கை விரிப்பு, அழுக்கான தலையணை உறை, படுக்கை மேல் ஓரிரண்டு புத்தகங்கள், ஒரு உணவு உண்ட தட்டு என்று இருந்தால் படுக்க மனம் வருமா?

அலுவலகத்தில் ஒரு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் தயார். அதை அப்படியே அனுப்புவதை விட, அதில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை எல்லாம் சரி பார்த்து, எழுத்தின் அளவு (font size), எழுத்தின் தன்மை (font ), alignment , எல்லாம் சரி பார்த்து, பத்தி (paragraph ) பிரித்தது சரி தானா, பக்க இலக்கம் போட்டு இருக்கிறோமா (page number ) என்று பார்த்து பின் அனுப்பினால், படிக்கவே ஒரு சுகம் இருக்கும் அல்லவா?

பரீட்சை எழுதினாலும் அப்படி அழகாக எழுத வேண்டும். 

எதைச் செய்தாலும், அதில் ஒரு அழகு இருக்க வேண்டும். 

ஏதோ செய்து விட்டோம் என்று இருக்கக் கூடாது. 

வீடு பெறுக்கினாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். 


“If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”


― Martin Luther King Jr.


என்று மார்ட்டின் லூதர் கிங் கூறுவார். 

ஒரு கடிதம் எழுதுவது, ஒரு காப்பி போடுவது, உணவு பரிமாறுவது, குளித்து தலை வாரி உடை உடுத்துவது என்று எதிலும் ஒரு அழகு உணர்ச்சி வேண்டும். 

கசங்கிய ஆடையை உடுத்திக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?

சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒளவை ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் 

" அழகு அலாதன செய்யேல்"

என்று. 

அழகு இல்லாத ஒன்றை செய்யக் கூடாது. 

அதாவது, எதையும் அழகாகச் செய்ய வேண்டும், இல்லை என்றால் செய்யக் கூடாது. 

எந்த காரியம் செய்து முடித்தாலும், அது அழகாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால், அதற்கு அழகு கூட்டுங்கள். 

Tom Peters என்ற மேலாண்மை (மேனேஜ்மென்ட்) குரு சொல்லுவார்,

"No work is completed until you get an 'Wow' effect" 

என்று. 

எதையும் அழகாகச் செய்து படியுங்கள். 

(ஒண்ணாப்புல படிச்சது, இந்த ஆத்திச் சூடி)


Friday, February 21, 2020

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம்

கம்ப இராமாயணம் - அரக்கியர் தோற்றம் 


அறிவு எப்படி வளர்கிறது? அல்லது அறிவை எப்படி வளர்ப்பது?

பல வழிகள் இருந்தாலும், மூன்றை முக்கியமானதாகச் சொல்கிறார்கள்.

காட்சி பிரமாணம் - நேரில் பார்த்து அறிந்து கொள்வது.

அனுமான பிரமாணம் - யூகித்து அறிந்து கொள்வது.  காலையில் சாலை ஈரமாக இருக்கிறது என்றால், இரவு மழை பெய்திருக்கிறது என்று யூகித்து அறிந்து கொள்வது. மலையில் புகை தெரிந்தால், அங்கே நெருப்பு இருக்கிறது என்று யூகித்து அறிவது.

மூன்றாவது, ஆகம பிரமாணம். பெரியவர்கள் சொல்லிப்  போனதை, எழுதி வைத்துப் போனதை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது.

இதில் இரண்டாவது கூறிய அனுமான பிரமாணம் வளர்வதற்கு கற்பனை மிக மிக அவசியம். காணாத ஒன்றை மனதால் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த கற்பனையை எப்படி வளர்த்துக் கொள்வது? எங்காவது சொல்லித் தருகிறார்களா? அல்லது, ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்றால் இல்லை.

இலக்கியங்கள் தான் நம் கற்பனையை வளர்க்க உதவும். இலக்கியத்தைத் தவிர வேறு வழி இல்லை.

சினிமா, நாடகம், கவிதை, கதை, போன்றவற்றில் இருந்து தான் நாம் நம் கற்பனையை  வளர்த்துக் கொள்கிறோம்.

ஆழ்ந்து, இரசித்து படிக்கும் போது, நம் கற்பனை விரியும். மனம் விரியும்.

கண்டதை கொண்டு காணாததை அறியும் பழக்கம் வந்து விட்டால், யார் அறிவார்  ஒரு நாள் கண்ட உலகைக் கொண்டு காணாத இறைவனைக் கூட  அறிய முடியுமோ என்னவோ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.



அசோக வனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அவளை சுற்றி பல அரக்கியர் காவல் இருக்கிறார்கள். அவர்கள் தோற்றம் எப்படி இருக்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.


பொருள்


வயிற்றிடைவாயினர்;  = வயிற்றின் நடுவில் வாய் இருக்குமாம். வாயில போட்டு, மென்று, தின்று அது வயிற்றுக்குப் போக கொஞ்சம் நேரம் பிடிக்கும். வாய், வயிற்றியிலேயே இருந்தால், வாயில் போட்டவுடன் உடனே வயிற்றுக்கு போய் விடும் அல்லவா.

(கரு உற்றிருக்கும் பெண்ணை வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என்பார்கள்.  காரணம்,  அவளுடைய வயிற்றில் பிள்ளையின் வாய் இருக்கிறது என்பதால்).

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி தோண்டி புதைத்து வைத்தது போன்ற விழியினை உடையவர்கள்

கொடிய நோக்கினர்; = பார்வை கொடுமையாக இருக்கும்

எயிற்றினுக்கு = பற்களுக்கு

இடை இடை = இடை இடையே

யானை, யாளி, பேய், = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்

வெம் பிலன் என, = பெரிய குகை (பில ன் என்றால் குகை) [போன்ற

தொட்ட வாயினர். =  பெரிய வாயை உடையவர்கள்

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா ?

இரண்டு பல்லுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் ஒரு யானை படுத்து தூங்கும் என்றால்   எவ்வளவு பெரிய இடைவெளி இருக்க வேண்டும். இடை வெளி அவ்வளவு என்றால், பற்கள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும். பற்கள் அவ்வளவு பெரிது என்றால், முகம் எவ்வளவு பெரிதாக இருக்கும். அப்படி என்றால் உடம்பு எப்படி இருக்கும்?

கற்பனை செய்ய முடிகிறதா?

யானை நிற்கும் என்று என்று சொல்லவில்லை. நிம்மதியா படுத்து தூங்குமாம். ஒரு தொந்தரவும், நெருக்கடியும் இல்லாமல் , சுகமாக யானை தூங்க வேண்டும் என்றால்  பார்த்துக் கொள்ளுங்கள்.

யானை மட்டும் அல்ல, யாளி என்ற விலங்கும் , பேய்கள் கூட தூங்குமாம்.

அழகான இராமன், சீதை மட்டும் அல்ல, அகோரமான அரக்கியரைக் கூட  கம்பன்  வேலை மெனக்கெட்டு வர்ணனை செய்கிறான்.

இரசித்துப் படிக்க வேண்டும்.

கற்பனை விரிய வேண்டும்.

நிறைய இலக்கியம் படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_21.html

Thursday, February 20, 2020

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?

கம்ப இராமாயணம் - அவர் உடம்பு எப்படி இருக்கிறது?


சீதையை அசோகவனத்தில் காண்கிறான் அனுமன். தன்னைப் பற்றி கூறுகிறான். தான் இராமனின் தூதன் என்று அறிவிக்கிறான். முதலில் சந்தேகப் பட்டாலும் பின் சீதை உள்ளம் தெளிந்து அனுமனை இராமனின் தூதன் என்று நம்புகிறாள்.

அடுத்து என்ன சொல்லி இருப்பாள்?

தன்னுடைய துன்பத்தை சொல்லி இருக்கலாம். இராவணன் செய்யும் கொடுமைகளை சொல்லி இருக்கலாம். எப்ப வந்து தன்னை சிறை மீட்பார் என்று கேட்டு இருக்கலாம்.

அதெல்லாம் கேட்கவில்லை.

இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

தன்னுடைய துன்பம் அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. கணவன் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள்.

பாடல்


எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி  ஓங்க,
'உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு  கண்ணாள்,
'ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'  என்றாள்.

பொருள்


எய்து அவன் = தூதாக வந்த அவன் (அனுமன்)

உரைத்தலோடும் = சொன்னவுடன்

எழுந்து = எழுந்து

பேர் உவகை ஏற = பெரிய சந்தோஷத்துடன்

வெய்து உற = துன்பம் உற்றதால்

ஒடுங்கும் மேனி  = மெலிந்த உடம்பு

வான் உற விம்மி = வானம் வரை விம்மி

ஓங்க = பெரிதாக ஆக

'உய்தல் வந்துஉற்றதோ ?' = தான் இதில் இருந்து தப்பிக்கும் வழி வந்து விட்டதோ

என்று = என்று

அருவி நீர் ஒழுகு கண்ணாள், = அருவி போல நீர் வழியும் கண்களைக் கொண்ட சீதை


'ஐய ! சொல், = ஐயனே சொல்

ஐயன் மேனி எப்படிக்கு  = இராமனின் மேனி நலம் எப்படி இருக்கிறது

அறிதி ?' = நீ அறிவாயா . அறிந்தால் சொல்

என்றாள் = என்றாள்


தன் சுயநலத்தை விட, தன் கணவனின் நலத்தை நினைக்கிறாள் சீதை. அதுதான் பெண்மையின் உயர்ந்த குணம்.

தன் இரத்தத்தை பாலாகி பிள்ளைக்கு சந்தோஷமாக தருவாள்.

கணவனுக்காக, பிள்ளைகளுக்காக அவள் எதுவும் செய்வாள்.


தான் பசித்து இருந்தாலும், கணவன் மற்றும் பிள்ளைகள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பாள்.

"பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் 
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் "

என்று கண்ணதாசன் பாடுவான்.

பால், பழம் எல்லாம் (யாவும்) கணவனுக்கு தந்து விட்டு, அவன் சாப்பிட்ட பின் அவன் முகம் பார்த்து அவள் பசியாறுவாளாம்.

"பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா" என்றான் பாரதி.

பெண்ணை விட பெரியது என்ன இருக்கிறது என்று கேட்டான் வள்ளுவன்.

"பெண்ணின் பெருந்தக்க யாவுள?" என்பது வள்ளுவம்.


நாம் எவற்றைப் படிக்கிறோமோ, அவற்றால் பாதிக்கப் படுகிறோம்.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, சீதையின் மன நிலை  நமக்குப் புரிகிறது. அது நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சீதை அப்படி கணவன் மேல் உயிராக இருந்தாள்.

அதனால், இராமன் தன் உயிரையும் பொருட்படுத்தாது, இராவணன் மேல் படை எடுத்து அவளை காப்பாற்றினான்.

இன்று இந்த மாதிரி விஷயங்களை நாம் படிக்கிறோம்? நம் பிள்ளைகள் படிக்கிறார்கள்?

ஓரினச் சேர்க்கை. ஒரு பாலாருக்குள் திருமணம்.  பெண் விடுதலை. ஆணுக்கு பெண் சமம்.  நாங்கள் ஏன் எங்கள் நலத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

என்பது போன்ற விஷயங்களை படித்துக் கொண்டு இருக்கிறது நம் சமுதாயம்.  அவற்றால் பாதிப்பு கட்டாயம் இருக்கும்.

ஒழுக்கம் என்ற சொல் ஒழுகுதல் என்ற சொல்லில் இருந்து பிறந்ததது.

எப்படி ஒழுகும். மேலிருந்து கீழாக ஒழுகும். கீழ் இருந்து மேலாக அல்ல.

நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்து, அவர்களை போல நாம் வாழ முயல்வது ஒழுக்கம்.

இன்று வேலை வெட்டி இல்லாத கும்பல்,  மன வக்கிரம் கொண்டவர்களை பார்த்து,  அவர்கள் சொல்வதும் சரிதானே என்று கீழானவர்களை பார்த்து இந்த சமுதாயம்  பாடம்  படிக்க முயல்கிறது.

அவர்கள் செய்வது சரியா , தவறா என்பதல்ல கேள்வி.

அவர்கள் உயர்ந்தவர்களா? சிறந்தவர்களா ? ஒழுக்கம் உள்ளவர்களா? சமுதாய அக்கறை உள்ளவர்களா? குறிப்பாக உங்களை விட உயர்ந்தவர்களா என்று   பாருங்கள்.

உங்களை விட உயர்ந்தவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து நீங்கள் என்ன படித்து விட முடியும்.

எந்த விஷயத்தைக் கேட்டாலும், சொல்பவர் யார் என்று பாருங்கள்.

வியாசர், கம்பர், வள்ளுவர்,  நாயன்மார், ஆழ்வார் போன்றவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது.

whatsapp ஐ விட்டு வெளியே வாருங்கள்.

இலக்கியங்கள், உயர்ந்தவர்களை இனம் காட்டும்.

நேற்று தர்மரைப் பற்றி சிந்தித்தோம். இன்று சீதை.

உயர்ந்த விஷயங்களை மனதுக்குள் தெளிக்க வேண்டும்.

அவை பின் வளர்ந்து நல்ல பலன் தரும்.

விதைப்பது தானே முளைக்கும்.

நல்லவற்றை விதையுங்கள். நல்லதே விளையும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_20.html

Tuesday, February 18, 2020

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வேம்

வில்லி பாரதம் - இரு திறத்தேமும்  சென்று மாள்வேம்


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். அந்த குணங்களை நாம் பெரும்பாலான சமயங்களில் கடை பிடிப்போம். அது அல்ல சாமர்த்தியம். அந்த நல்ல பண்புகளுக்கு ஒரு சோதனை நேரும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான் கேள்வி.

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது நம் கொள்ககையாக இருக்கலாம். நமக்கு என்று ஒரு அவசரம் வரும் போது நாம் இலஞ்சம் கொடுக்காமல் இருப்போமா என்பது தான் கேள்வி.

பிள்ளைக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் வேண்டும். போதுமான மதிப்பெண்கள் இல்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும். கொடுப்போமா, மாட்டோமா?

பொறுமை நல்லது. கோபம் கெட்டது. நமக்கு இது தெரியும். இருந்தும், நமக்கு தீங்கு செய்தவர்கள் மேல் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்போமா? மனது அளவிலாவது அவர்களுக்கு தீங்கு வர வேண்டும் என்று நினைக்க மாட்டோமா?

தர்மன்.

இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஒரு கதா பாத்திரம்.

சூதில் தோற்று, மனைவியை, அரச சபையில் துகில் உரிந்தவனை, தன்னையும் தன்   தம்பிகளையும் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியவன் மேல் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா?

சொல்லியபடி நாட்டை தர மறுக்கிறான் துரியோதனன்.

பஞ்ச பாண்டவர்களிடம் , கண்ணன் கேட்கிறான், "நான் தூது போகிறேன். துரியோதனனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்" என்று.

தர்மன் சொல்கிறான்

"காட்டிலே மூங்கில் காடுகள் இருக்கும். அதில் உள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பிடித்துக் கொள்ளும். அப்படி பிடித்த தீ, அந்த இரண்டு மூங்கில்களை மட்டும் அல்ல, அந்த காட்டையே எரித்து அழித்து விடும். அது போல, எங்களுக்குள் யுத்தம் வந்தால், இரண்டு பக்கத்து மக்களும் அழிவோம். எனவே சண்டை வேண்டாம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வழி தேடு"  என்று.

பாடல்

வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர்
                                வரைக்காடென்னச்,
செயிரமரில் வெகுளிபொரச் சேரவிருதிறத்தேமுஞ்
                            சென்றுமாள்வேம்,
கயிரவமுந்தாமரையுங் கமழ்பழனக்குரு நாட்டிற்கலந்துவாழ,
வுயிரனையாய் சந்துபடவுரைத்தருளென்றானறத்தினுருவம்
                                 போல்வான்.

பொருள்


வயிரமெனுங் = வயிரம் போன்று

கடு நெருப்பை = கொடிய நெருப்பை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கினுயர் = வளர்கின் உயர் = வளர்த்தால் உயர்ந்த

வரைக் = மலை போல் பெரிய

காடென்னச் = காடு போல

செயிரமரில் = வரும் போரில்

வெகுளிபொரச் = கோபம் போங்க

சேர = ஒன்றாக

விருதிறத்தேமுஞ் = இரு திறத்தில் உள்ளவர்களும்

சென்று மாள்வேம், = சென்று இறப்போம்

கயிரவமும் = ஆம்பல் மலர்களும்

தாமரையுங்  = தாமரை மலர்களும்

கமழ் = மலர்ந்து  மணம் வீசும்

பழனக் = பழைய,

குரு நாட்டிற் = குரு நாட்டில்

கலந்துவாழ, = நாங்கள் எல்லோரும் கலந்து வாழ

வுயிரனையாய்  = எங்கள் உயிர் போன்றவனே

சந்துபட = சமாதானத்துடன் வாழ

வுரைத்தருளென்றான = உரைத்து அருள் என்றான்

அறத்தினுருவம் = அறத்தின் உருவம்

போல்வான். = போன்றவன்

எங்களுக்குள் சண்டை வந்தால் நாங்கள் மட்டும் அல்ல, எங்களை சேர்ந்தவர்களும் அழிவார்கள். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப் பிடித்தால், அந்த மரங்கள் மட்டும் அல்ல, அவை சேர்ந்த காடும் அழியும். அது போல.

இரவில் மலர்வது ஆம்பல்.

பகலில் மலர்வது தாமரை.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட மலர்கள் ஒன்றாக இருக்கும் நாட்டில், மனிதர்களாகிய  நாங்கள் ஒன்றாக இருக்க முடியாதா. எனவே, நாங்கள் ஒன்றாக வாழ வழி பார் என்றான்.

கௌரவர்கள் செய்தது சின்ன கொடுமை அல்ல. எங்களுடைய கோபத்தால், எத்தனையோ பேர்  அழிந்து போவார்கள். அவர்கள் பக்கம் மட்டும் அல்ல, எங்கள் பக்கத்திலும்  அழிவு இருக்கும். எனவே, போர் வேண்டாம் என்கிறான்.

கோபம் யார் மேல் வருகிறதோ, அது அவர்களை அழிக்கிறதோ இல்லையோ, கோபம் கொண்டவர்களை  கட்டாயம் அழிக்கும்.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் எமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. யாரிடம் இருக்கிறதோ, அவர்களைக் கொல்லும்.

இன்று உலக அரங்கில் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. நாடுகள் ஒன்றோடு ஒன்று   மோதிக் கொண்டு இருக்கின்றன.

சமாதானம் என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.

பாரதம் போன்ற நீதி நூல்கள் நம் சிந்தனையை பக்குவப் படுத்த உதவும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_18.html

Saturday, February 15, 2020

திருக்குறள் - பழியஞ்சிப் பாத்தூண்

திருக்குறள்  - பழியஞ்சிப் பாத்தூண்


திருமணம் செய்து கொள்வது பதினோரு கடமைகளை செய்வதற்காக என்று பார்த்தோம்.

பதினோரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவுதானே. செஞ்சுட்டாப் போகுது என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து எல்லோருக்கும் உதவி செய்து விட்டால் போகுது என்று சிலர் நினைக்கலாம். அப்படி யாராவது நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்கும் ஒரு குறள் எழுதி இருக்கிறார்.

பாடல்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

பொருள்

பழியஞ்சிப்  = பழிக்கு அஞ்சி

பாத்தூண் = பகுத்து ஊண் (உணவு)

உடைத்தாயின் = உள்ளது என்றால்

வாழ்க்கை = வாழ்க்கை

வழியெஞ்சல் = வழி முடிதல்

எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை

பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும்.

சட்டத்துக்கு அஞ்சி, தர்மத்துக்கு அஞ்சி என்று சொல்லவில்லை. பழிக்கு அஞ்ச வேண்டும்.

ஊருக்குள் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எவ்வளவோ தவறுகள் செய்கிறார்கள்.  சட்டத்தால் அவர்களை தொட முடிவதில்லை. சாட்சி இல்லை, திறமையான வக்கீல்,  சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாட்சிகளை விலைக்கு  வாங்குவது அல்லது மிரட்டுவது என்று பல வழிகளில்  சட்டத்தின் பிடியில் இருந்து  தப்பி விடுகிறார்கள்.

ஆனால், ஊராரின் பழி சொல்லுக்கு தப்ப முடியாது. அந்த பழிக்கு பயந்து  நேர்மையான வழியில் பொருள்  சேர்க்க வேண்டும்.

அப்படி சேர்த்த பொருளை,

பாத்தூண் = பகுத்து உண்ண வேண்டும்.

முதலில் கூறிய  பதினோரு பேருடன் பகுத்து உண்ண வேண்டும்.

அப்படி செய்தால் என்ன கிடைக்கும்?

அப்படி செய்தால் ஒருவன் செல்லும் வழி எப்போதும் முடிவு அடையாது.

அது என்ன வழி முடிவு அடையாது?

அற வழியில் பொருள் சேர்த்து அதை எல்லோருடனும் சேர்ந்து உண்பவனுக்கு  பகைவராலோ, அல்லது மற்ற யார் மூலமாவதோ தடை வந்து சேராது. அவன் தன் வழியில் சென்று கொண்டே இருக்கலாம். ஒரு பயமும் இல்லாமல் , தடை வந்து விடுமோ என்ற பயம் இல்லமால் செல்லலாம்.

இன்னொரு பொருள்,  அவன் வழியை பின் பற்றி அவன் சந்ததியினரும் மற்றவர்களும் நடப்பார்கள்.  எனவே, அவனுக்குப் பின்னும், அவன் சென்ற நல்வழி  தொடர்ந்து நடக்கும்.

மற்றும் ஒரு பொருள், வழி என்பதற்கு வம்சா வழி என்று ஒரு பொருளும் உண்டு. அதாவது, அவன் சந்ததி செழித்து நிற்கும். இப்ப கூட, ஏதாவது ஆபத்தில் இருந்து நாம்  தப்பினால் "எதோ உன் முன்னோர் செய்த புண்ணியம், அவங்க செய்த தான தர்மம் உன்னை இன்னிக்கு காப்பாத்தியது"  என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?

அற வழியில் பொருள் சேர்த்து பகுத்து உண்டால், அது நம் சந்ததியினரை காக்கும்.

இது என்ன பெரிய அக்கிரமமா இருக்கே. கல்யாணம் பண்ணி மனைவி பிள்ளைகளோடு சந்தோஷமா இருக்கலாம் என்றால், இந்த வள்ளுவர் ஊரில் உள்ளவருக்கெல்லாம்  உதவி செய் , அதற்குத்தான் கல்யாணம் என்கிறார். அப்படி எல்லாம் இருக்க முடியுமா ?  நடக்கிற காரியமா? இதுக்கா திருமணம் செய்வது?

அவசரப் படாமல், வள்ளுவர் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_15.html



Wednesday, February 12, 2020

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

பாரதியார் பாடல் - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


"கொடுங் கூற்றுக்கு இரையாகி மாள்வேன் என்று நினைத்தாயோ" என்று இடுப்பில் கை வைத்து காளியிடம் பார்தி கேள்வி கேட்கிறான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

காளி கேட்டிருப்பாள்..."உனக்கு எப்படித் தெரியும் நீயும் அப்படி ஒரு வேடிக்கை மனிதராய் மாறமாட்டாய் " என்று?

பாரதி: எனக்குத் தெரியும் ஏன் என்றால், நான் உன்னிடம் சில வரங்கள் கேட்பேன். அவற்றை நீ எனக்குத் தருவாய். அதன் மூலம் நான் மற்ற மனிதர்களை போல ஆக மாட்டேன்

காளி : அப்படி என்ன வரங்கள் கேட்கப் போகிறாய்?

பாடல்

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

எளிய பாடல். எனவே அருஞ்சொற் பொருள் எழுதவில்லை.

இந்து மதம் மூன்று விதமான கர்மங்களைப் பற்றி பேசுகிறது.


முன் பிறவியில் செய்து, அப்போது தீர்க்காமல் தொடர்ந்து வருவது.  இதை சஞ்சித கர்மம் என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிறவியில் செயல்படத் தொடங்கும் வினைகள். இதற்கு பிராரப்த கர்மம் என்று பெயர்.

இந்த இரண்டும் சேர்ந்து, இந்தப் பிறவியில் கழிக்காமல் அடுத்த பிறவிக்கு கொண்டு செல்வது. இதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்" என்பார் மணிவாசகர்.


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி 

என்பது சிவபுராணம்.




இந்தப் பிறவியில் கர்மம் செய்யாமல் இருந்து விடலாம். முன்பு செய்த பழிக்கு என்ன செய்வது?

"முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும்" என்பார் அருணகிரி.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே



நமக்கு தெரியக் கூடத் தெரியாது.

எனவே பாரதி முதலில் அதை வேண்டுகிறான்


"என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -"

இனியும் அது தொடர கூடாது என்று.



"இனி என்னைப் புதிய உயிராக்கி "


எப்போதும் பழமையிலேயே கிடந்து உழல்கிறோம். பழைய பஞ்சாங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். வேதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது,  புராணத்தில் இப்படி சொல்லி இருக்கிறது என்று இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பாரதி சொல்கிறான்,  "என்னை உயிராக ஆக்கி" என்று.

அடுத்தது,

" எனக்கேதுங் கவலையறச் செய்து -"


கவலை அறவே இல்லாமல் செய்து விடு என்கிறான்.

கவலை இல்லாமல் எப்படி இருப்பது?


"மதிதன்னை மிகத் தெளிவு செய்து -"

அறிவு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் அனைத்து கவலைகளுக்கும் காரணம். குழப்பமே எல்லா கவலைகளுக்கும் காரணம். மதி தெளிவாகிவிட்டால்  கவலை தீர்ந்து விடும்.


என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

கவலை போனால் மட்டும் போதாது. அதோடு சேர்ந்து சந்தோஷமும் போய் விட்டால்  என்ன செய்வது? 

என்னவே, கவலை போகட்டும், சந்தோஷம் இருக்கட்டும் என்று வேண்டுகிறான். 

ஆண்டவனிடம் இப்படி அதிகாரமாக கேட்கலாமா?  ஒரு பணிவு வேண்டாம்? 
பக்தி வேண்டாம்?

பாரதியைப் போல ஆண்டவனிடம் அதட்டிக் கேட்டது யாராவது உண்டா ? 

நாளை சிந்திப்போம் அது பற்றி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_12.html

Tuesday, February 11, 2020

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள்

பாரதியார் பாடல் - வேடிக்கை மனிதர்கள் 


நாம் பல பாடல்களை முதல் சில வரிகளை படித்து இருப்போம். அதுவே முழுப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அல்ல. முழுப் பாடலும் படிக்கும் போது ' அட ! இந்தப் பாடலுக்குப் பின் இவ்வளவு இருக்கிறதா' என்று ஆச்சரியம் வரும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ள பாடல்.

பாடல்

தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

தனித்த்தனியே பொருள் சொல்லத் தேவை இல்லை. மிக எளிதான பாடல்தான்.

இது ஒரு பக்திப் பாடல் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

'நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?' என்று யாரிடம் சவால் விடுகிறான் பாரதி தெரியுமா?

காளியிடம்.

மற்ற மனிதர்களை போல  நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ  என்று காளியிடம் கேள்வி  கேட்க்கிறான் பாரதி.

இந்தப் பாடலின் பிற் பகுதியைப் படித்தால் அது புரியும். அது நாளை வரும்.

வேடிக்கை மனிதர்கள் என்று பாரதி சொல்வது யாரை?

ஒரு வேளை நம்மைத்தானோ?

என்ன செய்தோம் இதுவரை ?

தினம் உணவு உண்டோம்.

"தேடிச் சோறுநிதந் தின்று -"

அந்த சோறு தின்பதற்காக, ஒரு இருப்பது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள் படித்தோம். வேலைக்குப் போனோம். சம்பாதித்து உணவு உண்கிறோம். அது தானே முதல். வீடு, கார் எல்லாம் அப்புறம் தானே. சோறு திங்க வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கிறோம்.

சரி.

அப்புறம் என்ன சாதித்தோம்?

"பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -"

பெரிதாக ஏதாவது சிந்திக்கிறோமா?  உலகை மாற்றும் படி, பெரிய கண்டு பிடிப்பு ஏதாவது செய்ய சிந்திக்கிறோமா? Whatsapp , faceboook , என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இந்த வெட்டிக் கதைப் பேசுவதில் போக்குகிறோம்.

சரி நல்லா சாப்பிட்டாச்சு, வாட்சப்பில் foward பண்ணுவதும், வந்த forward களை படிப்பதுமாக   நாள் ஓடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறோம்?

" மனம் வாடித் துன்பமிக உழன்று -"

நிச்சயம் செய்கிறோம். கவலைப் படாத நாள் உண்டா? துன்பம் இல்லாத நாள் உண்டா ? ஒன்றும் இல்லாவிட்டாலும், எதையாவது நினைத்து கவலைப் படுவதே இயல்பாகப் போய் விட்டது. கவலை இல்லாதா நாள் ஒரு நாளே இல்லை என்று ஆகி விட்டது.

சரி, சாப்பாடு, அரட்டை, துன்பம் ஆச்சு. அப்புறம் வேற ஏதாவது செய்கிறோமா?

" பிறர் வாடப் பலசெயல்கள் செய்து "


நாம் கவலைப் பட்டால் போதாது என்று, மற்றவர்களையும் கவலைப் படுத்துகிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மற்றவர்களை கவலைப் பட வைக்கிறோம்.


" நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -"

வாழ்க்கை இப்படியே போய் விடுகிறது. நரை கூடி, கிழப் பருவம் வந்து சேர்கிறது.


" கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -"

கூற்றுவன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான் ஒரு நாள்.


" பல வேடிக்கை மனிதரைப் போலே -"

Funny Fellows என்று பாரதி நம்மைச் சொல்வது போலவே இருக்கிறது.

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நானும் அப்படி ஆவேனோ என்று காளியிடம் எதிர்த்துக் கேட்கிறான்.

அதற்கு காளி என்ன சொன்னாள் ?

நாளை பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_11.html

Monday, February 10, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்

வில்லி பாரதம் -  சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்


அம்பையை பீஷ்மர் சிறை எடுத்தார். அம்பையோ, தான் சாளுவ மன்னனை விரும்பவதாகச் சொன்னாள். 'சரி, நீ அவனையே மணந்து கொள் ' என்று பீஷ்மரும் அம்பையை சாளுவனிடம் அனுப்பி வைத்தார். மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவளை திருப்பி அனுப்பிவிட்டான்.

போக வழி இல்லாமல் தவித்த அவள், தன்னுடைய தந்தையிடமே வந்து சேர்ந்தாள். நடந்ததை எல்லாம் கூறினாள். தன் மகள் நிலை கண்டு வருந்தி, காசி மன்னனும், பீஷ்மருக்கு ஒரு தூது அனுப்பினான்.


பாடல்


தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்த னின்னலுரை
                                           தந்ததும்,
கோதை யாலுறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன்
                                         மறுத்ததும்,
பேதை கூறமன நொந்தி ரங்கியவன் மிக்க நண்பினொடு
                                        பின்னையும்,
தூதை யேவிமண முற்றி ரந்தனன்வி சும்பு லாவுநதி
                                         சுதனையே.

பொருள்

தாதை  = தந்தை

தாளினில் = கால்களில்

விழுந்து = விழுந்து

சந்தனுவின் = சந்தனு மகாராஜாவின்

மைந்த னின் = மைந்தனின் (பீஷ்மர்)

இன்னலுரை = துன்பம் தரும் செய்தி

தந்ததும் = தந்ததும்

கோதை யால் = பூ மாலையால்

உறவு கொண்டு = மணந்து கொள்ள இருந்த

கைதரல் = கை பற்றி

குறித்த = தான் மனதில் நினைத்த

கோமகன் = மன்னன் (சாளுவன் மன்னன்)

மறுத்ததும், = தன்னை மணந்து கொள்ள மறுத்ததுவும்

பேதை கூற = மகள் கூற

மன நொந்து = மனம் வாடி

இ ரங்கியவன் = இரக்கப்பட்டு அவன்

மிக்க நண்பினொடு = மிகுந்த நட்போடும்

பின்னையும், = மேலும்

தூதை யேவி = தூதை அனுப்பி

மண முற்றி ரந்தனன் = மணம் செய்து கொள்ளும் படி வேண்டினான்

விசும்பு லாவு = ஆகாயத்தில் உலவும்

நதி = கங்கை

சுதனையே. = மகனையே

கங்கா தேவியின் மகனான பீஷ்மரிடம் தன் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி  வேண்டினான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

தூக்கிச் சென்ற பீஷ்மர் வேண்டாம் என்று சாளுவனிடம் போனாள், மகள்.

சாளுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

கையை பிசைந்து கொண்டு நிற்கும் மகள். அவளின் மன நிலை எப்படி இருக்கும்.

தன் மகளின் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று வருந்தும் தந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?

பீஷ்மரை எதிர்க்கவும் முடியாது. சாளுவன் கூறுவதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. பெண் ஆசைப்பட்டதிலும் தவறு இல்லை.

பாரதம் பூராவும் இது போன்ற உணர்ச்சி மிகுந்த இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனித மனத்தின் சலனங்களை, ஆசா பாசங்களை, சிக்கல்களை  படம் பிடித்து காட்டுவதில் பாரதம், இராமாயணத்தை விட ஒரு படி  மேலே நிற்கிறது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கதை எப்படி மேலே நகர்கிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_10.html

Sunday, February 9, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - நின் மெய் தொடேன்

வில்லி பாரதம்  - சிகண்டி - நின் மெய் தொடேன் 


"நான் சாளுவனை மனதால் விரும்புகிறேன்" என்று சொன்ன அம்பையை, "சரி நீ அவனிடமே போ" என்று சொல்லி அனுப்பினார் பீஷ்மர்.

அம்பையும் சந்தோஷமாக சாளுவனிடம் சென்றாள். தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனிடம் வேண்டினாள்.

அதற்கு அவனோ "மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ அவனுக்கு உரியவள். உன்னை நான் தொட மாட்டேன். நீ பீஷ்மரிடமே போ " என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள்.


பாடல்

சென்றவம்பையைத் தீமதிச்சாலுவன்
வென்றுதெவ்வர் கவர்ந்தநின்மெய்தொடேன்
என்றிகப்ப விவனுழைமீளவும்
மன்றல்வேண்டினண் மன்றலங்கோதையாள்.


பொருள்


சென்றவம்பையைத் = சென்ற அம்பையை

தீ மதிச் சாலுவன் = தீய மதி கொண்ட சாளுவன்

வென்று = என்னை வென்று

தெவ்வர் = என் எதிரி

கவர்ந்த = கவர்ந்து சென்ற

நின் மெய் தொடேன் = உன் உடலை நான் தொட மாட்டேன்

என்றிகப்ப = என்று இகழ்ந்து திருப்பி அனுப்ப

விவனுழை = இவன் (பீஷமர்) வீட்டுக்கு

மீளவும் = மீண்டும்

மன்றல் வேண்டினள் = மணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள்

மன்றலங்கோதையாள். = மணமுள்ள மாலை அணிந்த அந்தப் பெண்



சாளுவன் செய்ததும் சரி என்றே படுகிறது. தன்னை தோற்கடித்து, தூக்கிச் சென்ற பெண்ணை எந்த மன்னன் மணம் செய்து கொள்வான்?


நான் சாளுவனை காதலிக்கிறேன், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்  என்று சொல்லி விட்டு, இப்போது திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறினால் பீஷ்மர் எவ்வாறு ஏற்பார்?

அம்பை யோசித்து இருக்க வேண்டும்.

இப்போது இரண்டும் கெட்டானாக அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்று  நடுவில்  கிடந்து அல்லாடுகிறாள்.

இனி, அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?

ஒரு நிகழ்ச்சியில் எதிர்காலமே கேள்வி குறியாகிப் போனது.

எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.

பிறந்த வீட்டுக்கும் போக முடியாது. பீஷ்மரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். சாளுவனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான். மற்ற அரசர்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவள் செய்த தவறுதான் என்ன?

அவளுக்கு கோபம் வருகிறது. தன் நிலை குறித்து சுய பச்சாதாபம் வருகிறது.   இந்த ஆண்கள் தன் வாழ்வில் இப்படி விளையாடுகிறார்களே என்று ஆங்காரம் வருகிறது.

ஒரு பெண் பொங்கினால் என்ன செய்வாள் என்று பாரதம் காட்டுகிறது.

ஒரு முக்கியத்துவமும் இல்லாத அம்பை, பாரதக் கதையை புரட்டிப் போடுகிறாள். தனி ஒரு பெண்ணாக நின்று.

அர்ஜுனனும், கண்ணனும் சாதிக்க முடியாத ஒன்றை இந்தப் பெண் சாதித்துக் காட்டுகிறாள்.

பெண்ணின் கோபம் எது வரை போகும் என்று பாரதம் காட்டுகிறது.

பார்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_9.html

Friday, February 7, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று

வில்லி பாரதம் - சிகண்டி - எமர்களுக்கு இஃது இயற்கை அன்று


காசி இராஜனின் மூன்று மகள்களை, பீஷ்மர் சிறை எடுத்து சென்றார் என்று பார்த்தோம்.

போகிற வழியில், சாளுவ தேசத்து அரசன் பீஷ்மரை தடுத்து போர் செய்தான்.

பீஷ்மர் அவனை வென்று, பெண்களை கொண்டு சென்றார்.

அரண்மனை சென்ற பின், அம்பை என்ற பெண் பீஷ்மரிடம் "நான் என் மனதை சாளுவ அரசனிடம் கொடுத்து விட்டேன். நான் அவனை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

பீஷ்மரும், அவளுடைய காதலை மதித்து, "விருப்பமில்லா பெண்ணை, பலவந்தமாக மணப்பது எமக்கு வழக்கம் அல்ல. எனவே, நீ உன் மனம் விரும்பிய சாளுவ மன்னனையே சென்று மணந்து கொள்" என்று கூறி அனுப்பி வைத்ததார்.

பாடல்

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.

பொருள்

சமரின் = போரில்

முந்திய = முன்னால் வந்த

சாலுவன் = சாளுவன்

மேல் மனம் = மேல் என் மனம்

அமர நின்றது = சென்று நின்றது

அறிந்துழி = அறிந்த போது

அம்பையை = அம்பை என்ற இளம் பெண்ணை நோக்கி

'எமர்களுக்கு = எங்களுக்கு

இஃது = இது

இயற்கை அன்று' = இயல்பானது அல்ல

என்னவே = எனவே

அமர் அழிந்த = போரில் தோற்ற

அவனுழைப் = அவனிடம் (சாளுவனிடம்)

போக்கினான். = அனுப்பினான்



சுயம்வரம் நடப்பதும், அதில் பெண்களை கொண்டு செல்வதும், மற்ற அரசர்கள் அதை  மறித்து போர் செய்வதும், வீரத்தை நிலை நாட்டி பெண்ணை திருமணம்  செய்து கொள்ள நினைப்பதும் வழக்கமான ஒன்று தான்.

இது வரை நடந்தது எதுவும் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

பின் எங்கு தவறு நடந்தது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_7.html

Thursday, February 6, 2020

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

திருக்குறள் - ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


6 விதமான கடமைகளை முந்தைய இரண்டு குறள்களில் பார்த்தோம்.

அடுத்த குறளில் அடுத்த ஐந்து கடமைகளைப் பற்றிச் சொல்கிறார்.

அவை என்ன

பாடல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

பொருள்

தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்

தெய்வம் = தெய்வம்

விருந்து = விருந்தினர்

ஒக்கல் =  சுற்றத்தார்

தான் = தான்

என்று ஆங்கு = என்று அங்கே

ஐம்புலத்தாறு = ஐந்து வகையிலும்

ஓம்பல் தலை = காப்பது தலையாய கடமை

தென் புலத்தார் என்றால் பித்ரு தேவதைகள்.

அவர்கள் யார் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு  சிந்தனை முன்னோட்டம்.

சில நாள் நமக்கு காரணம் இல்லாமல் மனம் சந்தோஷமாக இருக்கும். சில நாள், நாம் எதிர் பாராத ஏதோ ஒரு நன்மை நடக்கும். லாட்டரி டிக்கெட்டில் பரிசு விழலாம்.  கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த ஒன்று  கிடைத்து விடலாம். ரொம்ப நாள் மனதை அரித்துக் கொண்டிருந்த  ஒன்று சட்டென்று விலகி மனதுக்கு இதம் தரலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

இந்து மதம் ஒரு காரணம் சொல்கிறது. நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்.

பித்தரு தேவதைகள் என்று சில தேவதைகள் இருக்கின்றன. இவர்களின் வேலை, முன்னோருக்கு நாம் செய்யும் சிரார்த்தம் போன்ற பூஜைகளின் பலனை  நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பது. நம் முன்னோர் எங்கு இருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ நமக்குத் தெரியாது.  அந்த ஆத்மா  ஏதோ நாட்டில், ஏதோ ஒரு பிறவி எடுத்து இருக்கும். உடல் வேறு ஆனால், ஆன்மா ஒன்றுதான். நாம் செய்யும் புண்ணிய பலன்களை அந்த  ஆன்மாவுக்கு  இப்போதுள்ள புதிய உடலில் இந்த பித்ரு தேவதைகள் கொண்டு சேர்ப்பார்கள்  என்பது நம்பிக்கை.

இன்று உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத நன்மை நடக்கிறது என்றால்,  உங்கள் வாரிசு   யாரோ, உங்களுக்காக தர்ப்பணம் செய்து இருக்கிறான் என்று பொருள். அவன் செய்த புண்ணிய பலன் உங்களுக்கு எதிர்பாராத நன்மையாக வந்து சேர்ந்து இருக்கிறது.

நூலிழையில் வண்டியில் அடிபடுவதில் இருந்து தப்பி இருப்பீர்கள்.

எதிர்பாராத பதவி உயர்வு, பட்டம், பணம், சொத்து, என்று ஏதோ நன்மை வந்து சேர்ந்து இருக்கும்.

இது நம்பிக்கை.

இந்த பிதிருக்கள் தென் திசையில் இருப்பார்கள் என்பது மற்றுமொரு நம்பிக்கை.

இல்வாழ்வான், தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.

அடுத்தது, "தெய்வம்".

குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டும்.

பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள்.

அடுத்தது "விருந்தினர்".

விருந்து இரண்டு வகைப்படும் என்கிறார் பரிமேல் அழகர்.  அறிந்து வருவது, அறியாமல் வருவது.  முன்ன பின்னை தெரியாமல், புதிதாக வருபவரும் விருந்தினர் எனப்படுவர். 

அடுத்தது, "சுற்றம்". அது பற்றி ரொம்ப சொல்ல வேண்டாம்.

கடைசியில் ஒரு பெரிய வெடி குண்டைப் போடுகிறார் வள்ளுவர்

"தான்"

நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னார் என்று இருக்கின்ற  செல்வத்தை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு, நம்மை கவனிக்காமல் இருந்து விடக் கூடாது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பல வீடுகளில் பெண்கள் தங்கள் உடல் நலம் பேணுவது கிடையாது. கேட்டால், உடற் பயிற்சி செய்ய, யோகா கிளாஸ் செல்ல எல்லாம் எங்க நேரம்  இருக்கிறது? காலையில் எழுத்தால் படுக்கிற வரைக்கும் நேரம் சரியா இருக்கு  என்று உடலை காத்துக் கொள்வது இல்லை.

ஆண்களும் அப்படித்தான்.  அரக்க பரக்க ஓடுகிறார்கள். வேலை நிமித்தம் சதா சர்வ காலமும் உழைக்கிறார்கள்.  உடலை பேணுவது இல்லை.

உடலை மட்டும் அல்ல, அறிவையும்  வளர்ப்பது கிடையாது.

தன்னை தான் காத்துக் கொள்வதும் இல் வாழ்வான் கடமையுள் ஒன்று என்கிறார் வள்ளுவர்.

இந்த பதினொரு கடமைகளை செய்யத் தயார் என்றால், திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் என்பதை ஏதோ ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும்  அந்தரங்க விஷயம் என்று நம் சமுதாயம் நினைக்கவில்லை.

அதை ஒரு சமுதாய கடமையாகப் பார்த்தது.

எந்த அளவுக்கு நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் !


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_6.html

Wednesday, February 5, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும்?


முந்தைய குறளில், "இயல்புடைய மூவருக்கு நல்லாற்றின் நின்ற துணை" என்று  பார்த்தோம்.

 வள்ளுவர் அடுத்த மூன்று கடமைகள் பற்றி சொல்லுகிறார்.

பாடல்


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பொருள்

துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும்

துவ்வா தவர்க்கும் = துவ்வாதவர்க்கும்

இறந்தார்க்கும் = இறந்தார்க்கும்

இல்வாழ்வான் = இல்வாழ்வான்

என்பான் துணை = என்பவன் துணையாக நிற்க வேண்டும்.

போன குறளில் துறவிகள் பற்றி சொல்லி விட்டாரே, மீண்டும் ஒரு முறை ஏன் துறந்தாரைப் பற்றி சொல்ல வேண்டும் ?

இங்கே துறந்தார் என்பது, காக்கப் பட வேண்டியவர்களால் காக்காமல் விடப் பட்டவர்கள் என்பதாகும். "களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்"  பரிமேல் அழகர்.

கலைக்கண் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். அதற்கு அர்த்தம், "அன்பு காட்டுதல், அரவணைத்தல்" என்று பொருள்.

"ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே" என்பது பிரபந்தம். உன்னைத் தவிர என்னிடம் அன்பு செய்ய யார் உள்ளார்கள் என்று உருகுகிறது பிரபந்தம்.


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே


ஒரு வீட்டில், பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல் விட்டு விட்டால்,  இல் வாழ்வான் அவர்களை காக்க வேண்டும். காரிலோ விமானத்திலோ செல்லும் போது பெற்றோர் விபத்தில் இறந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பிள்ளைகள் அனாதைகள் ஆகி விடலாம். யாரோ ஒரு இல் வாழ்வான் அந்தப் பிள்ளைகளை தத்து எடுத்து காக்க வேண்டும். அது அவன் கடமை.

"துவ்வாதார்" என்றால்  ஏழைகள். விதி வசத்தால் ஏழையாகிப் போனவர்களை இல் வாழ்வான் காக்க வேண்டும்.

இறந்தார்....இறந்தவர்களை எப்படி காக்க முடியும்? தன் வீட்டிற்கோ, அல்லது தெருவிற்கோ வந்து அனாதையாக இறந்தவனை இல் வாழ்வான் நல்லடக்கம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய நீர் கடன்களை செய்ய வேண்டும்.

ஜடாயு என்ற பறவைக்கு இராமர் நீர் கடன் செய்தார். இராமர் நீர் கடன் செய்யாவிட்டால் யாரும் ஏன் செய்யவில்லை என்று கேட்கப் போவதில்லை.

அனாதை பிணமாக விட்டு விடக் கூடாது.

மிகப் பெரிய சமுதாய சிந்தனை இது.

ஒரு சமூகம், அதில் உள்ள நலிந்தவர்களை கை தூக்கி விட வேண்டும் என்று  விதி செய்து வைத்தார்கள் நம்மவர்கள்.

இன்று கம்யுனிசம், சோசியலிசம், என்றெல்லாம் பொது உடமை பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும். நம் சமுதாயம், தனி உடமையை ஆதரித்தது அதே சமயம், தனி மனிதனுக்கு கடமைகளை விதித்தது.

உன் பணத்தை வைத்துக் கொண்டு நீ மட்டும் அனுபவிக்காதே. துன்பப் படுபவர்களுக்கு உதவி செய். அதற்கு நீ தயார் என்றால், திருமணம் செய்து கொள். இல்லை என்றால், தனி மனிதனாகவே இருந்து விட்டுப் போ, என்றது நம் சமுதாயம்.


நம் தெருவில் வந்து இறந்தவனுக்கு நீர் கடன் செய்ய வேண்டும், நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு ஒரு குறள் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு சமுதாய அக்கறை இருந்திருக்க வேண்டும்.

எந்த அளவுக்கு தனிமனிதனை சமுதாயத்தோடு இணைத்திருக்கிறார்கள் என்று  சிந்திக்க சிந்திக்க வியப்பாக இருக்கிறது அல்லவா ?



சித்தாப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள் அவர்கள் பெற்றோரை காக்கவில்லை என்றால், நீ அவர்களை காப்பாற்று. சோறும் நீரும் கொடு என்று சட்டம் வகுத்தது.  யார் கண்டது, நாளை உன் பிள்ளை உன்னை காப்பாற்றாமல் கை விடலாம். எங்கு போய் நிற்பாய்?  ஒரு சமுதாய முன்னோடியாக திகழ் என்று விதி செய்தது நம் நாகரீகம்.

கல்யாணம் செய்து கொள்வது ஏதோ இன்பமாக பொழுது போக்க என்று நினைத்ததுக் கொள்ளக் கூடாது. மிக மிக பொறுப்பு வாய்ந்த செயல் அது.

இன்னும் வருகிறது.

6 கடமைகள் சொல்லியாகி விட்டது. இன்னும் ஐந்து இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_5.html

Tuesday, February 4, 2020

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - ஏன் திருமணம் செய்ய வேண்டும் ?


திருமணம் செய்வது  என்னவோ உடல் இன்பத்துக்கும், சம்பாதிக்க ஒருவர், சமைக்க ஒருவர் என்று வைத்துக் கொண்டு நாட்களை ஓட்டவோ அல்ல.  திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பதினோரு கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால் திருமணம் செய்து கொள் என்கிறார் வள்ளுவர்.

அதில் முதல் மூன்று கடமை பற்றி முதல் குறளில் கூறுகிறார்.

பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் = இல்லத்தில் இருந்து வாழ்வான்

என்பான் = எனப்படுபவன்

இயல்பு உடைய = இயற்கையான

மூவர்க்கும் = மூன்று பேருக்கும்

நல்லாற்றின் = நல்ல வழியில்

நின்ற துணை. = துணை நிற்பான்

யார் அந்த மூன்று பேர்? அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? ஏன் உதவி செய்ய வேண்டும் ? நான் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு எதற்கு உதவி செய்டய வேண்டும்?

இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழும் அல்லவா? எப்படி விடை காண்பது?  குறளில் அவ்வளவுதான் இருக்கிறது.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரை இருக்கிறதே, அற்புதம். அந்த உரை இல்லாமல், நம்மால் இந்த குறளை புரிந்து கொள்ளவே முடியாது.

அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யார் அந்த மூன்று பேர்?

தமிழர்கள் வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள்.

பிரம்மச்சரியம்
இல்லறம்
வானப்ரஸ்தம்
துறவறம்

என்ற நாலு நிலைகள்.

இதில் இரண்டாவது நிலை இலவாழ்க்கை. இல்வாழ்வான் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

புரிகிறதா யார் அந்த மூவர் என்று?

பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவன், துறவறம் மேற்கொண்டவன். இந்த மூன்று பேருக்கும் இலவாழ்வான் உதவி செய்ய வேண்டும்.


பிரமச்சாரி என்பவன் திருமணம் முடிப்பதற்கு முந்தைய நிலையில் உள்ளவன். படித்துக் கொண்டு இருப்பவன்.

வானப்ரஸ்தம் என்பது, இல்லற வாழ்வில் இருந்து ஓய்வு பெரும் காலம். குடும்பப் பொறுப்பை மகன்/மகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு தேவைப் படும் போது உதவி செய்து கொண்டு, தினசரி வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது. துறவறம் என்பது வீடு வாசலை துறந்து, கானகம் செல்வது.

மூணு பேர் தெரியுது...அது என்ன இயல்புடைய மூவர்?

அப்படினா, இயற்கையாக அந்த நிலைகளில் உள்ளவர்.

அதாவது, படிக்கும் வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவன். நான் 60 வயது வரையிலும்  கல்யாணம் பண்ணாமல் இருப்பேன் என்று ஒருவன் இருந்தால், அவன்  இயல்பான பிரமச்சாரி அல்ல. அவனுக்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.  அதே போல், கல்யாணம் முடிந்த ஓரிரு வருடங்களில் ஒருவன்  துறவியாகப் போகிறேன் என்று கிளம்பினால் அவன் இயல்பான துறவி  அல்ல. அவர்களைப் போன்றவர்களை விட்டு விட்டு, இயற்கையாக  அந்தந்த  நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி இயல்புடைய மூவர் யார் என்று தெரிகிறது.


இந்த "நல்லாற்றின்" நின்ற துணை என்று சொல்கிறாரே,  அதுக்கு என்ன அர்த்தம்?

ஆறு என்றால் வழி. ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப் படுத்துதல் என்று பொருள்.

நல்லாற்றின் என்றால், நல்ல வழியில் நிற்க துணை புரிய வேண்டும் என்கிறார்.

அதாவது, ஒரு பிரமச்சாரி வந்து, எனக்கு பசிக்கிறது, கொஞ்சம் உணவு தாருங்கள்  என்று கேட்டால், இல்லறத்தில் இருப்பவன் தர வேண்டும். மாறாக,  எனக்கு தண்ணி அடிக்க வேண்டும் போல இருக்கு, கொஞ்சம் பணம் தந்தாள் தாருங்கள் என்று கேட்டால் தர வேண்டாம்.  அது நல்ல வழி அல்ல.

நல்ல வழி என்றால் அவர்கள் அற வழியில் செல்ல உதவ வேண்டும். தவறான வழியில் செல்ல அல்ல. அவரவர்களுக்கு உரிய அற வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள அப்பா/அம்மா/மாமனார்/மாமியார் - வனப்ரஸ்தம் அடைந்தவர்கள்  அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, உடை போன்றவை அளிக்க வேண்டும்.  எனக்கு 4 மணி நேரம் டிவி சீரியல் பார்க்க வேண்டும் என்று   கேட்டால், அதற்கு உதவி செய்ய வேண்டியது  இல்லை. அது நல்லாற்றில் வராது.

சரி, யாரோ ஒரு ஏழை மாணவன் வந்து உதவி  கேட்டான், கொஞ்சம் பணம் கொடுத்தோம்...அவ்வளவுதானே என்றால் இல்லை.

அவன் நல்ல வழியில் செல்ல உதவி செய்ய வேண்டும் என்றால், அவன் தவறான வழியில் போவதை கண்டித்து தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

வீட்டில் வயதில் மூத்தவர்கள் தவறான ஒன்றை செய்வார்கள் என்றால் அதை கண்டித்து நிறுத்தும் அதிகாரம் உதவி செய்யும் இல் வாழ்வானுக்கு உண்டு.

துறவி ஒருவன் பணம் மற்றும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு அவற்றை தவறான வழியில் செலவழிப்பான் என்றால், அதை தடுக்கும் கடமையும் இல் வாழ்வானுக்கு உண்டு.  ஏதோ பணம் கொடுத்தோம், அதற்கப்புறம் எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விடச்சொல்லவில்லை.

சரி, எவ்வளவு உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது வரை முறை இருக்கிறதா?

இருக்கிறது. அவர்கள் நோக்கம் நிறைவேற உதவி செய்ய வேண்டும். படிக்க உதவி கேட்டால், படித்து முடிக்க உதவி செய்ய வேண்டும்.


இது முதல் மூன்று கடமை.

மீதியும் வருகிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_4.html

Sunday, February 2, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியேன் செய்யும் விண்ணப்பமே 


ஞானம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையின் தரிசனமா? ஏதோ பள்ளி, கல்லூரியில் கொஞ்ச நாள் படித்தோம். அப்புறம் கொஞ்சம் புத்தகங்கள் வாசித்து இருப்போம். நம் மொத்த ஞானமும் அதில் இருந்து வந்ததுதான். அனுபவ ஞானம் என்பது மெல்லமாக வருவது. ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது. அதை பெரிதாக கொள்ள முடியாது. நாம் பெற்ற ஞானம் மிக மிக சிறியது. அதை வைத்துக் கொண்டு நாம் ஏதோ பெரிய ஞானி போல் நினைத்துக் கொள்கிறோம்.

அந்த சொற்ப ஞானத்தை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல் பேசுகிறோம், செய்கிறோம். நம்மை விட கொஞ்சம் குறைவாக தெரிந்தவர்களை ஏளனம் செய்கிறோம்.

சரி, நம் ஒழுக்க முறைகளாவது சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் சரி இல்லை. நம் தேவைக்கு ஏற்ப ஒழுக்க முறைகளை மாற்றிக் கொள்கிறோம். கேட்டால் "வாழ்க்கையோடு அனுசரித்துப் போக வேண்டும் " என்று எல்லாவற்றையும் நம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்கிறோம்.

அகத் தூய்மைதான் இல்லை. புறத் தூய்மையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அழுக்கான உடம்பு. வியர்வை சுரந்து கொண்டே இருக்கும் உடல்.

இந்தப் பிறவி மேல் என்ன ஆசை? பொய்யான ஞானம், பொல்லாத ஒழுக்க முறை, அழுக்கான உடம்பு. மீண்டும் பிறந்தாலும் இது தான் கிடைக்கப் போகிறது. இதில் இருந்து விடு பெற முடியாதா?

நம்மாழ்வார் வருந்துகிறார். இந்தப் பிறவியால் என்ன பயன்? இனியும் இது தொடராமல் இருக்க அருள் செய்வாய் என்று பெருமாளை வேண்டுகிறார்.

பாடல்


பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே. (2478)

பொருள்

பொய்ண்ணின்ற = பொய் நின்ற. பொய் நிறைந்த

ஞானமும்  = ஞானமும்

பொல்லா வொழுக்கும் = பொல்லாத ஒழுக்கமும்

அழுக்குடம்பும், = அழுக்கு உடம்பும்

இந்நின்ற = இப்படி இருக்கும்

நீர்மை  = இயல்பு

இனியா முறாமை = இனி அமையாமை உறாமை, இனி அமையாமல்

உயிரளிப்பான் = உயிர்களை அளிப்பவன்

எந்நின்ற யோனியு மாய்ப் = பல பிறப்புகளை கொண்டு

பிறந் தா (ய்) = அவதாரம் செய்தாய்

யிமை யோர்தலைவா = இமையோர் தலைவா, தேவர்களின் தலைவனே

மெய்நின்று கேட்டரு ளாய் = என்னுடைய உண்மையான (விண்ணப்பத்தை) கேட்டு அருளாய்

அடியேன் = அடியேன்

செய்யும் = செய்யும்

விண்ணப்பமே. = விண்ணப்பமே


இது தான் உண்மையான விண்ணப்பம். எனக்கு பணம் கொடு, என் பிள்ளைக்கு நல்ல வேலை வாங்கி கொடு என்பதெல்லாம் எந்த விண்ணப்பத்தில் சேரும்   நாம் யோசித்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post.html